கலிடோனியாவின் நிராகரிக்கப்பட்ட தனிநாட்டுக் கோரிக்கை | தினகரன் வாரமஞ்சரி

கலிடோனியாவின் நிராகரிக்கப்பட்ட தனிநாட்டுக் கோரிக்கை

இருபத்தியோராம் நூற்றாண்டிலும் நேரடி காலனித்துவ முறைமையை உலகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. அது மட்டுமன்றி அத்தகைய குடியேற்ற முறையை உலகில் குடியேற்றத்திற்குள் அகப்பட்டுள்ள மக்கள் கூட்டமே வரவேற்கும் பதிவு ஒன்று தென் பசுபிக் பிராந்தியத்தில் நிலவுகிறது. பிரான்ஸின் காலனித்துவத்திற்குள் கடந்த 170 வருடங்களாக காணப்படும் நிலப்பகுதியான கலிடோனியா பிரான்ஸில் இருந்து தனிநாடாக சுதந்திரம் பெறும் இரண்டாவது முயற்சியிலும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரையும் கலிடோனியாவின் சுதந்திரப்பிரகடனம் அந்த தேசத்து மக்களால் நிராகரிக்கப்பட்டமையையும் அதன் விளைவுகள் பிற தேசங்களுக்கு எப்படியானது என்பதையும் தேடுவதாக அமையவுள்ளது.
 
தென்பசுபிக் பிராந்தியத்தில் அவுஸ்திரேலியாவுக்கு அண்மையில் அமைந்துள்ள பிரான்ஸின் கட்டுப்பாட்டு பிரதேசமே கலிடோனியாவாகும். 1853 இல் பிரான்ஸின் குடியேற்றமான இப்பிரதேசம் அவுஸ்ரேலியாவின் நிலப்பரப்பிலிருந்து1500 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தீவாகும். பிரான்ஸிலிருந்து 18 ஆயிரம் கி.மீ. தொலைவிலுள்ளதாகும். இதில் தற்போது இரண்டு இலட்சத்து எழுபதாயிரம் மக்கள் காணப்படுகிறனர். அத்தீவில் பழங்குடியினராக கனக் இனத்தவர்கள் 40 சதவீதமும் ஐரோப்பியர் மற்றும் தென்னாசியர்களின் குடியேற்றவாசிகளும் பிரான்ஸ், இந்தோனேசிய குடியேற்றகால ஒப்பந்தம் மூலம் குடியேறிய ஊழியர்களும் மீதமுள்ள 60 சதவீதத்தை நிரப்புகின்றனர்.
 
1988 இல் அங்கு நிகழ்ந்த பயணக்கைதிகள் தொடர்பான மோதலில் 20 பேர் கொல்லப்பட்டதை அடுத்து கனக் பழங்குடியினருக்கும் பிரான்ஸ் குடியேற்ற நாட்டுக்கும் இடையில் உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. அதன்படி கலிடோனியா பிரிந்து செல்வதற்கான வாக்கெடுப்பு மூன்று தடவை நடாத்தப்படுவதென உடன்பாடு எட்டப்பட்டது. அதன் பிரகாரம் 2018 இல் நடைபெற்ற வாக்கெடுப்பில் 53 சதவீதமான வாக்களிப்பு நிகழ்ந்த போதும் அதில் 70 சதவீதமானவர்கள் பிரிந்து செல்வதற்கு எதிராக வாக்களித்திருந்தனர். கடந்த 06.10.2020 அன்று நடைபெற்ற வாககெடுப்பில் 85 சதவீதமானவர்கள் வாக்களித்த போதும் பிரிவினைக்கு ஆதரவாக 46.7 சதவீத வாக்குகளே பதிவாகியிருந்தன. இரண்டாவது தடவையும் பிரிந்து செல்வதற்கான சந்தர்ப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
 
