கௌரவம் | தினகரன் வாரமஞ்சரி

கௌரவம்

ண்டிற்காற சாலியின் மூத்த மகள் சுபைதா இன்று காலமானார். அன்னார், சாலி, மரியம் ஆகியோரின் மூத்த மகளும், சுமையா, சுலைகா ஆகியோரின் சகோதரியும், அஸ்மத் ஆசிரியர், அமீர் ஆசிரியர் ஆகியோரின் மதினியுமாவர். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம், அஸர் தொழுகையின் பின் நடைபெறும் அறிவிப்பவர் அஸமத் ஆசிரியர் மச்சான்.

இடியுளுந்து பொடியாப் போவாக என்ர புள்ளய இழுத்தடிச்சிப் போட்டாகளே, ஒரு கூலி வேல செய்றவன் இல்லாம பெயித்தானா? ஆவலோட பெயித்தாளே என்ர புள்ள, பத்தினிமா என்ர மகளே! என தாங்க முடியாமல் ஒப்பாரி வைத்துக் கொண்டு ஒழுங்கையால் மையத்து வீட்டை நோக்கி ஓட்டமும், நடையுமாக சென்று கொண்டிருந்தாள் சாலியின் ஒன்றுவிட்ட தங்கையான மைமுனா.

வண்டிக்காற சாலி அந்த ஊரில் எல்லோராலும் அறியப்பட்ட ஒருவர் அவரின் வண்டில் வருமானத்தால் தான் அவருடைய குடும்பமே ஓடியது ஓட்டை வீட்டிற்குள் மூன்று பெண்பிள்ளைகளும், நோயாளியான அவன் மனைவி மரியமும், அவனுக்கு பெரும் சுமை என்று தான் சொல்ல வேண்டும்.

சுபைதை, சுமையா, சுலைகா மூன்று பெண்மக்களுக்கும் முறையே இருபது 20, - 12, - 9 வயது தான் சுபைதா எட்டாம் வகுப்பு வரை படித்து விட்டு, தனது தங்கைகளையாவது படிக்க வைக்க வேண்டுமென்று வயலில் கதிர் பொறுக்க அல்லயல் பெண்களுடன் சேர்ந்து போய்க்கொண்டிருந்தாள்.

சாலியோ தனது வண்டில் வருமானத்தில் வயிற்றை பூரணமாக கழுவ முடியாத நிலமையில் தனது மனைவியின் குளிசை, மருந்துக்கும் கடன்பட்டு பார்க்கவேண்டிய நிலையில் இருந்தான். அவனது கவலையால் அவனும் அடிக்கடி நெஞ்சுவலியினால் அவதிப்படுவான் என்ன செய்யலாம். தன்னையே நொந்து கொள்வான் சாலி.

சுபைதா தன் குடும்ப நிலையை நினைத்து அடிக்கடி பெருமூச்சி விடுபவளாக இருந்தாள். தன்னுடன் வயலுக்கு கதிர் பொறுக்கவரும் பெண்களில் சிலர் வெளிநாட்டுக் கதைகளை கதைக்கும் போது, தனது காதை நீட்டிக் கொள்வாள். தானும் அப்படி வெளிநாடு சென்றால்? என்ற மனக்கேள்வி அவள் உள்ளத்தில் உதயமாகிய போதும் மௌனமாகவே இருந்தாள்.

ஒருநாள் தனது தகப்பனிடம் சுபைதா பேச கதையை ஆரம்பித்தாள் வாப்பா... நீங்க கஷ்டப்பர்றிங்க நம்மட குடும்ப நிலமையில் ஒரு வருமானம் இல்லாட்டி தங்கச்சி மார்ர படிப்பும் தொடரமுடியாம போயிடும். நம்மட சின்னக்கிளிர மகள் என்னோட வட்டக்க வந்தவ, இப்ப வெளிநாடு போயிட்டா, நம்மட பக்கத்து கிராமத்திலதானாம் சப் ஏஜன்சி இருக்கிறாராம். எனக்கிட்ட அவர்ர விலாசத்தையும் தந்திட்டுப் போனா வாப்பா நீங்க விரும்பினா... என்று இழுத்தாள் சுபைதா.

