பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரம் | தினகரன் வாரமஞ்சரி

பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரம்

 

பாகிஸ்தான் அணியில் அண்மைக்காலமாக சிறப்பாகப் பந்து வீசி வரும் ஹசன் அலி அண்மையில் முடிவுற்ற இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் இலங்கை அணியின் தோல்விக்கு வித்திட்டவர் இவர். இதனால் இவர் இத்தொடரின் நாயகனாகவும் தெரிவானார்.

இலங்கை அணி 5-0 என்ற ரீதியில் தோல்வியடைந்த இத் தொடரில் ஹஸன் அலி மொத்தமாக 14 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் பாகிஸ்தான் சார்பாக அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையை 24 போட்டிகளில் இவர் நிகழ்தியுள்ளார். இவர் இதுவரை 27 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 56 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

இவ்வருடம் 18 போட்டிகளில் விளையாடியுள்ள 23 வயதான ஹசன் அலி 45 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இது இவ்வருடம் ஒரு பந்து வீச்சாளர் ஒருநாள் போட்டிகளில் இதுவரை பெற்ற கூடிய விக்கெட் எண்ணிக்கையாகும். அதன் காரணமாக இக்குறுகிய காலத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலின் ஒருநாள் தர வரிசைப்பட்டியில் முதலிடத்தையும் இவர் பெற்றுள்ளார். இது பற்றி ஹசன் அலி குறிப்பிடுகையில் தனது சிறு வயதிலிருந்த பல கனவுகளில் முதன்மையானது சிறந்த கிரிக்கெட் வீரராக வரவேண்டும் என்பதேயாகும். எனவே அந்தக் கனவு தற்போது நிறைவேறியுள்ளமை மிக்க மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் குஜரன்வாலாவில் பிறந்த 23 வயதான ஹசன் அலி கிரிக்கெட் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் அப்பிராந்தியத்தில் கபடி, மற்றும் மல்யுத்த விளையாட்டே பிரபல்யமாக இருந்தது. இப்படியான ஒரு சூழ்நிலையில் இவரின் கிரி்க்கெட் ஆர்வத்தை அறிந்த இவரது மூத்த சகோதரர் அதார் ரஹ்மான் வீட்டு வளவிலேயே கிரிக்கெட் விளையாடுவதற்கான சகல வசதிகளையும் செய்துகொடுத்து உதவியதாக ஹசன்அலி தற்போது நினைவுகூர்கிறார்.

மேலும் முன்னாள் சிம்பாப்வே வீரரும் இங்கிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளருமான அன்டி ப்ளவர், முன்னாள் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து விச்சாளர் மொஹம்மட் அக்ரம் ஆகியோரின் பங்களிப்பும் தன் கிரிக்கெட் முன்னேற்றத்துக்கு உதவியதாக ஹசன் அலி நன்றியுணர்வோடு கூறினார்.

எனது கிரிக்கெட் வாழ்க்கையில் கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற சம்பியன் கிண்ணம் கைப்பற்றியதை மறக்கவே முடியாது. அதே போல் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்தையும் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் உள்ளதைப் போல் அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கக் கிடைத்தால் மிக்க மகிழ்ச்சியடைவேன் என்றும் ஹசன் அலி குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், பயிற்சியாளருமான வகார் யுனுஸ் ஹசன் அலி பற்றிக் கூறும் போது- இவர் பாகிஸ்தான் அணிக்குக் கிடைத்த மிகச் சிறந்த வேகப்பந்து விச்சாளராவார். இவரின் சேவையை நீண்டகாலம் பெற்றுக் கொள்ள வேண்டுமானால் போட்டிகளின் போது இவர் மீது மட்டும் அதிக அழுத்தங்களைப் பிரயோகிக்கக் கூடாது என்றும் இவரின் பொருளாதாரத் தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

வகார் யூனிஸ் இவைகளைப் கூறுவதற்கு முக்கிய காரணம் மொஹம்மட் ஆமீர் போன்ற சிறந்த வீரர்கள் இலகுவாக சூதாட்டக் காரர்களிடம் சிக்கியதாலாகும்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்களான இம்ரான்கான், வஸீம் அக்ரம், வகார் யுனூஸ், சொஹைப் அக்தர், ஆகீப் ஜாவேட் போன்ற வேகப்பந்துவீச்சாளர்களின் பின் கிடைத்துள்ள வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி எதிரணி வீரர்களுக்கு அச்சுறுத்தலாக பந்து வீசி வருகிறார். இவர் ஒரு ஓவரில் வீசும் 6 பந்துகளும் வேறுபட்டவை எனவே எதிரணி வீரர்கள் இவரின் பந்து வீசசில் திணறுகிறார்கள்.

முக்கியமாக அண்மைக்காலமாக பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சுப் பயிற்சியாளராக இருந்துவரும் அசார் மஹ்மூதும் அவ்வணியின் வேகப்பந்து வீச்சின் முன்னேற்றத்துக்கு முக்கிய பங்காற்றியுள்ளார் என்பதையும் நாம் மறுத்தலாகாது.

 

எம். எஸ். எம். ஹில்மி 

Comments