இலங்கை அணி நியூசிலாந்தில் சாதிக்குமா? | தினகரன் வாரமஞ்சரி

இலங்கை அணி நியூசிலாந்தில் சாதிக்குமா?

சொந்த மண்ணில் ஏற்பட்ட தொடர் தோல்விகளின் பின் இலங்கை அணி நீண்ட கால தொடர்களில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு கடந்த வாரம் பயணமானது. முதல் டெஸ்ட் போட்டி இவ்வார இறுதியில் ஆரம்பமாகவுள்ளது. அத்தொடரில் இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள் போட்டிகள், ஒரே ரி/20 போட்டிகளில் விளையாடும் இலங்கை அணி அத்தொடர் முடிவில் அவுஸ்திரேலியாவுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு அங்கு இரண்டு டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் மோதவுள்ளது. அத் தொடர் முடிய தென்னாபிரிக்க சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளும் இலங்கை அங்கு டெஸ்ட், ஒரு நாள் தொடர்களில் மோதவுள்ளன.

அண்மையில் முடிவுற்ற இங்கிலாந்து அணியுடனான தொடர் தோல்வியின் பின் புதிய தேர்வுக்குழு, புதிய முகாமையாளர் என வழமையான- அதிரடியான மாற்றங்களைச் செய்து டினேஷ் சந்திமாலின் தலைமையில் கடினமான இச்சுற்றுப் பயணத்தில் கலந்து கொள்கிறது.

இலங்கை அணியில் மஹேல, சங்கக்கார, தில்ஷான் போன்ற வீரர்கள் ஓய்வுபெற்று சுமார் நான்கு ஐந்து வருடங்கள் கடந்தும் இன்னும் நிரந்தரமான துடுப்பாட்ட வீரர்களை இனம்காண முடியாமல் தடுமாறுகின்றது. இவர்களின் ஓய்வின் பின் இலங்கை அணி சொந்த மண்ணிலும், அந்நிய மண்ணிலும் மூவகைத் தொடர்களிலும் பின்னடைவுகளைச் சந்தித்து வருகின்றன. ஆனால் கடந்த காலங்களில் சொந்த மண்ணில் இலங்கை அணி டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக விளையாடி வந்தாலும் அண்மைக்காலமாக அதிலும் சோபையிழந்துள்ளதைக் காணக்கூடியதாகவுள்ளது.

கடைசியாக முடிவுற்ற இலங்கை – இங்கிலாந்து தொடரில் டெஸ்ட் வரலாற்றில் முதன் முறையாக அவ்வணியிடம் முழுத் தொடரையும் இழந்த முதல் சந்தர்ப்பமாக இத்தொடர் அமைந்தது.

கடந்த காலங்களில் வெளிநாட்டு அணிகள் இலங்கையில் டெஸ்ட் தொடர் என்றால் முகத்தைச் சுளித்துக் கொள்ளும் அளவுக்கு இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சு பலம் அமைந்திருந்தது. இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்க போன்ற பலம்வாய்ந்த அணியாகவிருக்கட்டும் இலங்கை மண்ணில் அடங்கித் தான் போனார்கள். இவ்வணிகள் மட்டுல்ல பிரபல ஆசியப்பிராந்திய அணிகளான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் கூட இங்கு வந்தால் அடக்கித்தான் வாசித்தார்கள். அந்தளவுக்கு இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சும், எதிரணியின் சுழற்பந்துகளுக்கு நமது துடுப்பாட்ட வீரர்களின் எழுச்சியுமே காரணமாகும்.

அண்மைக்காலமாக இலங்கை மண்ணில் டெஸ்ட் பெறுபேறுகள் சாதகமாக இல்லை. ஒருகாலத்தில் சொந்த மண்ணில் புலியாக இருந்த இலங்கை தற்போது அடங்கிப் போகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக, 2017ம் ஆண்டின் பின் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய வகையில் இலங்கை டெஸ்ட் பெறுபேறுகள் அமையவில்லை. அவ்வாண்டு பங்களாதேஷ் அணியுடனான தொடரை 1−1 என்ற ரீதியில் சமநிலையில் முடித்துக் கொண்ட இலங்கை அணி அதற்குப் பின் கத்துக்குட்டியான சிம்பாப்வேயுடன் நடைபெற்ற ஒரே போட்டியையும் மிகவும் சிரமப்பட்டு வெற்றிபெற்றது. அதன் பின் இந்தியாவுடன் நடைபெற்ற தொடரை 3−0 என்ற தோல்வியுற்றது. அதன் பின் தென்னாபிரிக்காவுடன் தொடரை வென்றாலும், தொடர்ந்து சுழற்பந்து வீச்சில் சொதப்பும் இலங்கிலாந்து அணியிடம் 3-−0 என்ற ரீதியில் வெள்ளளையடிக்கப்பட்டது.

