நோயின் நிலை, கள முன்னேற்றம் என்பன ஆராயப்பட்ட பின் தனிமைப்படுத்தல் பிரதேசங்களின் நிலை குறித்து மீளாய்வு இன்று அல்லது நாளை | தினகரன் வாரமஞ்சரி

நோயின் நிலை, கள முன்னேற்றம் என்பன ஆராயப்பட்ட பின் தனிமைப்படுத்தல் பிரதேசங்களின் நிலை குறித்து மீளாய்வு இன்று அல்லது நாளை

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான ஜனாதிபதி செயலணி கூடியே தற்போதைய நிலவரங்கள் தொடர்பில் மீளாய்வு செய்து வருகிறது. அதனால் தினந்தோறும் மரணமடையும் ஒவ்வொருவர் தொடர்பிலும் ஜனாதிபதி மட்டுமின்றி துறைசார்ந்த அனைவருமே கவனம் செலுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பான மீளாய்வின் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் தீர்மானிப்போம்.இதுவரை நாம் மேற்கொண்டுள்ள மீளாய்வுக்கிணங்க அடுத்த வாரத்தில் நாம் எந்தப் பிரதேசங்களை திறக்க வேண்டும்? எந்த பிரதேசங்களை தனிமைப்படுத்தலுக்காக மூடவேண்டும்? என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும். இது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியிடப்படுமென இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

அடுத்த வாரத்தில் மிகத் தேவையென்றால் மாத்திரமே சில போலிஸ் நிர்வாகப் பிரிவுகளைக் மூடுவதற்கு அல்லது கிராம சேவகர் பிரிவில் அல்லது அதனை விட குறைந்த பிரதேசங்களில் தனிமைப்படுத்தலுக்கான முடக்கத்தை மேற்கொண்டு ஏனைய பிரதேசங்களை திறந்து விடுவதற்கு தீர்மானித்துள்ளோம்.

அது தொடர்பில் இன்றைய தினம் எம்மால் தீர்மானிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். 

தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இக்கருத்துக்களை தெரிவித்தார். 

தற்போதைய நிலையில் பல்வேறு பகுதிகளிலும் மரணங்கள் இடம்பெறுகின்றன. இந் நிலையில் மீண்டும் பிரதேசங்களை தனிமைப்படுத்தலுக்காக முடக்கும் தீர்மானம் உள்ளதா? என செய்தியாளர் அவரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

கொழும்பு மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளை தனிமைப்படுத்தும் செயற்பாடு திங்கட்கிழமை (30) முடிவடைகிறது எனத் தெரிவித்த அவர், தனிமைப்படுத்தலைத் தொடர வேண்டுமா அல்லது அதை அகற்றுவதா என்பது குறித்து கள நிலைமையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்றார்.  இலங்கையில் தொற்று நோயின் நிலை மற்றும் கள முன்னேற்றம் என்பன தினசரி அடிப்படையில் ஆய்வு செய்யப்படுகின்றன என்றார். 

முழு பொலிஸ் பிரிவுக்கு மாறாக சில பகுதிகளை மட்டுமே தனிமைப்படுத்தலைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியத்தை கருத்தில் கொள்வதிலேயே அதிகாரிகளின் முக்கிய கவனமுள்ளதாகவும் அவர் கூறினார். 

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் குறைந்தது 18 பொலிஸ் பிரிவுகளும் நாட்டின் பிற பிரதேசங்களில் 11 கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. 

நாளை காலையின் பின்னர் கொரோனா அவதானம் உள்ள பகுதிகளில் முன்னெடுக்கவுள்ள எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இன்று மாலை அல்லது நாளை காலை நாட்டிற்கு அறிவிக்கவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் வாரம் முதல் முடிந்தளவில் தேவையான பிரதேசங்களை மாத்திரம் தனிமைப்படுத்துவதாகவும் அது ஒரு வீதியாகவோ, தொடர்மாடியாகவே அல்லது ஊரின் ஒரு பகுதியாவோ இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

கொரோனா தொற்றாளர் 272 இனங்காணப்பட்டாலும் அவர்கள் உள்ள பகுதிகளை கண்டறிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

லோரன்ஸ் செல்வநாயகம் 

Comments