ஆர்மேனியா- அசர்பைஜான் மோதல் முடிவுக்கு வருமா? | தினகரன் வாரமஞ்சரி

ஆர்மேனியா- அசர்பைஜான் மோதல் முடிவுக்கு வருமா?

ஆர்மேனியா அசர்பைஜான் மோதல் போக்கானது பிராந்திய சர்வதேச அரசியலில் முக்கியமான ஒன்றாக கொரனோ அரசியலுக்கு பின்பு ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையானது முன்னாள் சோவியத் யூனியனது பிரிவினையிலிருந்து தொடங்கியதாகும். முன்னாள் சோவியத் யூனியனது அரசியல் வரைபானது இனங்களது சுயநிர்ணயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததுடன் பிரிந்து செல்வதற்கான ஏற்பாடுகளை லெனின் காலத்தில் முதன்மைப்படுத்தியிருந்தது. அதனடிப்படையில் ஒன்று சேர்ந்த சோவியத் குடியரசுகளில் ஒரு இனக்கூறாக அசர்பைஜானிகள் காணப்பட்டனர். 1991இல் ஆர்மேனியர்கள் அசர்பைஜானிலிருந்து பிரிந்து செல்வதாக அறிவித்தனர். இதன்பிற்பாடு ஏற்பட்ட முறுகல் நிலை தொடர்ச்சியான மோதலுக்கு வழிவகுத்தது.  

புவியியல் ரீதியில் ரஷ்யா ஜேரர்ஜியா, ஈரான், துருக்கியை எல்லைகளாகக் கொண்ட இரு நாடுகளும் நகொர்னோ-ஹபக் பிராந்தியத்தை மையப்படுத்திய மோதலில் ஈடுபட்டுவருகின்றன. 1991முதல் 1994வரை இரு நாடுகளுக்குமான முரண்பாட்டை தீர்ப்பதற்கான பேச்சுகளில் ஈடுபட்ட போதும் சுமூகமான நிலை ஏற்படுத்த போர் நிறுத்த உடன்பாடு இரு தரப்புக்கும் இடையில் எட்டப்பட்ட போதும் அதனை முழுமையாக பின்பற்றாத சூழலின் விளைவான அவ்வப்போது மோதல் போக்கு நிலவியது. கடந்த 27.09.2020முதல் அத்தகைய மோதல் பெரும் போராக வெடித்துள்ளது. இதில் ஆசர்பைஜான் ஆர்மேனியரது நடவடிக்கையை விட மோதலுக்கு பின்னால் பிராந்திய அரசுகளும் அதன் புவிசார் அரசியலும் அதிக முக்கியத்துவம் பெறுகின்றதைக் காணமுடிகிறது. இதில் ரஷ்யா துருக்கி மட்டுமன்றி பிரான்ஸ்சும் அதிக செல்வாக்கு பெறும் நிலையைக் காணமுடிகிறது.  

நகொர்னோ-ஹரபாக் பிரிவினர் அசர்பைஜானின் பகுதிக்குள் இருந்த போதும் ஆர்மேனியாவில் இருக்கும் இனங்களில் பெரும்பான்மையினரை சார்ந்தவர்கள். ஆனாலும் ஆர்மேனியன் அரசிலிருந்து விலகியிருக்கவும் தனி அடையாளத்தை பேணவும் விரும்பியதுடன் அதற்கான முயற்சியாக தன்னாட்சி பிரகடனம் ஒன்றினை முன்வைத்திருந்தனர். தற்போது ஆர்மேனியப் படைகள் சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில் இருந்து விலகும் வரை தாம் தொடந்து போர் செய்யப் போவதாக அசர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் அறிவித்துள்ளார். அவர் குறிப்பிடும் போது ஆர்மேனிய படைகள் தமது நிலத்திலிருந்து நிபந்தனை இன்றி முழுமையாக வெளியேற வேண்டும் என்பதே தமது நிபந்தனை எனக்குறிப்பிட்டுள்ளார்.  