பொதுவாக இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் இலகுவாக சுழற்பந்து வீச்சை எதிர்கொண்டு ஓட்டங்களைப் பெறக் கூடியவர்கள். இது இலங்கையில் டெஸ்ட் புள்ளிவிபரங்களைப் பார்த்தால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் அண்மைய பெறுபேறுகளைப் பார்த்தால் இலங்கை துடுப்பாட்டமும் சுழற்பந்து வீச்சுக்கு தடுமாறுவதைக் காணக் கூடியதாகவிருக்கின்றது.

பலம்மிக்க 8 டெஸ்ட் நாடுகளில் கடந்த இரு வருட காலமாக சுழற்பந்தை மோசமாக எதிர்கொள்ளும் நாடுகளில் மூன்றாவது நாடாக நமது அணியுள்ளதாக புள்ளிவிளரங்கள் காட்டுகின்றன.

இக்காலப்பகுதியில் இலங்கை அணி மட்டுமல்ல உலகில் ஏனைய அணிகளும் சுழற்பந்துவீச்சுக்கு முகம்கொடுப்பதில் அசமந்தப் போக்கையே காட்டுகின்றது. சுழற்பந்து வீச்சை அடித்து ஆடும் இந்திய அணி கூட அண்மையில் இங்கிலாந்தில் சுழற்பந்து வீச்சில் சிக்கி தொடரை இழந்திருந்தது.

அண்மையில் முடிவுற்ற இங்கிலாந்து-இலங்கைத் தொடரில் கூடிய ஓட்டங்கள் குவித்த 5 வீரர்களில் முதல் நான்கு வீரர்கள் இங்கிலாந்து வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில் அறிமுக வீரர் பென் போக்ஸ், ஜோஸ் பட்லர், கீட்டன் ஜென்னிங்ஸ் போன்ற வீரர்கள் இன்னும் 15 டெஸ்ட் போட்டிகளில் கூட களமறங்காதவர்களே. இத் தொடரில் பெறப்பட்ட நான்கு சதங்களும் இங்கிலாந்து வீரர்களே பெற்றனர்.

குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, டில்ஷான் போன்ற சுழற்பந்து வீச்சுக்கு முகம்கொடுத்த சிறந்த வீரர்களின் ஓய்வின் பின் அப்படியான வீரர்களை உருவாகாமல் போனதே இலங்கை அணியின் தொடர் தோல்விகளுக்கு முக்கிய காரணமாயமைந்துளளது.

டெஸ்ட் தொடர்களில் மட்டுமல்ல ஒரு நாள் தொடர்களிலும் கடந்த காலங்களில் பின்னடைவையே சந்தித்துள்ளது.

இலங்கை அணி சொந்த மண்ணில் கடைசியாக 2015ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக நடைபெற்ற தொடரில் 3-−0 என்ற கணக்கில் வென்றதன் பின் நடைபெற்ற எல்லாத் தொடர்களிலும் தோல்வியையே சந்தித்துள்ளது. இக்காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவுடன் 4−1, சிம்பாப்வேயுடன் 3 -2, இந்தியாவுடன் 5−0, தென்னாபிரிக்காவுடன் 3−2, இங்கிலாந்துடன் 3−1 என்ற ரீதியில் தோல்வியுற்றுள்ளதுடன் இக்காலப்பகுதியில் பங்களாதேஷுடன் நடைபெற்ற தொடர் மட்டுமே 1−1 என்ற ரீதியில் சமநிலையில் முடிவுற்றுள்ளது. இக்காலப்பகுதியில் இலங்கை அணி சொந்த மண்ணில் 31 போட்டிகளில் 10ல் மட்டுமே வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில் இலங்கை அணி தொடர்ந்து மூன்று நாடுகளுக்குமிடையிலான தொடர்களை வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களிலேயே விளையாடவுள்ளது. எமது வேகப்பந்து வீச்சு அனுபவ வீரர் சுரங்க லக்மாலை முன்னிலைப்படுத்தி லஹிரு குமார, நுவன் பிரதீப், கசுன் ராஜித, துஷ்மந்த சமீர ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் திறமையான பந்துவீச்சிலேயே சாதகமான முடிவுகளை எதிர்பார்க்கலாம்.

 

எம்.எஸ்.எம். ஹில்மி

Comments