கலெக்டர் | தினகரன் வாரமஞ்சரி

கலெக்டர்

இயற்கை தன் கடமையைச் சரிவர செய்வதை உறுதி செய்வதுபோல் கதிரவன் உதிக்கத் தொடங்கினான். பூக்களில் தேன்கள் மொய்க்கத் தொடங்கின. காகங்கள் தன் கடமையை செய்வதுபோல் கா... கா என்று கரையத் தொடங்கின.

ஆறு காம்பிறா லயத்தில் உள்ள ‘அங்காயி’ அப்பா கடவுளே! என்று கை, கால் முறிவெடுத்து கொட்டாவி விட்டவாறு. பழைய பாயை விட்டு எழும்பி, நேற்று அந்திநேரம் கிணற்றில் கொண்டு வந்த மிச்ச தண்ணியில் ஒரு பிளாஸ்டிக் கோப்பையை போட்டு மொந்து வாயை கொப்பிளித்து விட்டு இறுநூறு வருசத்திற்கு முன் வெள்ளைக்காரன் கட்டிய இஸ்தோப்புக்கு வந்து அடுப்பை பற்ற வைத்தாள். இஸ்தோப்புதான் இவர்களின் குசினி. அடுப்பு பாதி எரிந்தும் பாதி எரியாமலும் எரிந்து கொண்டிருந்தது.

‘அங்காயி’ அடுத்த வேலையாக வேலைக்குப் போக ஆயத்தமானாள். அவள் புருசனோ காலையிலும் குடிவெறி வற்றாமல் படுக்கையில் புரண்டுபடுத்துக் கொண்டே, இந்தா புள்ள ‘அங்காயி’ இவ்வளு சுருக்கா எந்திரிச்சிட்டியே விடிஞ்சிரிச்சா’ என்று கேட்க அங்காயி அன்றிரவு நடந்த அருவருப்பு ஊடலை நினைத்து அசிங்கமா அவனைப் பார்த்து, ‘உனக்கு வேற பொழப்பு ஒண்ணும் இல்லயே, ஒரு நாளைக்கு வேலைக்கு போவ, ஒன்பது நாளைக்கு வீட்டுல தூங்குவ. குடியும் தூக்கமும் தானே உன் தொழிலு. இந்த புள்ளைங்களுக்கு ஒரு வயிறு சோறு போட வேண்டாமா என்று கோபமாக கேட்டுக் கொண்டே அடுத்த வீட்டு அருக்கானியை அழைக்க தொடங்கினாள்.

அருக்கானி... அருக்கானி நான் பயணம் வச்சிட்டேன். நீ இன்னும் பயணம் வக்கிலயா? என்று சத்தமா கேட்க, அருக்கானியும் சரி அக்கா நானும் பயணம் வச்சிட்டேன். என்று கூறிக் கொண்டே வாசலுக்கு இறங்கி இருவரும் சேர்ந்து நாட்டுக்கு வேலைக்கு போய் விட்டார்கள்.

பாதி போதையில் படுத்திருந்த ஆறுமுகம் இரண்டு பிள்ளைகளையும் 'ஏய் விஜயகாந் ஏய் விஜய எந்திரிங்க... எந்திரிங்க...' என்று படுக்கையில் இருந்தவாரே உசுப்பிவிட்டான் அந்த சின்னஞ் சிருசுகள் பயந்து போய் எழுந்து நேரா கிணற்றுக்கு போய் அவர்களுக்கு தெரிந்தாற்போல் முகம், கை, கால் கழுவி வீடு வந்து நேற்று உடுத்திய உடுப்பை உடுத்திக் கொண்டு இஸ்கூல் பேக்கை முதுகில் மாட்டிக் கொண்டு 'அப்பா தேத்தண்ணி. சாப்பாடு இல்லையா' என்று கேட்க பயந்து அவர்களா அடுப்படிக்கு போய் தேனீர் ஊற்றி குடித்து விட்டு தோட்ட இஸ்கூலுக்குபோக மற்ற சிறுவர்களோடு சேர்ந்து போய்விட்டார்கள்.

