திட்டங்களை குழப்பும் காயங்கள் | தினகரன் வாரமஞ்சரி

திட்டங்களை குழப்பும் காயங்கள்

டி20 உலகக் கிண்ணத்தின் ஆரம்பத்தில் இருந்த இலங்கை அணி இப்போது இல்லை. போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் இருந்து இப்போது வரை ஒருவர் பின் ஒருவராக காயமடைந்து வருகிறார்கள். இதுவரை இலங்கை அணியின் ஆறு வீரர்கள் காயமடைந்திருக்கிறார்கள். இது மொத்த அணியின் பாதி எண்ணிக்கை.

அவுஸ்திரேலியா புறப்படும்போது இலங்கை அணி வேகப்பந்து வீச்சாளர்களையே பார்த்துப் பார்த்து தேர்வு செய்தது. ஆஸி. ஆடுகளத்தில் வேகப்பந்து என்பது முக்கியமானது. புறப்பட்ட இலங்கைக் குழாமில் டில்ஷான் மதுஷங்க, துஷ்மன்த சமீர, லஹிரு குமார மற்றும் பிரமோத் மதுஷான் என நான்கு வேகப்பந்து வீச்சாளர்களும் நம்பிக்கை தந்தனர்.

ஆனால் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னரே இடது கை வேகப்பந்து வீச்சாளர் மதுஷங்கவுக்கு தொடைப் பகுதியில் காயம். பின்னர் ஆரம்ப சுற்றிலேயே பெரும் எதிர்பார்ப்பாக இருந்த துஷ்மன்த சமீரவுக்கு கெண்டைக்காலில் காயம். போதாக்குறைக்கு இடது கை துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு பின் தொடையில் காயம். அதற்கு அடுத்து டில்ஷான் மதுஷங்கவுக்கு பதில் வந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோவுக்கு தொடை எலும்புக் காயம்.

இதுவரை இந்த நான்கு வீரர்களும் இலங்கைக் குழாத்தில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள். சமீரவுக்கு பதில் கசுன் ராஜித்த அழைக்கப்பட்டார். குணதிலக்கவுக்கு பதில் அஷேன் பண்டார சேர்க்கப்பட்டார். இப்போது பினுர பெர்னாண்டோவின் இடத்தை நிரப்ப அசித்த பெர்னாண்டோ வந்திருக்கிறார்.

மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான பிரமோத் மதுஷானுக்கு காயம் இருந்தபோதும் அது அணியில் இருந்து நீக்கும் அளவுக்கு தீவிரம் இல்லை. ஆரம்ப வீரர் பத்தும் நிசங்கவுக்கு சிறு காயம் ஏற்பட்டு அயர்லாந்துக்கு எதிரான சுப்பர் 12 ஆரம்பப் போட்டியில் ஆடவில்லை.

ஒட்டுமொத்தத்தில் விமானம் பிடித்து ஆஸி. செல்லும் வீரர்களும் அங்கிருந்து விமானம் பிடித்து பாதியிலேயே இலங்கை வரும் வீரர்களும் நாளாந்தக் கதையாகிவிட்டது. எனவே வேறு எந்த அணியும் செய்யாத வேலையாக மூன்று மேலதிக வீரர்களை விமானம் பிடித்து அவுஸ்திரேலியா அனுப்பிவிட்டது இலங்கை கிரிக்கெட் சபை.

வேகப்பந்து வீச்சாளர்களான அசித்த பெர்னாண்டோ, மதீஷ பத்திரனவுடன் விக்கெட் காப்பாளர் நிரோஷன் திக்வெல்ல தயார் நிலையில் இருப்பதற்காக அவுஸ்திரேலிய சென்றிருக்கிறார்கள். அதாவது யாராவது காயம் ஏற்பட்டால் இவர்களில் ஒருவரை அந்த இடத்திற்கு போட்டு போட்டியை தொடர வேண்டியது தான். போன வேகத்திலேயே அசித்த பெரனாண்டோவுக்கு இடம் கிடைத்துவிட்டது.

இப்படி அடிக்கடி படிப்படியாக வீரர்கள் காயம் அடைவதற்கு யார் மீது குற்றம் சொல்வது என்று கூற முடியாது. இலங்கை அணி ஆரம்ப சுற்றுப் போட்டிகளை ஆடிய ஜீலொங் மைதானத்தின் மண்ணின் உறுதியற்ற தன்மையும் ஒரு காரணம். எனவே மைதானத்தில் பந்து வேகமாக நகர்வதில்லை, பந்தை துரத்தி ஓடும்போது கவனமாக ஓட வேண்டும் என்கிறார் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன.

