ஒத்துழைத்தால் முடக்கப்பட்ட பகுதிகள் விரைவில் வழமைக்கு | தினகரன் வாரமஞ்சரி

ஒத்துழைத்தால் முடக்கப்பட்ட பகுதிகள் விரைவில் வழமைக்கு

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் தொடர்ந்தும் கட்டுப்பாடுகளுக்கமைய செயற்பட்டால் விரைவில் அந்த பகுதிகளை வழமைக்கு கொண்டுவர முடியும் என்று பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர் மேலும் கூறியதாவது,

கொழும்பு , கம்பஹா மாவட்டங்களில் 24 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் உள்ள மக்கள் தற்போது தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கமைய செயற்பட்டு வருவதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.

அந்த பகுதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுபாட்டுக்கும் இவர்கள் கட்டுப்பட்டு செயற்பட்டு வருகின்றனர். தொடர்ந்தும் இவ்வாறு செயற்பட்டால் அந்த பகுதிகளையும் வழமைக்கு கொண்டுவரமுடியும்.

சமூக இடைவெளி பேணாமை மற்றும் முகக்கவசம் அணியாமை தொடர்பில் நேற்று மாத்திரம் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 392 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்தும் இது தொடர்பான சுற்றுவளைப்புகள் இடம்பெற்று வருவதுடன், அனைவரும் இந்த ஒழுக்க விதிகளை கடைப்பிடித்து செயற்பட வேண்டியது கட்டாயமாகும்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Comments