கொழும்பு துறைமுகத்தின் எதிர்கால நோக்கு; விற்பனையா? முதலீடா? | தினகரன் வாரமஞ்சரி

கொழும்பு துறைமுகத்தின் எதிர்கால நோக்கு; விற்பனையா? முதலீடா?

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்குவது, தேசிய பாதுகாப்புக்கோ அல்லது துறைமுகத்தின் உரிமை சார் விடயங்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது. மாறாக தேசிய பொருளாதாரத்திற்கும் கொழும்பு துறைமுகம் எதிர்காலத்தில் எதிர்கொள்ள நேரும் அச்சுறுத்தல்களுக்கு வெற்றிகரமாக முகம் கொடுப்பதற்கும் அது வழிவகுக்குமென துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.  
கொழும்பில் நடைபெற்ற கிழக்கு முனையம் சார்ந்த கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றில் துறை சார்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்கள்,

கொரோனா வைரஸ் சூழ்நிலையில் பின்தங்கியுள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுப்பது மிக அவசியமாகும். அந்த வகையில் கிழக்கு முனையத்தையோ அல்லது மேற்கு முனையத்தையோ முதலீட்டாளர்களுக்கு வழங்குவது சிறந்தது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.  

கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் நாட்டின் எதிர்காலத்திற்கு அதனூடான பங்களிப்பு துறைமுக கிழக்கு முனைய முதலீடுகள் எவ்வாறு அமைய வேண்டுமென்பது தொடர்பில் விரிவான கருத்தரங்கொன்று கொழும்பில் நடைபெற்றது.  
‘கொழும்பு துறைமுகம் எதிர்கால நோக்கு. விற்பனையா? – முதலீடா?’ என்ற தொனிப்பொருளில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்இந்த விசேட கருத்தரங்கு நடைபெற்றது.   துறை சார்ந்த நிபுணர்களான நாலக கொடஹேவா,
ரொஹான் மககோரள, அசங்க அபேகுணவர்தன ஆகியோர் கருத்துப் பரிமாறல்களை மேற்கொண்டனர்.  

ஊடகவியலாளர்கள் பங்கு பற்றிய இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர்கள் பதிலளித்தனர்.  

கொழும்பு துறைமுகத்தின் முகாமைத்துவம் அரசாங்கத்திடமும் அதன் கீழ் வரும் முனையங்களின் செயற்பாடுகள் முதலீட்டாளர்களிடமும் இருக்க வேண்டும். அது நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பாவதுடன் எதிர்காலத்தில் கிழக்கு முனையம் எதிர்கொள்ள நேரும் அச்சுறுத்தலிலிருந்து அதனை பாதுகாப்பதற்கும் வழிவகுக்கும் என்பதே அவர்களது கருத்தாக அமைந்தது.  

தற்போதைய அரசாங்கம் தமது கொள்கையிலிருந்து ஒருபோதும் விலகாது. அந்தவகையில் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.  

துறைமுகத்தின் ஒரு முனையம் கண்டிப்பாக அரசாங்கத்திடமே இருக்க வேண்டும்.அதேவேளை, நாட்டின் பொருளாதாரத்தை கவனத்திற்கொண்டு ஏனைய முனையங்கள் முதலீட்டாளர்களிடம் வழங்கப்பட வேண்டும். துறைமுக முனையங்கள் விடயத்திலும் மகாவலி திட்டம் போன்ற சிறந்த நிலையான கொள்கை அவசியம்.  
அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் அதற்கான நிலையான கொள்கை ஒன்றை கொண்டிருக்காமல் அரசாங்கம் மாறுபடும்போது அரசியல் நோக்கங்களுக்காக கொள்கைகளிலும் செயற்பாடுகளிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்ட தாலேயே துறைமுகங்கள் பொருளாதார ரீதியாக பின்னடைவைக் கண்டுள்ளன.  

இனிமேலாவது அதற்கான சிறந்த நிலையான கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டு அதன் கீழ் அதனை முன்னேற்றி நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பை பெற்றுக்கொள்வது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.    எமக்கு கிடைத்த வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் கைநழுவ விடப்பட்டதால் நாடு தொடர்ச்சியாக இழப்புகளை சந்தித்துள்ளது.    முதலில் கிழக்கு முனைய பிரச்சினை அரசியல் பிரச்சினையல்ல. அது வர்த்தக ரீதியான நாட்டின் பொருளாதாரம் சம்பந்தமான பிரச்சினை என்பதை முதலில் உணர வேண்டும். குறுகிய நோக்கங்கள் இதில் இருக்கக் கூடாது. ஏற்கனவே ஜப்பானின் நிறுவனங்கள் கைவிட்டுப் போயுள்ளன.    அதுபோன்ற பல வாய்ப்புகள் சந்தர்ப்பங்களை நாம் கைநழுவ விட்டுள்ளோம். இனியும் வருகின்ற வாய்ப்புகளை கை நழுவ விட்டால் நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.   கிழக்கு முனைய விவகாரம் தொடர்பில் எதிர்ப்பை வெளியிடுபவர்கள் அது தொடர்பில் சிந்தித்து செயல்படுவது நல்லது.    நாம் எதை செய்தாலும் நாட்டின் நலனையும் முன்னேற்றத்தையும் கருத்திற்கொண்டு செயற்படுவது முக்கியமாகுமென்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.(ஸ)  

லோரன்ஸ் செல்வநாயகம் 

Comments