புதிய மனிதன் | தினகரன் வாரமஞ்சரி

புதிய மனிதன்

பண்டாரவளை நகர மத்தியில் நடந்துகொண்டிருந்த போது கால் தடக்கி விழுந்து விட்டேன். பக்கத்திலிருந்த கடையொன்றின் படிக்கட்டில் தலை அடிபட்டு இரத்தம் வழிந்தது. யாரோ ஒரு இளம் யுவதி ஓடிவந்து என்னை தூக்கி கைதாங்கலாக அழைத்துச் சென்று ஒரு காருக்குள் அமர்த்துவதை உணர்ந்தேன்.

இப்போது கண் விழித்துப் பார்த்தபோது என்னை அவசர சிகிச்சைப் பிரிவில் போட்டிருந்தார்கள். ஒரு டாக்டரும் இரண்டு நர்ஸ்மார்களும் அந்த இளம் யுவதியும் என் கட்டிலருகில் நிற்பது தெரிந்தது எனக்கு சுய உணர்வு வந்துவிட்டதாலோ என்னவோ அந்த டாக்டரும் இரண்டு நர்ஸ்மார்களும் என் அருகிலிருந்து விலகிச் சென்றார்கள். அந்த இளம் யுவதி மாத்திரம் வைத்த விழி வாங்காமல் என்னையே பார்த்துக்கொண்டு என் அருகில் நின்றாள். நான் அவளை உற்றுப் பார்த்தேன்.

என்னால் அவளை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அந்தப் பெண் என்னை மிகுந்த அனுதாபத்தோடு அவதானித்துக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. அவள் ஏதோ நினைத்தவளாக சற்று வேகமாக வெளியே சென்றாள். சுமார் இருபது நிமிடங்கள் சென்றிருக்கும் ஒருபெரிய பொதியை சுமந்தபடி என்னருகில் வந்தாள். எனக்கு தேவையான எல்லாவிதமான பொருட்களும் அந்த பொதியிலிருந்து வெளியே வந்தன ஒவ்வொன்றாக எடுத்து என் கட்டிலருகே இருந்த சிறிய மேசை மீது வைத்தாள். ஒரு சுடுதண்ணீர் போத்தல், இரண்டு பெரிய அழகான போர்வைகள், இரணடு பீங்கான்கள், இரண்டு கோப்கைள், இரண்டு தலையணைகள் குளிரை தாங்கக்கூடிய இரண்டு ஸ்வீட்டர்கள்.

பால் பைக்கட்டுக்கள், பல் துலக்க ப்ரஷ், பற்பசை அத்தோடு சாப்பிட தேவையான கேக், பலகாரங்கள் இன்னும் என்னென்னவோ நான் தடுமாறிப் போனேன். அந்த இளம் பெண்ணையும் அவள் கொண்டுவந்து குவித்த அந்த பொருட்களையும் நான் மாறிமாறிப் பார்த்தேன். எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. கனவுலகில் சஞ்சரிப்பது போல் தெரிந்தது. நான் படுத்திருந்த கட்டிலிலிருந்து என்னை மெதுவாக கீழே இறக்கிவிட்டு, அவள் கொண்டு வந்த போர்வையில் ஒன்றை எடுத்து கட்டிலில் விரித்து, தலையணைகளை சரிசெய்து, என்னை மீண்டும் கட்டிலில் இருக்கச் செய்து, அவள் கொண்டுவந்த கேக் துண்டுகளில் இரண்டை கொடுத்து, சாப்பிடச்செய்து, ஒரு கோப்பையில் பாலையும் ஊற்றிக் கொடுத்தாள்.

