நன்றிகள் சாவதில்லை | தினகரன் வாரமஞ்சரி

நன்றிகள் சாவதில்லை

நேரகாலத்தோடு கடையைத் திறந்து வியாபாரம் செய்வதற்காக கடையின் திறப்பைக் கொடுத்து அனுப்பி வைத்தார் மசூர் ஹாஜியார். 

கைத்தறி உற்பத்திப் பொருட்கள் மூலப்பொருட்கள் விற்பதில் நீண்ட கால அனுபவம் உடையவராகையால் நம்பிக்கை நாணயம் உள்ளவர்களிடம் மட்டும் கொடுக்கல், வாங்கல்களில் தொடர்புகளை வைத்திருப்பார். அதனால் பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. 

நெசவுத் தொழிலை தகப்பனிடத்தில் நல்ல முறையில் கற்றுக் கொண்டதால் அதுபற்றி யாரும் முறைகேடாக நடந்து கொள்ள முடியாது. அக்குவேறு ஆணிவேராக எல்லாமே கைவந்த கலை அவருக்கு. 

மசூர் ஹாஜியாரின் உற்பத்திப் பொருட்களுக்கு தனியொரு இடம். அதை வெற்றி கொள்ள பலர் முயன்றும் முடியாமல் போயிற்று. பொய்களைச் சொல்லி பொருட்களை விற்பதை கண்டிப்பாக வெறுத்து உண்மைக்கு உண்மையாக நடந்து கொள்வார். 

நெசவுத் தொழிலுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்ட வேளையில், நல்ல நண்பனாக இருந்து கைத்தறிச் சாமான்களைக் கொடுத்து வந்த தன்னுடைய நண்பன் நசீரை ஒருகணம் எண்ணிப் பார்த்தார். தைப்பொங்கல், புதுவருடப் பிறப்பு, பெருநாட்கள் இவற்றுக்கெல்லாம் தேவையான கைத்தறி உற்பத்திகளை கொடுத்து உதவிய நண்பன் இந்த நேரத்தில் இல்லையே என்ற வேதனை அவருக்கு ஏற்பட்டது. 

பணம் வந்து விட்டாலும், கடந்து வந்த பாதையை எண்ணிப் பார்க்கும் போது மசூர் ஹாஜியார் கண்ணீர் விட்டு அழுவார். தனக்கு உதவிய நண்பனை பலரிடமும் விசாரித்து எப்படியாவது காணவேண்டும் என்ற ஆசையோடு இருந்தார். அவரால் கண்டு கொள்ள இயலவில்லை. இருந்தாலும் முயற்சியில் ஈடுபட்டார். 

வியாபாரம் களை கட்டி நடந்து கொண்டிருக்கும் போது, கும்பிட்ட தெய்வம் குறுக்கே வந்த மாதிரி நசீரைக் கண்டார். அவனை அன்போடு அழைத்தார். அவனால் இனம் காணவியலவில்லை. 

நசீர் இங்கே வா மச்சான் உன்ன எங்கே எல்லாம் தேடினேன். இன்டைக்குத்தான் அகப்பட்டாய்” கொஞ்சம் உன்னோடுபேசவேணும். 

நண்பனின் அழைப்பை ஏற்றுக் கொண்டு அவன் பேசியதை எல்லாம் மௌனமாகக் கேட்டுக் கொண்டு நின்றான். தன்னோடு ஒன்றாக இருந்து ஒன்றாகப் பழகி இருந்தவனின் நிலையை எண்ணிப் பார்க்கும் போது ஆச்சரியப்பட்டான். 

நசீர் என்ன செய்கிறாய் நெசவுத் தொழிலை விட்டுப் போட்டாயா, இல்ல இன்னும் செய்கிறாயா?  

‘புள்ள குட்டிகளுக்கு எப்படியாவது சோறு போடத்தானே வேணும், அதுமட்டுமா படிப்பு இதுக்கெல்லாம் கூலி வேலை’ செய்கிறன். 

‘அப்ப தறிகளை என்ன செய்து போட்டாய்’  

“ஒண்டு கிடக்கு மற்றதையெல்லாம் விற்றுப் போட்டன். சாமான்கள் வாங்கிப் போனவன் இன்னும் இல்ல, ‘ஏமாற்றிப் போட்டான். போட்ட முதல் இல்லாமற்போயிற்று.  

