வாப்பாட கடிதம் | தினகரன் வாரமஞ்சரி

வாப்பாட கடிதம்

அன்புமகன் ஜெமீல் அறிவது, மகன் நீ கஷ்டப்பட்டு எனது மூன்று பெண் மக்களையும் கரைசேர்த்தாய் இப்போது உன்னைப் பற்றியோ, தாய், தகப்பனைப் பற்றியோ அவர்களுக்கு எந்தக் கவலையுமில்லை. இன்னும் அவர்களுக்குக் கொடுத்தது காணாது என்பது போல் உனக்கா, எனக்கா என்ற ஏற்றத்தாழ்வுடன், தாழ்வுச்சிக்கலில் தவிக்கின்றனர். உன் மூன்று உடற் பிறப்புகளும், வீட்டை விட்டு வெளியிறங்கியிருக்கின்றோம். மாமி, மகன், நீ நல்லா இருக்க வேண்டும்.

உன் திருமணத்தை பார்த்த பின்பு தான் எங்களது ஆவியும் அடங்கும். மகன் இத்தனை நாளா உன்னை வைத்திருந்ததற்கு என்னை மன்னிச்சிக்க... உம்மாவுக்கு இத யோசிச்சி, சீனியும் குளொஸ்ரேளும் நெஞ்சி வருத்தமும் வந்திரிக்கி, எனது பென்சன் பணம் முப்பதினாயிரமும் காணாது போல் தெரிகின்றது. நீ உன் சம்பளத் தொகையை சேகரித்து தாலி கூறையை வாங்கு. மகன் உன்னை நினைத்தால் தான் எங்கள் மனம் பதறுது. நன்றி கெட்ட பெண் பிள்ளைகள் மூன்றும், எம்மைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல், தங்களது பொருளாதாரத்தில் கண்ணாயிருக்கின்றனர்.

இறைவனும் கூறிவிட்டான் பிள்ளைகளும் சோதனை பொருள் என்பதாக, நினைத்தால் வயிறு பற்றி எரிகின்றது. உன் தாய்தான் இரவுகளை பகலாக்கி தன் உடம்பையே போக்கிவிட்டா, உன் மச்சான்மார்களுக்கும் இன்னும் நீ உழைத்து அனுப்பினாலும், எடுத்துக் கொள்வார்கள்போல் நன்றி கெட்டதுகளின் சப்ஜெக்டுகளே, இனி நமக்குத் தேடவல்ல மகன் உடம்ப பாத்துக்க, எதையும் யோசிக்காத படைத்தவன், நாட்டப்படி எல்லாமே நடக்கும், இப்படி எமது தலையில் எழுதிவிட்டான் போல் இருந்தும், எம் மனச்சாட்சி நன்மைக்குரியதே. நீ கவலப்படாத மகன். இந்த வீட்டில் எல்லாம் இருக்கு எங்களுக்கு, எந்தத் தேவையுமில்லை. உன் வாழ்க்கைக்காக கொஞ்சம் சேமி மகன் முடிக்கிறேன். உடம்பை பார்த்துக்கொள்.

ஆம், சீனிமாஸ்ரர் ரெம்ப நல்ல மனிதர் அவர் ஒரு கிளறிக்கல் சேவன்ட் தனது மூன்று பெண் மக்களின் படிப்பு வீடு கட்டுவது திருமணம், இவைகளை நினைத்து. ஏங்கிப்போன சீனி மாஸ்ரரின் மகன் ஜெமீல் அவனையும் தன் சகோதரிகளின் எதிர்காலம் என்ற நோய் ஜெமீலையும் பீடித்தபோது அவனின் படிப்பை ஏ. எல்லுடன் நிறுத்திவிட்டு தனது பத்தொன்பதாம் வயதில் வெளிநாடு என்ற விமானத்தில் ஏறினான், மூன்று சகோதரிகளுக்கும் படிப்பு. வீடுவாசல் சீதனம் என்று சொல்லி அனைத்தையும் தன் தலையில் தொப்பியாக அணிந்து கொண்டு வெளிநாட்டில் கஷ்டப்பட்டான் ஜெமீல்.

ஒன்றன்பின் ஒன்றாக தன் சகோதரிகளை திருமணமெனும் அந்தஸ்தை வழங்க காலாக இருந்தான். புது வீடுகளும், புது வாழ்க்கைகளும், சகோதரிகள் தாய், தகப்பன், சகோதரன் போன்றோர்கள் இனி ஏனோதானோ என்ற ரீதியில் புது வாழ்க்கையில் புனிதம் இழந்து மகிழ்ந்தனர். கடைசி தங்கையின் திருமணம் முடித்துவிட்டு முப்பத்தி ஐந்து வயதில் தனக்காக ஏதும் தேடும் நோக்கம் தாய், தகப்பனுடைய திருப்திக்காகவும், ‘தனக்கு ஒரு துணை என்ற தலையங்கத்தில் அவன்... கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும்போது, தனது தந்தையில் கடிதம் அவனை எங்கோ கொண்டு சென்றது.