தனது கண்களை ஈரப்படுத்திக் கொண்ட சாலி... எதுவுமே பேசாமல் மௌனமாகவே இருந்தார் ... மகள் ஒன்றும் தெரியாத நீ .... இந்த குடும்பத்த ஏத்துக்கப் பொறியா? ... நான் இதுக்கு என்ன மறுமொழி சொல்வன் மகள். இல்ல வாப்பா நம்மட கஷ்டத்துக்கு வேறவழியில்ல ஒரு நல்ல இடமா கிடச்சா அல்லாஹ்ட உதவியால, அது போதும், நாம கஷ்டப்படாமயாவது இருக்கலாம்.

வியர்த்த தன் புருவத்தை தன் தோழில் கிடந்த துவாயால் துடைத்தவராக திண்ணையில் கிடந்த பாயில் மல்லாந்து படுத்தார். சுபைதாவும் பதில் ஏதுவும் கிடைக்காலம் ஏமாற்றததுடன். தன் தாயுடன் போய் தூங்கிக் கொண்டாள். இரவு முழுவதும் சாலியும் துங்கவில்லை சுபைதாவும் துங்கவில்லை. விடிந்ததும் மீண்டும் சுபைதா தன் தகப்பனின் பதிலுக்காக, வாப்பா ஒரு நல்ல முடிவ சொல்லுங் வாப்பா.... என்று கூறி தேனீரை அவர்முன் வைத்தாள்.

தகப்பனின் சம்மதத்துடன் சுபைதா தான் நினைத்தபடி குவைத்தில் ஒரு நல்ல இடத்தில் வேலைக்கு சேர்ந்தாள். ஒரு தேசத்தின் தாயை கவனிப்பது தான் அவள் வேலை, அந்தப் பெண்ணும் சுபைதாவின் நிலைமையை விசாரித்து விழங்கியிருந்தாள். அதனால் மாதா மாதம் சுபைதாவின் வீட்டிற்கு சம்பளத் தொகையை அனுப்பி வைப்பாள். மேலதிகமாக நோன்பு, ஹஜ் போன்ற தினங்களிலும் அதிகமான அன்பளிப்புகளையும் சுபைதாவுக்கு வழங்குவாள். சுபைதாவை தனது பிள்ளை போல் கவனித்தாள், சுபைதாவும் தனது தாயைவிட அன்பாகவே கவனித்தாள்.

சுபைதா, மனநிறைவுடன், மனம் வைத்து அந்த சீமாட்டியுடன் நடந்து கொள்வாள் அதனால் சுபைதா இல்லை என்றால் அவளுக்கு நித்திரை கூட வராது போல், குளிசை மருந்துகளைக் கூட சுபைதா நேரம் தவறாமல் கொடுப்பாள். அந்த வீட்டு வேலைக்காரி சுபைதாவையும் ஒரு எஜமானியாகவே கண்டாள். அவ்வளவுக்கு மதிப்பளித்தாள் அந்த எஜமானி சுபைதாவுக்கு.

சாலியோ தனது மகளுக்காக கண்ணீர் விடுவார். அது ஆனந்தக் கண்ணீர் மட்டுமல்ல அவள் வாழ்க்கையை நினைத்து சுமார் பத்து வருடங்களாகிய நிலையில் சுபைதா தனது குடும்ப முன்னேற்றத்திற்காகவே கண்விழித்தாள். அந்த ஊரில் சாலி ஒரு நல்ல நிலைமைக்கு வந்திருப்பது அல்லயல் மக்களுக்கு புறாமையும் ஏற்படுத்தியது.