இது பற்றி பிரான்ஸ் பிரதமர் குறிப்பிடும்போது கலிடோனியா இல்லாத பிரான்ஸின் அழகு முழுமை பெறாது என்றார். வாக்காளர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். கலிடோனியா பிரான்ஸின் ஒரு பகுதியாக வேண்டும் என்ற விருப்பினை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். குடியரசின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை நாம் வணங்குகிறோம் எனத் தெரிவித்தார். ஆனால் பிரிந்து செல்லும் கோரிக்கையை முதன்மைப்படுத்தும் பழங்குடி இனத்தவரின் கலிடோனிய காங்கிரஸ் கட்சியின் பேச்சாளரும் மூத்த உறுப்பினருமான ரோச்வாமிட் குறிப்பிடும் போது மீண்டும் வெல்வோம் வெற்றி பெறுவதற்கான வழியைக் கண்டுபிடிப்போம். எனத் தெரிவித்தார். அரசியல் கட்சிகள் வேறுபட்டிருந்தாலும் தனிநாட்டுக்கான கோரிக்கையிலும் அதன் மீதான நடவடிக்கைகளிலும் ஒன்றாகவே சேர்ந்து பயணிக்கின்றனர்.
 
இது அரசியல் மூலோபாய ரீதியில் பிரான்ஸூக்கு முக்கியம் வாய்ந்த பிரதேசமாகும். அது மட்டுமன்றி பொருளாதார ரீதியிலும் மின்னணு மற்றும் இரும்புத்தாது தொடர்பில் அதிக வளமுடைய பிரதேசமாகக் காணப்படுகிறது. அத்துடன் பசுபிக் கடலுடன் இணைந்திருக்கும் பிரான்ஸின் குடியேற்றங்களுக்கு அதிக வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடிய பிரதேசத்தில் அமைந்துள்ளது. எனவே தான் பிரான்ஸ் இக்குடியேற்றத்தை கைவிட விரும்பவில்லை. அரசியல் பொருளாதார ரீதியில் மட்டுமல்ல இராணுவ ரீதியிலும் வாய்ப்பான அமைவிடத்தில் அமைந்திருப்பதுடன் பசுபிக் சமுத்திரத்தை மையப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
 
பிரிந்து செல்ல முடியும் என்ற சுயநிர்ணயக் கோட்பாட்டின் விதிக்கு அமைவாக செயல்படும் பிரான்ஸ் அந்த குடியேற்றத்தை இழக்காத வகையிலும் பார்த்துக்கொள்ள முனைகிறது. குறிப்பாக சுதந்திர தனிநாட்டுக் ேகாரிக்கையை முன்வைத்துள்ள பழங்குடிகளான கனக் இனத்தவர் குடியேற்றவாசிகளுடன் ஒப்பிடும் போது சிறுபான்மையினராகவே காணப்படுகின்றனர். அதனாலேயே பிரிந்து செல்வதற்கான வாக்கெடுப்பில் சுதேசிகள் அதிக நெருக்கடியை எதிர்நோக்குகின்றனர். பிரான்ஸ் அதிகளவான நிதி உதவிகளையும் சலுகைகளையும் குடியேற்றக்காரருக்கு வழங்கிவருவதுடன் பொருளாதார ரீதியில் அவர்கள் வலுவான பிரிவினராக உள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
 
அதுமட்டுமன்றி பிரான்ஸ் உடனான உறவானது குடியேற்றவாசிகளுக்கு மட்டுமன்றி சுதேசிகளது அரசியல் இருப்பிலும் அதிக பாதுகாப்பானதாக அமைந்துள்ளது. பிரான்ஸ் ஒரு பாரிய ஐரோப்பிய வல்லரசாக அமைவதுடன் பொது நோக்கில் பொருளாதார இராணுவ வல்லமையுடைய நாடாகவும் விளங்குகிறது. அதனால் அதன் இருப்பினை பாதுகாக்கும் விதத்தில் அதன் வலுவும் பொருளாதார உறுதிப்பாடும் காணப்படுகிது.
 