சிறு பிள்ளையைப் போல அவளது எல்லா விதமான செயல்களையும் ஏற்றுக்கொண்டு மௌனமாக இருந்தேன். எனக்கு செய்ய வேண்டிய பணிவிடைகளையெல்லாம் செய்து விட்டு வார்ட்டின் முன்னே மேசையருகில் அமர்ந்திருக்கும் அந்த நர்ஸ் அருகே சென்று ஏதேதோ கதைத்தாள். என்னை காட்டி அந்த நர்ஸிடம் என்னென்னவோ கூறினாள். என்னை அவதானித்த அந்த நர்ஸ் சிரித்தபடி தலையை ஆட்டினாள். அந்த நர்ஸின் கைகளை பிடித்து விடைபெற்ற அந்த இளம் யுவதி மீண்டும் என்னை நோக்கி வந்தாள்.

“பப்பா உங்களுக்கு அப்படி ஒன்றும் பெரிய வருத்தம் இல்லையாம் டாக்டர் வந்ததும் டிக்கட் வெட்டுவாங்க” என்றாள். அவள் என்னை “பப்பா” என்று அழைத்தது என்னை என்னவோ செய்தது. தனது மணி பர்ஸை திறந்து இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை என்னிடம் நீட்டிய அந்த யுவதி செல்ல முனைந்தாள். நான் என் இருகைகளாலும் அவளது வலது கரத்தை இறுக பற்றிக் கொண்டேன்!

“மகள் யாரம்மா நீ? ஏன் எனக்கு உதவுகிறாய்?” அதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை. என் நா தழுதழுத்தது என்னையறியாமலேயே என் கண்களிலிருந்து கண்ணீர் பொலபொலவென உதிர்ந்தன. அவள் ஏதுமே கூறாமல் தன் கைகுட்டையால் என் கண்களை துடைத்துவிட்டு மௌனமாக சென்றாள். அவள் செல்வதையே வைத்த கண் வாங்காமல் பார்த்து நின்ற நான் கட்டிலில் சாய்ந்தேன்.

திடீரென்று என் கண் முன்னே தோன்றிய அந்த யுவதியை என்னால் மறக்க முடியவில்லை அவளைப் பற்றிய எண்ணங்களில் ஆழந்து போனேன். சுமார் இருபத்தைந்து வயது இருக்கும் சிவந்த நிறம், உடலுக்கேற்ற பருமன் இளம் ரோஜா நிறத்திலான சாரியும் ஜாகெட்டும் அணிந்திருந்தாள். முழு நிலவு போன்ற சாந்தமான வதனம் நீண்ட கருங்கூந்தல் முத்து போன்ற அழகான அடுக்கான சிறு பற்கள், அழகிய இரு கரு விழிகள் ஒரு தமிழ் பெண்ணுக்கே உரித்தான எல்லா அம்சங்களுமே அவளிடம் அடங்கியிருந்தது.

இப்படிப்பட்ட ஒரு பிள்ளை எனக்கு மகளாக கிடைத்திருக்கக் கூடாதா என்று என் மனம் ஏங்கியபோது, என் கடந்த கால வாழ்க்கை என் மனக் கண் முன்னே நிழலாடத் தொடங்கியது. என் கடந்த கால வாழ்க்கை பற்றிய எண்ணங்களில் ஆழ்ந்து போனேன். யாரும் எவரும் தங்களது குழந்தைகளை பேணிப் பாதுகாத்து நல்ல முறையில் வளர்த்து ஆளாக்கி படிக்க வைத்து செல்வ செழிப்போடு வாழ வைக்க தான் முற்படுவார்கள்.

அந்த அடிப்படையில் பார்க்கும் போது ஒரு தேயிலை தோட்டத்து உத்தியோகத்தரான என் அப்பாவும் என்னை பெருமகனாக உருவாக்கத்தான் முற்பட்டிருக்கிறார். அதில் அவர் வெற்றியும் கண்டார் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு தோட்ட நிர்வாகியாக நான் உயர்ந்த போது எனது அந்தஸ்தும் கூடியது. எனக்கு அறிமுகமற்ற பலரும் என்னைத் தேடி வந்தார்கள். இந்த சந்தர்ப்பத்தில் தான் எங்கிருந்தோ வந்து என் வாழ்க்கையில் குறுக்கிட்டாள் நித்யா அவள் தமிழ் வித்தியாலய அதிபரின் மகள்.

