முத்த விளையாட்டு | தினகரன் வாரமஞ்சரி

முத்த விளையாட்டு

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்து முடிந்த மகளிர் உலகக் கிண்ண கால்பந்து போட்டி மகளிர் விளையாட்டுக்கு முன்னர் காணாத பெருமையைத் தேடித் தந்தது. போட்டியை பார்க்க அதிக ரசிகர்கள் அரங்கில் திரண்டார்கள். தொலைக்காட்சி ரசிகர்களும் அதிகரித்தார்கள். முன்னரை விடவும் பணம் கொட்டியது.

அதற்கு ஏற்பவே கடந்த ஓகஸ்ட் 20 ஆம் திகதி நடந்த இறுதிப் போட்டியும் ஆடவர் கால்பந்துக்கு நிகராக பரபரப்பாக இருந்தது. இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் ஆடிய இறுதிப் போட்டியில் ஸ்பெயின் 1–0 என கிண்ணத்தைக் கைப்பற்றியபோது கொண்டாட்டம் உச்சத்தை தொட்டது.

ஆனால் ஸ்பெயின் கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் லுவிஸ் ருபியல்ஸின் கொண்டாட்டம்தான் அட்டகாசமாக இருந்தது. ஆனால், அதனை சாதாரணமான கொண்டாட்டமாக பார்க்க முடியாது.

மகளிர் உலகக் கிண்ணப் போட்டியின் அந்தஸ்த்தை சில நிமிடங்களில் குறைப்பதாகக் கூட எடுத்துக் கொள்ளலாம்.

ஸ்பெயின் உலகக் கிண்ணத்தில் வெற்றி பெற்ற உடன் அரங்கில் இருந்த ருபியல்ஸ் தனது மர்ம உறுப்பை பிடித்தபடி ஆட்டம்போட்டதோடு பின்னர் ஒரு ஸ்பெயின் வீராங்கனையை தோள்பட்டையில் சுமந்து சென்றார்.

இத்தோடு நிற்காத அவர் பரிசளிப்பு நிகழ்வில் ஸ்பெயின் வீராங்கனைகளை இஷ்டத்திற்கு கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததோடு ஜென்னி ஹெர்மோசோவுக்கு கொடுத்த முத்தம்தான் உச்சம். பதக்கம் பெற வந்த அவரின் தலையை இறுக்கப்பிடித்த ருபியல்ஸ் நேராக உதட்டில் முத்தம் கொடுத்தார்.

உண்மையில் அவரது நடத்தை இயல்புக்கு மிஞ்சியது மாத்திரமல்ல, பெண்களின் விளையாட்டையே கேவலப்படுத்துவதாக இருந்தது. எனவே, அவர் மீது எதிர்ப்பு கிளம்பியதில் ஆச்சரியம் இல்லை.

இந்த முத்தம் இப்போது ஸ்பெயினில் விளையாட்டுக்கு அப்பால் அரசியல், சமூகப் பிரச்சினையாக மாறிவிட்டது. முத்தத்தை பெற்ற ஹெர்மோசோவும் அதனைத் தான் விரும்பவில்லை என்று கூறிவிட்டார்.

ஸ்பெயின் அணியின் முகாமையாளர் தவிர்த்து ஒட்டுமொத்த பயிற்சிக் குழுவும் பதவி விலகிவிட்டது. ஸ்பெயின் கால்பந்து சம்மேளனத் தலைவராக ருபியல்ஸ் இருக்கும் வரை தாம் ஸ்பெயின் அணிக்காக ஆடப்போவதில்லை என்று உலகக் கிண்ணத்தை வென்ற ஒட்டுமொத்த மகளிர் அணி வீராங்கனைகளும் கூறிவிட்டார்கள்.

ஸ்பெயின் வீதிகளில் பெண் உரிமைக் குழுக்கள் ஆர்ப்பட்டத்தில் இறங்கி இருக்கின்றன. அரச தரப்பில் இருந்தும் ருபியல்ஸை பதவி விலக அழுத்தம் அதிகரித்திருக்கிறது.

சர்வதேச கால்பந்து சம்மேளனம் கூட ருபியல்ஸை 90 நாட்களுக்கு இடைநிறுத்திவிட்டது. அதாவது அவருக்கு உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் கால்பந்து செயல்பாடுகளில் ஈடுபட முடியது. ருபியல்ஸ் ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்திலும் முக்கிய புள்ளியாக இருக்கிறார்.

இதன் உச்சமாக ருபில்ஸ் மீது பாலியல் தாக்குதல் தொடர்பில் குற்றவியல் குற்றச்சாட்டு சுமத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒரு முத்தத்தால் ருபியல்ஸ் சிறை வரை செல்லும் வாய்ப்பு இருக்கிறது.

என்றாலும் ருபியல்ஸ் தொடர்ந்து தனது நிலையில் விடாப்பிடியாக இருப்பதாகவே தெரிகிறது. ஆரம்பத்தில் அவர் பதவி விலகப்போவதாக கூறப்பட்டபோதும் அது உண்மையாக இருக்கவில்லை. அவர் தொடர்ந்து ஸ்பெயின் கால்பந்து சம்மேனத்தின் தலைவராக நீடிக்க முயன்று வருகிறார். இதற்கு அந்த சம்மேளனத்தின் பெரும் புள்ளிகள் முதலில் ஆதரவாக இருந்தாலும் நாளுக்கு நாள் அந்த ஆதரவு குறைந்து வருகிறது.

உண்மையில் ருபியலின் இந்த நடத்தை என்பது மகளிர் விளையாட்டில் காலம் காலமாக இருக்கும் பிரச்சினை ஒன்று அம்பலத்திற்கு வந்த நிகழ்வாகவே பார்க்க முடிகிறது.

பெண் விளையாட்டு வீராங்கனைகள் தமது பயிற்சியாளர், முகாமையாளர் அல்லது நிர்வாகத்தில் இருப்பவர்களின் பாலியல் தொந்தரவுக்கு முகம்கொடுக்கும் அவ்வப்போது வெளியே வந்து சர்ச்சையை கிளப்பும்.

2016இல் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் தேசிய அணியின் மருத்துவர் லரி நாசர் மீது 265க்கும் அதிகமான பெண் வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய சம்பவம் இதன் பாரதூரத்தை குறிப்பிட நல்ல உதாரணம். கடைசியில் நாசர் ஆயுள் கைதியாக மாறிவிட்டார்.

2020 ஆம் ஹெய்ட்டி கால்பந்து சம்மேளனத் தலைவர் யிவேஸ் ஜீன் பார்ட் மீது அந்நாட்டின் பல கால்பந்து வீராங்கனைகளும் பாலியல் தொந்தரவுகள் பற்றி அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை சுமத்தினார்கள். இதில் ஒரு பெண், பார்ட் தம்மை கற்பழித்ததாகவும் இதனால் தாம் கருக்கலைப்பு செய்ய வேண்டி இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

2020 நவம்பரில் ஜீன் பார்ட்டுக்கு பிஃபா வாழ்நாள் தடை விதித்தது.

விளையாட்டில் ஈடுபடும் ஒவ்வொரு வீராங்கனையும் சிறிய அளவிலாவது இவ்வாறான தொந்தரவுகளை தாண்டி இருக்க வாய்ப்பு அதிகம்.

எனவே பெண் விளையாட்டு வீராங்கனைகளை பாதுகாப்பதற்கு ருபியல்ஸ் போன்றவர்களின் நடத்தையை கட்டுப்படுத்துவதும் அவசியமாக உள்ளது.

Comments