ஆறுமுகம் நேற்று குடித்த சகிப்பு வெறியோடு மெதுவா படுக்கையை விட்டு எழும்பி நேரா அடுப்படிக்கு போய் தேத்தண்ணியை ஊத்தி பல்லு, முகம் கழுவாமல் குடித்து விட்டு பாயை கூட சுருட்டாமல் வெட்டுக்கத்தியை எடுத்துக் கொண்டு மீதி இருந்த கசிப்பு கொஞ்சத்தையும் குடித்து விட்டு நாட்டுக்கு பயணமானான், அந்திக்கு குடிக்க காசுதேட.

அந்தியாகும் நேரம் அங்காயி உழைத்த களைப்பால் முகம் சோர்ந்து மூட்டை முடிச்சிகளோடு வீடு வந்து, கொண்டு வந்த மூட்டையை இஸ்தோப்பிலேயே இறங்கி வைத்து விட்டு, பிள்ளைகள் இரண்டும் காணாததால் 'ஏய் விஜயகாந்து... ஏய் விஜய்' என்று அவளுக்கு இயன்ற பெலத்தை கொடுத்து கூப்பிட்டாள். இந்த சத்தம் லயத்து கோடிபுறம் மற்ற சிறுவர்களோடு விளையாடிக் கொண்டிருந்த விஜயகாந் காதில் விழுந்ததும், 'ஏய் தம்பி தம்பி அம்மா வந்திரிச்சி வா போவோம்' என்று தம்பியையும் கூட்டிக் கொண்டு ஓடோடி வீட்டுக்கு வந்தான்.

வீடு வந்ததும் வராததுமா, 'அம்மா காலயிலும் ஒன்னுமில்ல, பகலைக்கும் ஒன்னுமில்ல, சரியான பசிம்மா ஏதாச்சும் சாப்பிட கொண்டு வந்தியா' என்று கேட்டுக் கொண்டே அம்மா கொண்டு வந்த மூட்டையை அவிழ்த்தான் பெரிய பையன் விஜயகாந்.

'கொஞ்சம் பொறு. நான் எடுத்து தாரேன்' என்று கூறிக்கொண்டே அங்காயிக்கு நாட்டில் கொடுத்த பகல் சாப்பாட்டை இரண்டு பிள்ளைகளுக்கும் பகிர்ந்து கொடுத்து விட்டு, பிள்ளைகள் பசியோடு சாப்பிடுவதைக் கண்டு கண் கலங்கியது.

'சாப்பிடுங்க நான் தண்ணி கொண்டு, வாரேன்' என்று வீட்டுக்குள் நுழைந்தாள் வீட்டுக்குள்ளே தண்ணி பானையில் ஒரு சொட்டு தண்ணி கூட இல்லாததால், 'அட பாவி மகளே தண்ணி கூட கொண்டு வந்து வைக்காமல், இந்த பாவி மனுசன் எங்க போனான்' என்று கத்திக் கொண்டே பானையை எடுத்துக் கொண்டு கிணற்றடிக்கு போய் தண்ணி கொண்டு வந்து பிள்ளைகள் இருவருக்கும் ஊத்தி கொடுத்து விட்டு, இரவைக்கு ஏதாவது பொங்கி வைக்க ஆயத்தமானாள் அங்காயி.

பிள்ளைகள் இரண்டு சாப்பிட்டுவிட்டு அம்மாவின் பின்னாடி சென்று, 'அம்மா அம்மா நாளைக்கு நாங்க இஸ்கூலுக்கு போக மாட்டோம்' என்று முணுமுணுத்தார்கள்.