சுபைதா பதின் ஐந்து வருடங்கள் அந்த வீட்டில் பணிபுரிந்திருந்தாள். அவளுக்கு வயதும் முப்பத்தி ஐந்தாகியது. அதற்கிடையில் சாலி அந்த ஊரில் பிரபல்யமானான். மூன்று வீடுகள் கட்டப்பட்டிருந்தது. ஒரு வீடு அவளது எஜமானியின் ஆலோசனையின் பெயரில் கட்டப்பட்டது, அது சுபைதாவுக்காக கட்டப்பட்டருந்தது.

இளைய தங்கைக்கு ஒரு ஆசிரியர் மாப்பிள்ளையும், மற்றவளுக்கு அதுவும் ஒரு ஆசிரியர் தொழில் செய்யும் ஒருவரையும் பேசப்பட்டு திருமணம் செய்யப்பட்டது. அந்த இரு நிகழ்வுகளுக்குமே சுபைதா நாட்டுக்கு வந்திருந்தாள். வீடு வாசல், பிடவைகள், நகைகள், வீட்டுத் தளபாடங்கள் என்று ஏகப்பட்ட சாமான்களுக்கு சொந்தக்காரர்களாக அவளது தங்கைமார் தன்னிறைவுடன் வாழ்ந்தனர்.

சாலியும், மனைவியும் சுபைதாவால் நல்ல தேகாரோக்கியத்துடன் இருந்தனர் மீண்டும் நோயாளியாக ஆரம்பித்தனர். தங்களது மூத்த மகள் சுபைதாவை நினைத்து அவர்கள் மனம் தீயாக எரிந்து கொண்டிருந்தது. சுபைதா தனக்கொரு நூல் வேலி வேண்டுமேமென்று, அந்த எஜமானியின் வீட்டு றைவர் தன்னை திருமணம் செய்ய, அந்த எஜமானியே பேசினாள். அவனும் நல்லதொரு வாலிபன் எஜமானி அவனையும் தனது பிள்ளை போல் கவனித்தாள்.

எஜமானியின் விருப்பம் இருவரையும் தன்னுடனே வைத்திருப்பதானால், தனக்கு உதவியாக இருக்குமே என்று இருவருக்கும் நல்ல சம்பளம் கொடுத்து, தனது விருப்பத்தையும் சுபைதாவிடம் சொன்னாள் சுபைதா. தனது தாய், தகப்பன், தங்கைகளிடமும் சம்மதம் பெற முயற்சித்தாள், நாங்கள் ஒரு மாஸ்ரரை திருமணம் முடித்திருக்கும் போது, நீ ஒரு றைவரையா திருமணம் முடிப்பது என்ற முகமூடையை சுபைதாவுக்கு போட்ட போது சுபைதா என்ன செய்வதென்றே புரியாமல் தனது எஜமானியிடம் அதை தெரிவித்தாள்.

அடிக்கடி பெருமூச்சிவிடும் சுபைதாவுக்கு, வயதோ முப்பத்தி ஆறாக பெருகிக் கொண்டிருந்தது. அவள் ஏதோ ஒரு துணையை மாத்திரம் எதிர்பார்த்தாள். ஆனால் தனது சகோதரிமாரும் மச்சான்மாரும் தங்களது தகுதிக்கு சகோதரிக்கு சாதாரணமான ஒரு மாப்பிள்ளையை எடுப்பது தங்களுக்கு அவமானமாகக் கருதுகின்றனர் போல் ஆனால் சாலியும், மனைவியும் தங்களது மகளை நினைத்து நோயாளியாகிக் கொண்டிருந்தனர். பெரியதொரு பங்களா, அதற்குண்டான தளபாடங்களுடன் எல்லாமே இருக்க சுபைதாவுக்குத் தேவை ஒரு நூல் வேலிதான் அதற்கு தடையாக இருப்பதெல்லாம் கௌரவம் தான். சுபைதாவின் எஜமானி இங்கேயே உன் திருமணத்த நான் செய்து வைக்கிறேன் என்று கூறியும், தனது தாய், தந்தை, சகோதரிகள் விருப்பத்துடன் செய்வதையே நான் விரும்புகின்றேன் என்று தட்டிக்களித்தாள்.