அவற்றுடன் கலப்பு பாரம்பரியத்தை உடைய மக்கள் தொகை அதிகமாக ஏனைய இனங்களில் காணப்படுவதனால் பிரிந்து செல்வதற்கான வாய்ப்பினை நிராகரிக்க முயலுகின்ற போக்கு அதிகமாகக் காணப்படுகிறது. மேலும் கனக் இனத்தவரது கொள்கைகளில் காணப்படும் பிற இனத்தவர் தொடர்பிலான அங்கீகாரம் குறைந்திருப்பதுவும் பிரதான குறைபாடாக தெரிகிறது. அதனால் அத்தகைய இனப்பிரிவுகள் தமது பாதுகாப்பினைப் பொறுத்து அச்சம் கொள்வதுவும் அத்தகைய அச்சத்தை நீக்கும் பொறிமுறை எதுவும் இல்லாமையும் வாக்கெடுப்பு தோல்விக்கான காரணமாகக் கொள்ளப்படுகிறது.
 
இதனை விட கனக் இனத்தவரின் பிரசாரம் போதாமையும் அனைத்து மக்கள் பிரிவினரையும் பிரசாரம் செல்லாமையும் தோல்விக்கான காரணம் என கூறப்படுகிறது. குறிப்பாக பிரிவினைக்கான சரியான நியாயப்பாட்டினை அந்த அந்த பிரிவு மக்களுக்கு தெளிவுபடுத்தாமையும் அந்த மக்கள் பிரான்ஸின் காலனித்துவ ஆட்சியை நிராகரிக்கக்கூடிய பொறிமுறைகளை முதன்மைப்படுத்தாமையும் பிரிவினை தோற்றுப் போனமைக்கான வலுவான காரணம் எனக்கூறப்படுகிறது.
 
ஆனால் அண்மைக்காலமாக கனடாவிலும் ஸ்பெயினிலும் பிரிட்டனிலும் இத்தகைய வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு அதிக நெருக்கடியை சந்தித்துள்ளது. அதே நேரம் சில நாடுகளில் பொருளாதார வாய்ப்புக்களுக்காகவும் அரசியல் முக்கியத்துவத்திற்காகவும் பிரிவினையை நிராகரிக்கும் போக்கொன்று நிலவுகிறது. குறிப்பாக கனடாவில் கீயூபெக் மாநிலத்தவர் கனடாவுடன் சேர்ந்து இருக்க முயலும் போக்கொன்றினைக் காணமுடிகிறது. அங்கும் நிகழ்ந்த வாக்கெடுப்பு மூன்றிலும் பிரிவினைவாதிகள் தோற்றுப் போயுள்ளனர். இதற்கு கனடாவின் சமஷ்டி முறைமையே பிரதான காரணம் எனவும் வாதிடுபவர்கள் உண்டு. காரணம் அந்த மக்கள் அனைத்து சலுகைகளையும் வாய்ப்புக்களையும் அனுபவிக்கும் சட்டரீதியானதும் நடைமுறை ரீதியானதுமான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதனால் பிரிவினையை அந்த மக்கள் நிராகரிக்கின்றனர். ஆனால் அதனுடன் கலிடோனியாவை ஒப்பிட முடியாது.
 
கலிடோனியா குடியேற்ற நாடு மட்டுமன்றி பூர்வீக மக்களைவிட குடியேற்றவாசிகள் அதிகமாக இருப்பதனால் அத்தகைய வாக்கொடுப்புக்கள் அனைத்தும் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட வாய்ப்புள்ளது. குடியேற்ற நடைமுறையுள்ள பிரதேசங்கள் அனைத்திலும் அத்தகைய நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.
 
எனவே கலிடோனியாவின் வாக்கெடுப்பு வழமையானதாகப் பார்க்கப்பட்டாலும் நடைமுறை ரீதியில் குடியேற்றமும் குடியேற்றவாசிகளும் அந்த நாட்டின் சுதந்திரத்தை தீர்மானிக்கும் சக்தி பெற்றுவிட்டதாகத் தெரிகிறது.
 
கலாநிதி கே.ரீ. கணேசலிங்கம்

Comments