தரம் ஐந்து வெட்டுப்புள்ளி விவகாரம்; எந்த மாற்றமும் செய்யப்படவில்லை | தினகரன் வாரமஞ்சரி

தரம் ஐந்து வெட்டுப்புள்ளி விவகாரம்; எந்த மாற்றமும் செய்யப்படவில்லை

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்கள் பெற்றுக் கொண்ட வெட்டுப்புள்ளிகளின் பிரகாரம் மாணவர்களை பாடசாலைகளுக்குச் சேர்க்கும் முறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லையென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், ஒவ்வொரு பாடசாலைகளிலும் அனுமதிக்கப்பட வேண்டிய மாணவர்களின் எண்ணிக்கையிலும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லையென்றும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அண்மைய நாட்களில் பெற்றோர் கல்வி அமைச்சின் முன்பாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதை அரசாங்கம் கவனத்தில் எடுத்துள்ளது. மாணவர்களுக்கு எவ்வித அநீதியும் செய்ய அனுமதிக்கப்படமாட்டாது.

புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், 2017 முதல் 2021 வரையிலான ஐந்தாண்டுகளில் பாடசாலைகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையில் சிறிதும் மாற்றமில்லை.

பாடசாலைகளில் வகுப்புகளின் எண்ணிக்கையையோ அல்லது ஒரு வகுப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையையோ குறைக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆண்கள், பெண்கள் மற்றும் கலவன் பாடசாலைகளில் தரம் 01 முதல் தரம் 13 வரை எந்த மாற்றமும் செய்யப்படாது.

இது தொடர்பான அனைத்து தகவல்களையும் அமைச்சின் வலைத்தளமான  www.moe.gov.lk இலிருந்து பெறலாம். பெப்ரவரி 15ஆம் திகதி முதல் ஒரு மாதத்திற்குள் மேல்முறையீடுகளை தாக்கல் செய்ய முடியுமென்றும் அவர் கூறினார்.

Comments