வீட்டாரின் விருப்பப்படி நாட்டுக்குப் போக அனுமதி கேட்டு நின்றாள் சுபைதா, ஆனால் அந்த எஜமானி சுபைதா இல்லா விட்டால் ஒரு மனநோயாளியாக மாறும் சாத்தியம், இருவருமே அழுதனர் வீட்டாரிடம் எஜமானி மன்றாடிக் கேட்டாள். இருந்தும் சுபைதாவின் திருமணத்தின்பின் இருவரையும் அனுப்பி வைப்பதாக வீட்டார்கள் சொன்ன போது செய்வதறியாது தவித்தாள் சுபைதாவின் எஜமானி.

எஜமானியின் விருப்பத்துக்கிணங்க கட்டப்பட்ட அந்த வீட்டில் வந்திறங்கினாள் சுபைதா. ஊரார் என்ன எல்லோருமே அவளை பார்ப்பதற்கு வந்திருந்தனர். பகல் வேளைகளில் ஏதோ... சந்தோசம் இரவுகளில் ஏதோ... ஒரு இழிவில் வாடினாள். அவளுக்கு முப்பத்தி ஆறரை வயது. அவள் விருப்பமெல்லாம் ஒரு ஆண்மகன். சகோதரிகள் விரும்புவது போல் வெளிநாட்டுக்குச் சென்றவளுக்கு நல்ல உத்தியோகம் பார்க்கும் மாப்பிள்ளை வருவானா? அந்த அவநம்பிக்கையில் மூழ்கிக்கிடக்கும் சகோதரிகளின் முன் எப்படி விளங்க வைப்பது என கஷ்டப்பட்டாள் சுபைதா.

தனது எஜமானி அள்ளிக் கொடுத்தாள், திருமண வீடியோவுடன் அவசரமாக வரவேண்டும் மகள் நீ இல்லாம என்னால் இருக்க முடியாது உன்னைப் போல் என்னைப் பார்க்க வேறு யாருமில்லை என்று கூறி வரும்போது தனது கையில்கிடந்த தங்க வளையல்களை களட்டி தனக்குப் போட்டு, என்னை கட்டியணைத்து முகர்ந்து அனுப்பினாள். என்னை பெறாத தாய், அவருக்கு நான் என்ன சொல்வேன், அவரின் மனதை எப்படி சந்தோசப்படுத்துவேன் என எண்ணி அன்றிரவு அழுது தீர்த்தாள்.

மூன்று மாதங்களாகிவிட்டன சுபைதா வந்து தன் எஜமானியை நினைத்து அழுதாள். அது இருவிழி கண்ணீர் ஒன்று தன் எஜமானிக்காக அழுகின்றது ஒன்று தன் வாழ்வை நினைத்து அழுகின்றது என்னும் இரண்டு சோடிக் கணக்கள் தினமும் ஈரமாகிக் கொண்டேயிருக்கின்றன சாலியின், கண்களும் அவர் மனைவியின் கண்களும்.

எத்தனையோ மாப்பிள்ளைகள் போட்டி போட்டனர். சுபைதாவை ஏற்றுக்கொள்ள ஆனால் அவளின் தங்கைகளும் மச்சான்மார்களும் தங்களது கௌரவத்தை காப்பாற்றிக் கொள்ள ஒரு பிடியாய் நின்றனர். அரசாங்க உத்தியோகம் செய்யும் மாப்பிள்ளை தேடினர். அவளுக்கு இருக்கும் சொத்துக்கு உண்மையில அப்படி ஒரு மாப்பிள்ளை பொருத்தம் தான் வெளிநாட்டுக்குப் போன எனக்கு அப்படியார் வருவான் சாதாரணமாக ஒருவன் போதுமே அதை வெளியில் சொல்லாமல் வெந்து கொண்டிருந்தாள் சுபைதா.