'ஏன் போக மாட்டீங்க' அங்காயி அதட்டி கேட்டாள். 'கொப்பி எல்லாம் முடிஞ்சி போச்சி. சும்மா போனா வாத்தியாரு அடிப்பாரு' என்றார்கள் பிள்ளைகள். 'சரிசரி நாளைக்கு நான் கொப்பி வாங்கி தாரேன், நாளானைக்கு போங்க' என்று சொல்லிக் கொண்டே சமைக்கத் தொடங்கினாள்.

மற்ற பிள்ளைகள் படிக்க போகும் நேரம் நம்ம பிள்ளைகள் படிக்க போக முடியாத நிலையா இருக்கே. இந்த மனுசன் முப்பது நாளும் குடித்து, குடித்து குட்டி சுவரா போரானே இப்ப நாளைக்கு எப்படி கொப்பி வாங்கி கொடுக்கிறது. கையில் ஒரு காசு கூட இல்லயே. இருந்த சல்லிக் கெல்லாம் இன்னிக்கி ஆக்க அரிசி, பருப்பு வாங்கியாச்சே. இந்த மனுசன் வந்தா கேட்டு பாப்போம் என்று மனத்குள்ளே புலம்பிக் கொண்டு மனவேதனையோடு தன் வாழ்வை என்னி கவலையடைந்த வண்ணம் கண்ணீரை சேலை முந்தானையால் துடைத்துக் கொண்டு சமைத்துக் கொண்டிருந்தாள்.

'ஏய் விஜயகாந், ஏய் விஜய் ரெண்டு பேரும் போயி குளிச்சிட்டு வாங்க. சோறு ஆக்கிட்டேன் கறிவச்சதும் சாப்பிடலாம்' என்று பிள்ளைகள் இரண்டையும் கிணற்றிக்கு விரட்டினாள். 'அம்மா சவுக்காரம் இல்லையே' எப்பிடி குளிக்கிறது விஜயகாந் கேட்க அம்மா 'ஏய் சும்மா மேல தேச்சி குளிச்சிட்டு வாங்க, நாளைக்கு வாங்கிட்டு வந்து தாரேன்' என்றாள். அங்காயின் வாழ்க்கையில் எல்லாமே நாளைக்குத்தான்.

பிள்ளைகள் சென்றதும் கறியை சமைத்து வைத்து விட்டு, ஒரு கறிதான் வைப்பாள் அங்காயி அதை வைப்பதும் அறைகுறையாகத் தான். வறுமையின் கொடுமை அவளை வாட்டிக் கொண்டிருந்தது. களைப்பால் இஸ்தோப்பில் உட்கார்ந்து தன் வாழ்கையை நினைத்தும் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்தும் மனம் நொந்து அழுது கொண்டிருந்தாள். அழுகையும் கண்ணீரும் தான் அங்காயின் அன்றாட வாழ்க்கை.

வழக்கம் போல் ஆறுமுகம் கையில் கோப்பிகத்தியோடு நாலு காலில் குடிபோதையில் தள்ளாடி, தள்ளாடி வீட்டு வாசல் ஏறும் போது, 'எந்த நாளும் இப்பிடி குடிச்சிட்டு வந்தா நம்ம குடும்பம் என்னாகுறது. நீ எல்லாம் ஒரு மனுசனா' என்று அங்காயி கேட்க, அதைக் கேட்ட ஆறுமுகம் ஆவேசமடைந்து, 'அடிபோடி நீயா எனக்கு குடிக்க சல்லி குடுக்கிற, நான் ஒழச்சி நான் குடிக்கிறன் இத மூடிக்கிட்டு பேசாத, எனக்கு சோறு போடு’ என்று சொல்லிக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான்.