அந்த தமிழ் வித்தியாலய கலை நிகழ்ச்சி ஒன்றின் போதுதான் நான் முதள் முதலாக அவளை சந்தித்தேன். அழகே உருவான ஒரு தேவதை போல் காணப்பட்டாள். அவளை கண்ட மாத்திரமே என் உள்ளத்தை அவளிடம் நானே பறிகொடுத்துவிட்டேன்

அங்குமிங்கும் ஓடியாடி கலை நிகழ்ச்சிகளின் வேலைகளை அவதானித்துக் கொண்டிருந்தாள். என்னருகில் வந்து என்னை அழைத்துச் சென்று, சிற்றுண்டிகளை பரிமாறி குளிர்பானமும் கொண்டு வந்து கொடுத்தாள். தாராளமாக சிரித்து கதைத்து பேசினாள். எனக்கு அவளை பிடித்திருந்தது போலவே அவளுக்கும் என்னை பிடித்திருப்பதை என்னால் உணர முடிந்தது. நாளடைவில் நானும் அவளைத் தேடிச் சென்றேன் அவளும் என்னை தேடி வந்தாள் நாட்களும் ஓடின!

எனது பெற்றோரின் சௌக்கிய நிலை கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டங்காணத் தொடங்கின. அம்மா என் திருமணத்தைப் பற்றி அடிக்கடி பேசத் தொடங்கினார். அப்பாவும் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு இருமத் தொடங்கினார். நான் என் விருப்பத்தை அம்மாவிடம் கூறினேன். இரு பக்கத்தினரது விருப்பத்தோடு நித்யாவினதும் எனதும் திருமணம் வெகுவிமரிசையாக நடந்தேறியது. இப்போது என் மனைவி நித்யா என் மீது உயிரையே வைத்திருந்தாள்.

நான் இல்லாமல், என்னைக் காணாமல் அவளால் ஒரு நாள் கூட இருக்க முடியவில்லை! நான் எந்த ​ெஜன்மத்தில் செய்த புண்ணியமோ தெரியவில்லை எனக்கு இப்படி ஒரு மனைவி கிடைத்திருக்கிறாள் என்று எண்ணி நான் பெருமகிழ்ச்சியடைந்தேன். தேனும் பாலும் கலந்தது போல உடலும் உயிரும் போல நானும் நித்யாவும் இருவரல்ல ஒருவராய் எண்ணித்தான் வாழ்ந்து வந்தோம்.

இந்த சந்தர்ப்பத்தில் மனைவி நான் பூரிக்கும் ஒரு செய்தியை என்னிடம் சொன்னாள். அது தான் நான் ஒரு அப்பாவாகப் போகும் செய்தி. அப்படியே அவளை அள்ளி அனைத்துக் கொண்டேன். மறுநாள் நான் ஆபீஸுக்கு வந்தபோது தபாலில் ஒரு சிறிய பார்சல் வந்திருந்தது. அதை பிரித்துப் பார்த்தேன். கட்டுக்கட்டாக காதல் கடிதங்கள். அவ்வளவும் என் மனைவியின் கையால் எழுதப்பட்டவை.

இதில் ஒரு வித்தியாசம் என்னவெனில் அந்தக் கடிதங்கள் அத்தனையும் ரோனியோ செய்யப்பட்ட பிரதிகள். அப்படியானால் அந்தக் கடிதங்களின் மூலப்பிரதி அனுப்பியவர்களிடம் இருக்கிறது. வானமே இடிந்து என் தலையில் விழுந்து போல இருந்தது எனக்கு. எனது ஜீப்பை எடுத்துக்கொண்டு பங்களாவுக்கு ஓடினேன். நித்யாதான் முன்னே எதிர்ப்பாட்டாள். “இது வெல்லாம் என்ன நித்யா" என்று ஆத்திரத்தோடு அவளது முகத்தில் வீசியெறிந்து விட்டு, மீண்டும் ஆபீஸுக்கு வந்தேன்.

