நிறப் பூச்சு | தினகரன் வாரமஞ்சரி

நிறப் பூச்சு

சஹ்தி ஆசிரியருக்கு கோபம் கோபமாய் வந்தது.

‘ஏன்தான் தனக்கு இப்படியொரு நிலமை ஏற்பட்டது. நமது பாட்டுக்கு இருந்து விட்டு போவதற்கும் வழியில்லை’ என மனதில் நினைக்கையில் கவலை ஏற்பட்டது.

‘சே! என்ர மனுஷிக்கும் விளங்கவில்லை பிள்ளைகளுக்கும் என்ர நிலமையை சொன்னாலும் புரிந்து கொள்கிறார்களில்லை! இந்த பணக்காரன் வீட்டுக்குப் பக்கத்தில் குடியிருக்கிறது மிகவும் பிழையாக போய்விட்டது! தனக்குள்ளே நொந்து கொண்டார்.

சில தினங்களாக அவரது வீட்டில் நடக்கும் வாத பிரதிவாதங்களும், பேச்சு வார்த்தைகளும் அவர் கண்முன் நிழலாக விரிந்தது.

‘நஸி! சின்னாத்தா வீடு மிகவும் அழகாயிருக்கில்ல’ மாலைநேர வகுப்புக்குபோய்விட்டு சைக்கிளை மரத்தில் சாத்திக் கொண்டே மூன்றாவது கடைக்குட்டி அக்காவிடம் கேட்டான்.

‘ஓமோம், அந்த கலர் மட்ச் இருக்கே ஷா! எனக்கும் தான் ரொம்ப பிடிச்சிருக்கு’ உனக்கு!

பெரியவனை நோக்கி அவன் பார்வை நீண்டது.

‘உள்ளுக்கு வைட் பியோர் வைட் வெளியில பீச் அதேபோடருக்கு கேட்பதில் அந்த வராண்டா கலர் ஷா! செம்மையாக இருக்குடா!

“உம்மா சின்னாத்தா வீட்டில் என்னம்மா விஷேஷம்? இப்தாரா? இல்லாட்டி நோன்பு பென்னானைக்கு ஸ்பெஷலா அழகுபடுத்துறாங்களா?”

இல்ல நஸி! அவங்க சல்லிகார பாட்டிதானே! ‘எவ்ரியேர் அவங்கட ஹவுஸ பியூட்டியாக்குராங்க’ இடையில் குறுக்கிட்டு ஆங்கிலம் கலந்த பாஷையில் கூறினான் சின்னவன்.

"அதுக்கும் இருக்கே நம்முட பலஸ், மழையில் ஏழகிறதும், ஊத்தை ஈ என்று இளித்துக் கொண்டு" நஸியின் நக்கல் வார்த்தை!

“பார்க்க ஒரு மாதிரியாக இருக்கு!” பெரியவனின் பேச்சு சஹ்தி ஆசிரியர் தன் ‘பொக்கற்றில்’ கை வைத்துப் பார்த்தார்! மூச்சை ஆழமாக இழுத்து விட்டார்!

மனைவியின் முகத்தைப் பார்த்தார்!

உழைக்கிற, எடுக்கும் மாதசம்பளம், கொஞ்சம் ரியூஷனில் கிடைக்கிறது எல்லாம் ஒரு மாச சாப்பாட்டு செலவு, பிள்ளைகள்ட உடுப்பு டிபன் பீஸ், ரியுஷன் பீஸ், இடைத்தீன், வாத வருத்தம், டியுட்காசி, கேஸ் தண்ணி, கரண்டு பில், போண் ரீசாஜ் மையித்து, கலியாண செலவு இதுகளுக்கே சரியாக இருக்கும் போது எங்கடவீட்டுக்கும் எங்கடா பெயின்ட் அடிக்கிறது?

தன்ர வீட்டுக்கு அடிச்ச பணக்காரன் அந்த பெயின்ட் பிரஷ்ஷை இன்னும் கொஞ்சம் நீட்டி இருக்கலாம் அந்த நாலு அடி முன் மதில் துண்டுக்காலும்!

அந்த அடிச் மிச்சத்த தந்து, ஜே! ராத்தா இத கொர்கட் பிடி மீதிய அட்ஜஸ் பண்ணு’ என்று எடுத்து வீசி இருக்கலாம்.

காசி இல்லாத நி​ைலமையை தன் பெண்சாதி பிள்ளைகளுக்கு எப்படி புரியவைப்பது என தவித்தார் அவர். அவர் மனைவியும் தனக்கு முடியுமானவரை எல்லாவற்றையும் அட்ஜஸ் செய்து கொள்பவள் தான் என்பது அவருக்கு புரியும்.

அத்தோடு "இஞ்சே! அவ அது போட்டிருக்கா காதுல கழுத்துல எனக்கு வேணும்! இல்லாட்டி மிச்சம் அழகான துபாய் டிசைன் அபாயா, ஷல்வார் வந்திருக்கு! எனக்கும் பிள்ளைக்கும் வாங்கி தாங்கோ!" என்று அவள் கேட்கவே மாட்டாள். அவள்ளவு நல்லவள் அவள்!

பேச்சு நீண்டு நீண்டு அவரிடமே கடைக்குட்டி மூலமாக வந்தது.

“வாப்போ! நம்ம வீட்ட பாக்கிற போது கடும் ஊத்தையா தெரியுது வாப்பா!

“யெஸ் டாட் நாம் ஒரு Paint Wash பண்ணனும் dad!”

“ஷயான் நானாட மமாவும் சொன்னாங்க நம்ம வீடு கடும் ஊத்தையாம்.”

“உண்மைதான் கடனயாவது வாங்கி ஒரு வாளி பெயின்ட் வாங்கிட்டு வாங்க! நாமாவது இரவோடு இரவா துறாவிவிடலாம்!"

மனைவியின் சிபார்சு கலத்த பேச்சு!

‘வீட்டுக்கு பெயின்ட் அடித்தே ஆகவேண்டும்’ என்ற நிலைமைக்கு தள்ளப்பட்ட சஹ்தி ஆசிரியர்

இருந்த 1000/= ரூபா காசுடன் அடுத்த மாத சம்பளத்தில் தருவதாக கடன் பெற்று பெயின்ட் வாங்கி வர கடைக்குப் புறப்பட்டார்!

“இந்த மனிதர்கள் Compare ஒப்பிட்டு பாக்கிறத எப்ப விடப்போறாகளோ!

இல்லாட்டி பண்றான் தனக்கு நல்லதை செய்யும்போது மத்தவனுக்கும் சேர்த்து கொஞ்சம் நல்லதை செய்து தொலைக்க கூடாதா?

இப்படி ஒரு சங்கடமான கஷ்டத்தை மிடில் class க்கு தராமல்”

அவர் மனம் சலித்து நொந்து கொண்டது.

ஷம்சுதீன் அர்ஷத் ஷம்ஸ் ஆரிப்

அக்கரைப்பற்று 02

Comments