அங்காயும் மனவேதனையோடு அவன் பின்னால் சென்று. 'நாளைக்கு பயலுங்க பள்ளி கூடம் போகமாட்டானுங்களாம் கொப்பி புத்தகம் இல்லாமல் வரவேண்டாம் என்று வாத்தியார் சொன்னாராம். ஒங்கிட்ட இருந்தா ஒரு நூறு ரூபா கொடேன்' என்று அங்காய் ஆறுமுகத்திடம் கேட்க. 'ஏய் அங்காயி ஏங்கிட்ட ஒத்தசதம் இல்ல. அதோட நானா அவனுங்கள இஸ்கூலுக்கு படிக்க போகச்சொன்னேன். நீ தானே பள்ளிகூடத்திற்கு போட்ட. எல்லாத்தையும் நீயே பார்த்துக்க. அடுத்து, 'அவனுங்க படிச்சி பாசாகி என்னா கலக்டர் வேலயா பாக்க போறனுங்க, பேசாம போயி எனக்கு சோறு போடு பயித்தியகாரி, இப்ப என்ன பாரு நான் படிச்சா இருக்கேன். நான் நாப்பது வருசமா என்னா பட்டினியாவா இருந்தேன். நல்லா சாப்பிட்டு. நல்லா குடிச்சி நல்லா தானே இருக்னே. நீ என்னா படிச்சி, என்னாத்த கிழிச்சிபுட்ட நீயும் கூலிபோல செஞ்ஞிதானே வயித்த கழுவுற. அப்பறம் ஏண்டி சும்மா பெனாத்திர' என்று குடிபோதையில் கத்திக் கொண்டிருந்தான்.

சோறு போட்டு கொடுக்காவிட்டால். அடி, உதை, கிடைக்கும் என்ற பயத்தால் சோத்தை போட்டு கொடுத்துவிட்டு வாசல்படியை பாத்தாள். பிள்ளைகளை காணோமே என்று. அந்த இளம் சிறார்கள் எந்த கவலையும் இல்லாமல் ஓடிவந்து, 'அம்மா குளிச்சிட்டோம்' என்று கூறிக் கொண்டு வீட்டுக்குள்ளே புகுந்தார்கள்.

பிள்ளைகளுக்கும் சோத்தை போட்டு குடுத்துவிட்டு. 'சாப்பிடுங்கப்பா நான் போயி. மேல கழுவிகிட்டு வாரேன்' என்று வேலை செய்த களைப்பால் மெதுவாக கைவாலியையும் தண்ணி பானையையும் எடுத்துக் கொண்டு கிணற்றுக்கு போகலானாள்.

ஆறுமுகம் போட்ட சோத்தை பாதி தின்றுவிட்டு, ப​ைழய பாயை போட்டு குடிபோதையில் தூங்கி விட்டான். இந்த உலகம் பெரன்டாலும் அவனுக்கு தெரியாது. அதோடு கவலையும் இல்ல,

கிணற்றுக்கு சென்ற அங்காயி தட்டுதடுமாறி கைவாழியை கிணற்றில் போட்டு தண்ணி அள்ளும் நேரம் கால்தடுமாறி கிணற்றில் விழுந்து விட்டாள். அக்கம் பக்கம் இருந்தவர்கள் கூடி அங்காயியை கிணற்றில் இருந்து மேலே எடுத்த போது அங்காயி குற்றுயிரா இருந்தாள். உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோய் சேர்ந்தார்கள் அக்கம் பக்கத்தவர்கள்.

அடுத்த நாள் விடிந்ததும் ஆறுமுகம் விசயத்தை கேள்வி பட்டு பிள்ளைகள் இரண்டையும் விட்டு விட்டு அடுத்த வீட்டு அருக்கானியிடம் ஐநூறு ரூபா வாங்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு போய் பார்க்கும் நேரம் அங்காயி உயிர் பிரிந்து பிணமாக வெள்ளைத்துணியால் மூடி வைத்திருந்தார்கள்.

ஆறுமுகம் செய்வதறியாது திகைத்து நின்றன்.

'அம்மா வருவா. அப்பா கூட்டிக்கிட்டு வரும்' என்ற நப்பாசையில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பிள்ளைகள் இரண்டும்.

எம். மெய்வீரன்

வரக்காகொட

Comments