ஆபீஸிலும் என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. மீண்டும் பங்களாவிற்கு வந்தேன். பங்களா மூடிக்கிடந்தது. என் பாக்கெட்டில் இருந்த சாவியை எடுத்து கதவைத் திறந்து உள்ளே சென்றேன். எல்லா அறைகளையும் தேடிப் பார்த்துவிட்டு நித்யாவின் அறையைப் பார்த்தேன். அது திறந்து கிடந்தது?

உள்ளே ஓடினேன் அங்கும் அவள் இல்லை. தேடிப் பார்த்த போது அவளுக்கு தேவையானவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டு அவள் சென்றிருப்பது தெரிந்தது. வேலைக்காரனை அழைத்துக் கேட்டேன். நோனா ஒரு “வீலை” வரவழைத்து எங்கோ போனார்கள் என்றான். நான் நிலை தடுமாறிப் போனேன். நாட்களும் ஓடின. என்னால் அவளை தேடிப்பிடிக்க முடியவில்லை!

அவளை மறக்க நான் மதுவை நாடினேன். நாளடைவில் என் தோட்டத்து நிர்வாகப் பணி பறி போனது. அப்பாவும் அம்மாவும் ஒரு சிறுவாடகை வீட்டில் குடியிருந்தார்கள். ஏனெனில் மலையக தோட்டங்களில் உத்தியோகத்தர்களாக பணிபுரிபவர்கள் அவர்கள் பென்ஷன் எடுத்ததும் அவர்கள் வசதியாக வாழ்ந்த வீடுகளில் தங்க முடியாது. அவற்றை குவாட்டர்ஸ் என்று கூறுவார்கள். தோட்ட நிர்வாகம் அவர்களை வெளியேற்றிவிடும். கிராமங்களில் எங்காவது குடிசைகளையாவது தேடிக்கொண்டு போகத்தான் வேண்டும்.

காலம் யாரைத்தான் விட்டு வைத்தது? அம்மாவும் அப்பாவும் அடுத்தடுத்துப் போய்விட்டார்கள். அவர்களது ஒரே பிள்ளையான நான் அனாதையாகிவிட்டேன். இப்போதெல்லாம் என்னைத் தேடி யாரும் எவரும் வருவதில்லை.

உற்றார், உறவினர்கள் கூட கண்டதும் காணாதவர்கள் போல் சென்றார்கள். அப்பாவும் அம்மாவும் குடியிருந்த அந்த சிறிய வாடகை வீடு தான் எனக்கு இப்போது தஞ்சமடைய கிடைத்தது. அதன் சொந்தக்காரர் ஒரு சிங்கள புண்ணியவான். சில்வா மஹத்தயா நான் உயிரோடு இருக்கும் வரை அந்த வீட்டில் இருக்க அனுமதி கொடுத்தார். சீரும் சிறப்போடும் வாழ்ந்து கெட்டுப்போனவர்களையும் ஆதரிக்க யாராவது இருப்பதும் அபூர்வமே.

“பப்பா இப்ப எப்படி உங்களுக்கு” என்று அழைக்கும் குரல் கேட்டு, என் சிந்தனையிலிருந்து விடுபட்ட நான், தலையை திருப்பினேன். என் அருகே அந்த யுவதி சிரித்தபடி நின்றாள். எனக்கு தெய்வத்தை கண்டதுபோல் இருந்தது. எந்த விதமான பதிலையும் எதிர்பாராது, அவள் கொண்டுவந்த எல்லா பொருட்களையும் மூட்டை கட்டினாள்.