நாட்டுக்கு வந்தும் ஒரு வருடமாகியும், தனக்கு வாழ்க்கை கிடைக்கவில்லை. தனது எஜமானியுடனும் பொய் சொல்லி, பொய் சொல்லி வேண்டாம் என்றாகியது எந்த எஜமானி படுக்கையாய் இருப்பதை கேள்விப்பட்டு அழுதாள் சுபைதா. அவள் உள்ளம் தீயாய் எழுந்து கொண்டிருந்தது.

எஜமானியின் றைவரான அந்த நல்ல மனிதரையும் திருமணம் முடிக்க விடவில்லை. ஊரிலும் வலிய வரும் வரன்களையும் தங்கைமாரும், மச்சான்மாரும் துரத்திவிடுகின்றனர். வாப்பாவும் உம்மாவும் எந்த அதிகாரமின்றி கண்ணீர் விடுகின்றனர். தன் வாயால் எதையும் சொல்ல முடியாத தவிப்பு இவைகளுக்கு மத்தியில் சுபைதா துடித்துக் கொண்டிருந்தாள்.

தன் எஜமானிக்குச் செய்த நம்பிக்கை துரோகத்துக்கு...? தனக்கொரு வாழ்க்கை இங்கே கிடைக்காது என்பதையும், அதற்கு குடும்பத்தின் கௌரவம் விட்டுக் கொடுக்காத நிலைமைகளையும் வளங்கி அன்றிரவு அழுதாள் பொலம்பினாள், தன் தங்கைமார் ஏதோ ஒன்றிற்காக அவ்வளவாக முகம் கொடுத்தும் பேசாதிருந்ததை நினைத்து வேதனைப் பாதையில் சென்று கொண்டிருந்தாள் சுபைதா.

அன்றிரவு நடுநிசிக்குப் பின் அழுது தீர்த்தாள். தனது தாய் தந்தைக்கு நடுவில் போய் உறங்கிக் கொண்டாள், அவள் தனது தாய், தகப்பனை கொஞ்சினால் கால்களில் முத்தமிட்டாள் அவள் கண்களால் தாரைதாரையாக கண்ணீர் பெருக்கெடுத்தோடியது.

அவள் உயிரை யாரோ பிடுங்குவது போன்ற பிரமை தலை சுற்றிக் கொண்டு வந்தது அந்த நித்திரை மாத்திரைகள் உலகில் அவளுக்குள்ள நோக்கங்களை நிமிடங்களாக்க அவள் உயிரை விழுங்கிக் கொண்டிருந்தன. இல்லை தனது தங்கை, மச்சான்மார்களில் கௌரவம் அவள் வாழ்க்கையை உண்டு மகிழ்ந்தது.

சா... என்ன இருந்தாலும் சுபைதா இப்படி செய்திருக்கப் போடாது. மக்கள் பேசிக்கொண்டனர். சாலியும் மனைவியும் சருகாக்கிடந்தனர். சுபைதாவுடைய மனதை யார்தான் விளங்கிக் கொள்ளமுடியும். சகோதரிகளும் மச்சான்மார்களும் இப்படி செய்வார்கள் என்றிருந்ததால் யாரையாவது முடித்துக் கொடுத்திருக்கலாமே என்று அங்கலாய்த்தனர்.

மறுபடியும் சுபைதாவின் இறப்புக்குப் பின் உள்ள சொத்துக்களை நினைத்து சந்தோசப் பெருமூச்சிவிட்டனர். மெழுகு திரியான சுபைதா தானுருகி அணைந்துவிட்டாள். அவள் எதிர்பார்ப்புகளும் அவளின் மனக் கவலைகளையும் யாருக்கும் விளங்கிக் கொள்ள முடியாத ஒன்றல்ல.

Comments