அகில இலங்கை சிறுவர் மெய்வல்லுனரில் அல்பியன் தமிழ் வித்தியாலயம் சம்பியன் | தினகரன் வாரமஞ்சரி

அகில இலங்கை சிறுவர் மெய்வல்லுனரில் அல்பியன் தமிழ் வித்தியாலயம் சம்பியன்

கல்வி அமைச்சும்,கல்வி அமைச்சின் சுகாதாரம்,உடற்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை பிரிவும், நான்காவது தடவையாக ஏற்பாடு செய்த அகில இலங்கை பாடசாலைகள் சிறுவர் மெய்வல்லுநர் போட்டிகளின் தரம் 5 ஆண்கள் பிரிவில் ஹட்டன் - கினிகத்தேன கனிஷ்ட வித்தியாலயம் முதலிடத்தைப் பெற்றுக்கொள்ள, அக்கரைப்பற்று ஆண்கள் அரசினர் முஸ்லிம் பாடசாலை இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

இதன் பெண்கள் பிரிவில் கொட்டாவ தர்மபால கல்லூரி சம்பியன் பட்டத்தை வெற்றி கொள்ள,கலப்புப் பிரிவில் எம்பிலிப்பிட்டிய விஜேரிய கனிஷ்ட வித்தியாலம் சம்பியனாகத் தெரிவாகியது.

தரம் 5 கலப்புப் பிரிவில் வவுனியா நொச்சியா மொடை வித்தியாலயம் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

கலப்பு பிரிவில் நுவரெலியா அல்பியன் தமிழ் வித்தியாலயம் முதலிடத்தைப் பெற்று தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் குறித்த பிரிவில் சம்பியன் பட்டத்தை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

தரம் 3, 4 மற்றும் தரம் 5 ஆகிய வகுப்புகளில் கல்வி பயிலும் பாடசாலை மாணவர்களுக்கிடையில் விளையாட்டு ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில் நெஸ்லே லங்கா நிறுவனத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற இவ்வருடத்துக்கான அகில இலங்கை பாடசாலைகள் சிறுவர் மெய்வல்லுநர் போட்டிகள் கண்டிபோகம்பரை மைதானத்தில் கடந்த 09ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை நடைபெற்றது.

இம்முறைபோட்டிகளில் நாடளாவிய ரீதியிலிருந்து தகுதிபெற்ற சுமார் ஆறாயிறம் மாணவர்கள் பாடசாலைகள் சிறுவர் மெய்வல்லுநர் போட்டிகளில் பங்குபற்றியிருந்ததுடன், இதில் தரம் 3ஐச் சேர்ந்த 2,592 மாணவர்களும்,தரம் 4ஐச் சேர்ந்த 2,592 மாணவர்களும்,தரம் 5ஐச் சேர்ந்த 2,592 மாணவர்களும் பங்குபற்றியிருந்தமைகுறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, கடந்தகாலங்களைவிட இம்முறைபோட்டித் தொடரில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த பாடசாலைமாணவர்கள் பங்குபற்ற்யிருந்தனர்.

இதில் தரம் 3 மற்றும் 5 ஆண்கள் பிரிவில் முறையே 293 மற்றும் 422 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட ஹட்டன் - கினிகத்தேன கனிஷ்ட வித்தியாலயம் சம்பியன் பட்டங்களை வெற்றி கொண்டது.

இதில் அக்கரைப்பற்று ஆண்கள் அரசினர் முஸ்லிம் பாடசாலைதரம் 5 ஆண்கள் பிரிவில் பலத்த போட்டியைக் கொடுத்து இரண்டாவது இடத்தையும், தரம் 3 ஆண்கள் பிரிவில் 4ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டது. தரம் 3 மாணவர்களுக்கான கலப்பு பிரிவில் நுவரெலியா அல்பியன் தமிழ் வித்தியாலயம் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக் கொண்டது.

இப்பிரிவில் மலையக பாடசாலைகளான கொத்மலை ஆனந்த திஸாநாயக்க கனிஷ்ட வித்தியாலயம் இரண்டாவது இடத்தையும், ஹட்டன் க்ளீவேர்டோ தமிழ் வித்தியாலம் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டன.

தரம் 5 கலப்புப் பிரிவில் 430 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டஎம்பிலிப்பிட்டிய விஜேரிய கனிஷ்ட பாடசாலை முதலிடத்தைப் பெற்றுக்கொள்ள, 417 புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட வவுனியா நொச்சியா மொடை வித்தியாலயம் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

குறித்தபிரிவில் நுவரெலியா மேல் நிலை கிரேன்ட்லி தமிழ் வித்தியாலயம் 4ஆவது இடத்தையும்,மன்னார் ஈச்சலவாக்கை தமிழ் கலவன் அரசினர் பாடசாலை 5ஆவது இடத்தையும், கிளிநொச்சி அக்கராயன் மகாவித்தியாலயம் 7ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டன.

இதன்படி. கடந்த மூன்று நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்ற இம்முறை சிறுவர் மெய்வல்லுனர் போட்டித் தொடரின் பரிசளிப்பு நிகழ்வுக்கு பிரதம அதிதியாக,மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் திலக் ஏக்கநாயக்க, கல்வி அமைச்சின் விளையாட்டுத்துறை விசேட ஆலோசகர் சுனில் ஜயவீர, நெஸ்லே லங்கா நிறுவனத்தின் கூட்டாண்மை விடயங்களுக்கான உதவித் தலைவர் பந்துல எகொடகே ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன்,வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களையும் வழங்கிவைத்தனர்.

Comments