அசர்பைஜான் பெரும்பான்மை முஸ்லிம்களைக் கொண்டது. ஆர்மேனியன் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையைக் கொண்டது. அஸர்பைஜானின் நட்பு நாடாக துருக்கி விளங்குகிறது. அவ்வாறே ரஷ்யாவின் நட்பு நாடாகவும் இராணுவ உறவுடைய நாடாகவும் ஆர்மேனியா விளங்குகிறது.இது வரலாற்று ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடத்தில் காணப்படுவதுடன் ஐரோப்பாவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மலைப்பாங்கான பிரதேசம் என்பதுடன் மூலோபாய ரீதியில் முக்கியமான பிரதேசமாக உள்ளது. இப்பகுதி முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் அறிவியல் ரீதியான முக்கியம் பெற்ற பிரதேசமாகவும் அமைந்துள்ளது. 1920களில் இரு பிரதேசமும் சோவியத் யூனியனின் பிராந்தியமாக மாற்றப்பட்டது. நகொர்னோ-ஹரபாக் பிரதேசம் ஆர்மேனியர்களை பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேசமாகக் காணப்பட்டது.

ஆனால் இப்பிரதேசத்தை சோவியத், அசர்பைஜான் கட்டுப்பாட்டுப் பகுதியாக பிரகடனப்படுத்திக் கொண்டது. சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னர் ஆர்மேனியாவுடன் இணைவதற்கான உடன்பாட்டை இப்பிராந்திய பெரும்பான்மையினர் எடுத்துக் கொண்டனர் என வரலாற்றுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.  

இவ்வகை குழப்பம் நிறைந்த சூழலுக்குள் பிராந்திய ரீதியிலும் உலகளாவிய ரீதியிலும் செல்வாக்குடைய ரஷ்யா இரு நாடுகளும் போர்நிறுத்த உடன்பாடு ஒன்றினை எட்டுவதன் மூலம் அமைதிக்கான சூழலை ஏற்படுத்த முனைந்துள்ளது. இதுவரை நுாற்றுக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளனர். அதில் இரு நாட்டுப்படைகளும் பொதுமக்களும் அடங்குவதாக தெரியவருகிறது. ஐக்கிய நாடுகள் சபையும் மனித உரிமை அமைப்பும் மனிதாபிமானச் சட்டங்களை பின்பற்றுமாறும், பொதுமக்களை தாக்காது செயல்படுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளன. இதனை அடுத்தே ரஷ்யா இரு நாட்டு வெளியுறவு அமைச்சுக்களையும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்துள்ளது. இந்த மோதல் குறித்து புட்டினும்- மக்ரோனும் தொலைபேசியில் உரையாடியதுடன் மோதலை நிறுத்துமாறு ரஷ்யா-, பிரான்ஸ் உட்பட வல்லரசு நாடுகள் கோரிகை விடுத்துள்ளன. ஆர்மேனியாவுடன் இராணுவ உறவைக் கொண்டுள்ள ரஷ்யா அந்நாட்டின் பகுதிக்குள் இராணுவ முகாம் ஒன்றையும் பராமரித்துவருகிறது. இதனால்போர் நிறுத்தம் ஒன்றுக்கான தேவைப்பாட்டை அதிகம் கொண்டுள்ள ரஷ்யா இப்பிராந்திய மோதலை தடுக்க வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது.  

பிரான்ஸ்ஸைப் பொறுத்தவரை அந்நாட்டில் அதிக ஆர்மேனியர்கள் வாழ்வதனால் அதிக தலையீட்டை பிரான்ஸ் மேற்கொள்ள முனைகிறது.