அவுஸ்திரேலியாவின் மழையுடன் கூடிய காலநிலை, கடுங் குளிர் எல்லாம் வீரர்களுக்கு தாக்கம் செலுத்துகிறது. தவிர, பயிற்சியின் தன்மையும் காயங்களுக்கு முக்கிய காரணமாகிறது. டில்ஷான் மதுஷங்க பயிற்சியின்போதே காயமடைந்தார். பயிற்சியில் தற்செயல் காயங்கள் ஏற்படுவது ஒருபக்கம் இருக்க கவனம் இன்றி பயிற்சி எடுப்பதும் காயங்களை ஏற்படுத்தலாம்.

வீரர்களின் உடல்பாங்கும் ஒரு காரணமாக இருக்கக் கூடும். துஷ்மன்த சமீர ஏற்கனவே காயமடைந்திருந்த நிலையிலேயே போட்டிக்குத் திரும்பி மீண்டும் காயத்துக்கு உள்ளானார். இப்படியான காயங்கள் அந்த வீரர்களின் விளையாட்டு வாழ்வையே முடிவுக்குக் கொண்டுவரக் கூடும்.

இந்தக் காயங்கள் இலங்கையின் உலகக் கிண்ண திட்டங்களையே குழப்பிவிடக்கூடியது. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான சுப்பர் 12 சுற்றுப் போட்டியே நல்ல உதாரணம்.

பேர்த்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் இலங்கை அணி நிர்ணயித்த 158 ஓட்ட வெற்றி இலக்கில் தப்பில்லை. ஏனென்றால் அந்த மைதானத்தில் இன்னிங்ஸ் ஒன்றின் சராசரி ஓட்டமே 162 தான்.

ஆனால் பந்து வீச்சில் தான் குழப்பம் ஏற்பட்டது. முதல் ஓவரை வீசிய பினுர பெர்னாண்டோ 5 பந்துகளை மாத்திரமே போட்டார். காயம் காரணமாக மைதானத்தை விட்டு வெளியேற முழு திட்டமுமே பாழாகிப்போனது.

பினுரவின் இடைவெளியை நிரப்புவது, பந்துவீச்சு வரிசையை மாற்றுவது, எதிரணிக்கு நெருக்கடி கொடுப்பது எல்லாமே சிக்கலாகிவிட்டது. மைதமானத்தின் தன்மையை பார்க்க வேண்டும் என்றால் மற்ற வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார பந்துவீசிய முறையை பார்த்தாலே போதும். அவரது வேகத்துக்கு முன் எதிரணி துடுப்பாட்ட வீரர்களுக்கு நகர முடியாமல்போனது.

வேகமாக ஆட முயன்ற கிளன் மெக்ஸ்வெல்லின் கழுத்தில் பந்துபட்டு அவர் கீழே விழுந்துவிட்டார். எனவே போட்டியில் துஷ்மன்த சமீர இருந்திருந்தால் திசையே மாறியிருக்கும் என்று புரிந்து கொள்ள முடியும். சமீர தேவையில்லை பினுர பெர்னான்டோவுக்கு தனது நான்கு ஓவர்களையும் வீச முடிந்திருந்தால் கூட ஆட்டம் திசை மாறி இருக்கும்.

ஆஸி. இன்னிங்ஸின் முக்கால் பங்கு ஆட்டத்தில் இலங்கையே ஆதிக்கம் செலுத்தியது. நெருக்கடி விலகியபோது தான் மார்கஸ் ஸ்டொயினிஸ் வந்து அடித்தாட ஆரம்பித்தார்.

எனவே இலங்கை உலகக் கிண்ணத்திற்கு வரும் போதான திட்டத்துடன் தொடர்ந்து ஆட முடியாது. பந்துவீச்சில் இது பெரிதும் பாதிப்பை செலுத்தும். முன்னர் இல்லாத அளவுக்கு மஹீஷ் தீக்ஷன மற்றும் வனிந்து ஹசரங்க ஆகிய இரு சுழற்பந்து வீச்சாளர்களை அதிகம் நம்ப வேண்டி ஏற்பட்டிருக்கிறது. இது சாதகத்தை போலவே பாதகமானதும் கூட.

ஆஸி. போட்டியில் வனிந்து 3 ஓவர்களில் 53 ஓட்டங்களை விட்டுக்கொடுத்ததே இலங்கையின் தோல்விக்குக் காரணமாகும்.

வேகப்பந்து வீச்சில் லஹிரு குமார சிறப்பாக செயற்படும் நிலையில் மறுமுனை வேகப்பந்து வீச்சாளர் அவருக்கு உதவும் வகையில் பந்துவீசினாலே போதுமானது. நல்லவேளை காயங்கள் இலங்கை துடுப்பாட்ட வரிசையில் பெரிதாக தாக்கம் செலுத்தவில்லை. எனவே துடுப்பாட்டத்தை மையப்படுத்தியே எஞ்சிய போட்டிகளில் ஆட வேண்டி இருக்கும்.

எஸ்.பிர்தௌஸ்

Comments