நேற்றுத்தான் நம்மட சீனி மாஸ்ரர் மகன் வாப்பாவோட பேசினதாம். ஹாட்ட டேக் வந்து, சவூதிலே மவுத்தாகிக் கிடந்த யாமே அசனார் மாஸ்ரர் தனது நண்பன் றசாக் மாஸ்ரரைப் பார்த்து பேசிக் கொண்டிருந்து அப்படி இருக்கும்போது, சீனி மாஸ்ரசின் மகன் சவுதியில் காலமான செய்தி பள்ளி இஸ்பீக்கரில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. மையத்தை அடக்கம் செய்யதினம் பின்பு அறிவிக்கப்படும் என்ற செய்தியும் கூறப்பட்டதும் சா.... என்னும் பதமே எல்லோர் வாயிலிருந்து வரும் சுருதியானது.

உண்மைகளை விளங்கிக் கொண்ட ஊர் உறங்கிக்கிடந்தது. சீனி மாஸ்ரரும் மனைவியும் தம் சொந்த வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு, அவரது தங்கை வீட்டில் வசிப்பது இன்னும் செய்திகளின் காரசாரமாக ஒலிபரப்பு செய்து கொண்டிருந்தது. அந்த ஊர் ஓ... மக்களின் ஓரக்கண்பட்டு, கேவலம் என்ற ஊருக்குள் புகுந்து கொண்டனர். சீனி மாஸ்ரரின் மூன்று பெண் மக்களும், மருமகன்மாரும், சீனி மாஸ்ரர் இருந்த அவர் தங்கள் வீட்டிற்கே சென்று கொண்டிருந்தனர். அப்போதெல்லாம் மக்கள் காறித்துப்பினர் ஏதோ ஒன்றிற்காக,

மூன்று பெண்மக்களும், மக்களின் கடைக்கண் பார்வையில் சிக்குண்டு தாய், தகப்பன் வாழுமே அந்த வீட்டின் ஒவ்வொரு மூலையில் ஒருவராக அமர்ந்திருந்தனர். சீனி மாஸ்ரரும் அவர் மனைவியும் காற்றில் எங்கோ சருகாகிப் பறந்து கொண்டிருந்தனர். ஜெமீல் அந்த ஊர் என்னும் பத்திரிகையில் செய்தித்தலைப்பாக ஆனார். அதிகமானவர்களின் ஆசை மையத்து இலங்கைக்கு வரவேண்டும். அதுவும் சீனிமாஸ்ரர் இருக்கும். அவர் சகோதரியின் வீட்டுக்கே வரவேண்டும், மக்கள் அவர் பெண் மக்கள் அவர்களின் கணவன்மாரையும் சமூகம் காறித்துப்ப வேண்டும் என்று விரும்பினர்.

அதேபோன்று சீனி மாஸ்ரரின் ஆறு சகோதரர்களும் விரும்பினர். அதன் பலனாக ஒருவாரத்தின் பின் ஜெமீலின் மையத்து அவன் மாமியின் வீட்டுக்கே வந்திறங்கியது. கேவலம் கெட்ட உறவுகளின் பேச்சி அந்தக் கிராமத்தில் மழையாகப் பொழிந்தது. வானமும் அத்துக்கத்துக்காக கண்ணீர் சிந்தியது. இந்த நிலைமைக்குக் காரணமே நமது சமூக அமைப்புத்தான் என்று எல்லோருமே பேசிக்கொண்டனர். கவலையடைந்தனர்.

தனது சகோதரிகளுக்காக மெழுகுதிரியாக கறிவேப்பிலையாக, சந்தனமாக, ஊது பத்திகளாக தங்களையே அழித்து மற்றவர்களுக்கு மணம் கொடுப்பவர்களாக எத்தனையே ஆண் சகோதரர்கள் இன்று வெறுகையோடு உலாவுகின்றனர். மேலும் எத்தனையோ, தாய், தகப்பன்மார் நடுறோட்டில் நிற்கின்றனர். சே... இப்படியும் இரத்த உறவுகளா? ஊர் முழுவதும் ஜெமீலின் முப்பத்தி ஐந்து வயதை புதுப்பித்துக் கொண்டிருந்தனர். ஆனால் சீனிமாஸ்ரர் மகனுக்கு அந்தக் கடிதத்தை ஏன் எழுதினேன். என் மகனின் மௌத்துக்கு நான் தான் காரணமென்று யாருக்கும் தெரியாமல் சொல்லிக் கொண்டிருந்தார்.

Comments