அது மட்டுமன்றி பிரான்ஸ் ஒருநேட்டோ நாடு என்பதனால் அதற்கான வாய்ப்புக்களையும் இப்பிராந்தியத்தில் ஏற்படுத்த முனைகிறது. குறிப்பாக சோவியத் யூனியனின் குடியரசுகளுக்குள் ஏற்கனவே முன்னெடுத்த நோட்டோவின் நகர்வுகள் தோல்வியடைந்தமையால் தற்போது எழுந்துள்ள மோதலை பயன்படுத்தி ஒரு நுழைவைச் சாத்தியப்படுத்த பிரான்ஸ் முனைகிறதைக் காணமுடிகிறது. அதே நேரம் நேட்டோவின் இன்னொரு நாடான துருக்கி அத்தகைய பிரான்ஸின் நகர்வை தடுப்பதுடன் அது தற்போது ரஷ்ய நட்பு நாடாகவும் விளங்குகிறது. அதாவது அசர்பைஜான் மீதான ஆர்மேனியாவின் ஆக்கிரமிப்புக்கு பிரான்ஸ் உதவுவதாக துருக்கிய வெளியுறவு அமைச்சர் மவ்லுத் கவுசொக்லு குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இதனால் இரு நாடுகளும் தமக்குள் மோதிக் கொள்வதுடன் அண்மைக்காலமாக நோட்டோவிலிருந்து கொண்டு துருக்கி அதிக முரண்பாடுகளை நோட்டோ நாடுகளுடன் ஏற்படுத்தி வருகிறது. காரணம் நேட்டோ நாடுகளில் ஒன்றான அமெரிக்காவுக்கும் துருக்கிக்கும் இடையில் ஏற்பட்ட ஆயுத விநியோகம் தொடர்பான இழுபறியே ஆரம்பநிலைக் காரணமாக அமைந்திருந்தது. அச்சந்தர்ப்பத்தில் ரஷ்யாவின் நகர்வுகளும் துருக்கிக்கு வாய்ப்பானதாக அமைந்திருந்ததனால் இரு நாடுகளும் இராணுவ ரீதியில் நட்புடைய நாடுகளாக மாறிக் கொண்டன. இதன் பிரதிபலிப்பே துருக்கி- ரஷ்ய நெருக்கமாகும். துருக்கி தனது எதிரி நாடுகளிலிருந்து தன்னைத் தக்கவைத்துக் கொள்ள அத்தகைய ஆயுத தளபாடம் அவசியம் எனக்கருதியே அமெரிக்காவிடம் கோரியபோதும் அமெரிக்கா தனது தயாரிப்பான எப்-16விமானங்களை வழங்க மறுத்திருந்தமையே முரண்பாடு பெரிதாவதற்கு பிரதான காரணமாகும்  

தற்போது அசர்பைஜான் -ஆர்மேனிய மோதலில் துருக்கி ரஷ்யா என்பன எதிரெதிர் தரப்பில் காணப்படுகின்ற நிலை எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தும் குழப்பமாகவே தெரிகிறது. ஆனால் மேற்காசியாவின் நெருக்கத்தைக் கொண்டுள்ள ரஷ்யா ஒரு போதும் துருக்கியுடன் மோதுவதற்கோ முரண்படுவதற்கோ தயாராகாது. அவ்வாறு செயல்படுவதென்பது நேட்டோவுடனோ அல்லது அமெரிக்காவுடனோ துருக்கியை மீண்டும் இணைப்பதாகவே அமைந்துவிடும். அதனால் ரஷ்யா போர்நிறுத்தத்தை ஏற்படுத்தி இந்த விடயத்தை சுமூகமாக்கவே அதிகம் முனையும். அதுவே ரஷ்யாவுக்கும் பாதுகாப்பு, துருக்கிக்கும் இலாபகரமானதாக அமையும்.  

எனவே ரஷ்யாவின் தலையீட்டுக்கு பின்பு சுமூகமான முடிவை நோக்கி ஆர்மேனிய -ஆசர்பைஜான் மோதல் மாறும் என்ற எதிர்பார்க்ைக எழுந்துள்ளது.  

கலாநிதி கே.ரீ. கணேசலிங்கம்   

Comments