எனக்கு ஒரு புதுசாரத்தையும் ‘​ேஷர்ட்’டையும் அணிவித்தாள். நர்ஸிடம் சென்று என்னென்னவோ கதைத்தாள். மீண்டும் என்னிடம் வந்தாள். மூட்டை கட்டிய பொருட்களையெல்லாம் அள்ளிக்கொண்டு வெளியே போனாள். சற்று நேரத்தில் மீண்டும் என்னருகே வந்து, என்னை அழைத்துக் கொண்டு வெளியே வந்து அவளது காருக்குள் அமரவைத்தாள். அவளே காரை ஓட்டினாள். சிறிது நேரத்தில் கார் ஒரு அழகான வீட்டின் முன்னே வந்து நின்றது. அந்த யுவதி என்னை காரிலிருந்து இறக்கி, என்னை உள்ளே அழைத்துச் சென்றாள். உள்ளே சென்ற நான் திடுக்கிட்டு அதிர்ந்து போய் நின்றேன்.

நான் விழுந்து விடாமல் என்னை அந்த யுவதி தாங்கிப் பிடித்துக் கொண்டாள். என்ன ஆச்சரியம் என்னால் நம்பவே முடியவில்லை அங்கே ஹாலில் நித்யாவின் ஒரு பெரிய படம் மாலை போடப்பட்ட நிலையில் காணப்பட்டது.

ஒன்றும் விளங்காமல் நான் அந்த யுவதியை பார்த்தேன். அவள் பேசினாள் “பப்பா இந்த நித்யா உங்க மனைவி தானே?” என்றாள் என்னைப் பார்த்து. நான், ஆம் என்பதற்கு அறிகுறியாக தலையை ஆட்டினேன். “அந்த நித்யா தான் என் அம்மா. நீங்க தான் என் அப்பா” என்றாள். “மகளே” என்று பாய்ந்து என்னையறியாமலேயே நான் என் மகளை ஆதங்கத்தோடு, இறுகத் தழுவிக்கொண்டேன். இப்போது நான் மட்டுமல்ல என் மகளும் அழுதாள்!

என் உடல் நடுங்குவதை அவதானித்த மகள் என்னை பக்கத்திலிருந்த சோபாவில் அமர்த்திவிட்டு, அவளும் என் அருகே அமர்ந்தாள் “மகள் அம்மா" என்றபடி நான் என் மகளின் முகத்தைப் பார்த்தேன். மகள் பேசினாள். “உங்களிடமிருந்து பிரிந்த அம்மா, வீட்டுக்கு வரவும் அப்பா அதாவது அம்மாட அப்பா லண்டனுக்கு அம்மாவ அனுப்பிட்டாராம். பதினைஞ்சு வருஷத்துக்கு பிறகு தான் நாங்க இங்க வந்தோம். பப்பா தாத்தா பென்ஷன் எடுத்து இந்த வீட்ட எங்களுக்கு கட்டி கொடுத்தாரு, தாத்தா பாட்டி எல்லாம் போயிட்டாங்க” என்றாள். மகள் இன்னும் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லை.

நான் மகளை ஏறெடுத்துப் பார்த்தேன். என் பார்வையை புரிந்துகொண்டவள் போல பேசினாள் “பப்பா அம்மா இதே கார் ஆக்ஸிடென்ட்”ல போயிட்டாங்க. அம்மா இறக்கு முன் உங்களப் பற்றிய எல்லா விபரங்களையும் சொல்லி உங்களை பிற்காலத்துல கவனிக்கச் சொன்னாங்க” என்றாள்.

நித்யாவை காண வேண்டும் என்ற நப்பாசையால் தான் நான் என் உயிரை இவ்வளவு காலம் காப்பாற்றி வந்தேன். நித்யா உயிரோடு இல்லை. இனி நான் என்ன செய்வது? இளமைக் காலத்தில் சற்றும் யோசிக்காமல் நித்யா செய்த தவறு, அவளையும் பாதித்து என்னையும் பாதித்து மகளையும் பாதித்துவிட்டதை எண்ணிப் பார்க்கும் போது நெஞ்சே வெடித்துவிடும் போல் இருக்கிறது. எது எப்படியிருந்தாலும் யாருமில்லாமல் தனித்து நிற்கும் என் மகளது எதிர்காலம் கருதியாவது, நான் வாழத்தான் வேண்டும்? என் கடமை உணர்வு என்னை புதிய மனிதனாக்கி விட்டது!

Comments