“நசீர் உனக்கிட்ட கிடக்கிற தறியில முதல் பாட்டுக்கு சாரம் நெசவு செய்து தா, நூல் இருக்கு முன்பணம் தாறன் தொழிலைத் தொடங்கேன்.’ 

வீசின கையும் வெறுங்கையுமாகப் போனவர், நூல் கட்டோடு வருவதைப் பார்த்து மனைவி, மக்கள் எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.  

கேட்காமலே உதவி செய்தவனை எண்ணி நசீர் சந்தோசப்பட்டான். அவனைப் பற்றி பலரும் பலதையும் பேசியதை எல்லாம் உள்வாங்கியவன். அப்பேச்சில் உண்மை இல்லை என்பதை உறுதியாக நம்பினான். ஏனென்றால் மசூர் ஹாஜி நீண்டகால நண்பன். 

பல மாதங்களுக்குப் பின்னர் நசீரின் வீட்டில் நெசவு செய்யும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்துக்காரர் ஆச்சரியப்பட்டதோடு, சந்தேகக் கண் கொண்டு தப்பான பேச்சுக்களை உருவாக்கி விட்டார்கள். இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது வேலையை செய்தான். 

எத்தனையோ சொந்த பந்தங்கள் இருந்தும் உதவி செய்ய யாருமே முன் வரவில்லை. வேதனைப்பட்டான். கண்கலங்கி நின்றான். மனைவி மக்கள் ஆறுதல் கூறினார்கள். யாரும் உதவவில்லையே என்பதற்காக அவர்களைப் பற்றி தவறாகக் கூட பேசாமல் இருந்தான். 

மசூர் ஹாஜியின் அன்பளிப்பால் கிடைக்கப் பெற்ற நூலைக் கொண்டு செய்யப்பட்ட நெசவுப் பொருட்களை அடிக்கடி கொடுத்துக் கொண்டே இருந்ததால் நசீர் மீது மேலும் நம்பிக்கை ஏற்பட்டது. 

எதிர்பாராத நிலையில் ஏற்பட்ட சுகவீனத்தால் நெசவுப் பொருட்களை தன் மகனிடம் கொடுத்து அனுப்பி வைத்தான். ஆச்சரியப்பட்டு பொருட்களை வாங்கிக் கொண்டு பணத்தையும் கொடுத்து புன்முறுவலோடு அனுப்பினார். அது மானசீக செயற்பாடு. 

இப்படி ஒரு மகன் இருக்கிறார் என்பதை முன் கூட்டியே நசீர் சொல்லாமல் விட்டானே என்று சொல்லி நசீரின் சுகத்தை அறிந்து கொள்ள   மனைவியோடு அவனுடைய வீட்டுக்குச் சென்றார். அவரைக் கண்டதும் பத்திப்பதறிப்போய் வரவேற்றார்கள். 

நண்பனிடம் சுகதுக்கங்களை விசாரித்தார். அப்போதெல்லாம் பழைய நினைவுகள் இழையோடின. தான் சுகம் இல்லாமல் அவமதிப்பட்ட வேளையில் அருகில் இருந்து ஆறுதல் சொல்லி தன் சொந்தப் பணத்தில் மருந்து எடுத்துக் கொடுத்த நன்றியை அவரால் மறக்கவே முடியவில்லை. நசீரும் இதையெல்லாம் சொல்லிக் காட்டவும் விரும்பாமல் இருந்தான். 

பழைய நண்பனாக இருந்தாலும், வாழ்க்கையில் மீண்டும் எழுச்சியடைய வைத்த மசூர் ஹாஜியாரிடம் நெசவுத் தொழில் சம்பந்தமாக பேசிக் கொண்டிருந்த வேளையில், அவனுடைய மகனே உபசாரம் செய்தான். அப்போது மசூர் ஹாஜியாரின் மனம் எதையோ எண்ணியது. அவரும் தேவையுடையவராயிற்று. 

‘ஹாஜி என்னுடைய மகன் எல்லாவற்றையும் ஒருங்காகச் செய்கிறார். படித்து முடித்து விட்டு தொழில் ஒன்றை எதிர்பார்த்திருக்கிறார். அது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் வேறு ஏதாவது தொழில் செய்யத்தானே வேணும்’. 

கடந்து வந்த பாதையில் நசீர் செய்த உதவிகளை ஒருகணம் எண்ணிப்பார்த்தார் மசூர் ஹாஜியார். அதற்கு கைமாறாக எதைக் கொடுத்தாலும் போதாது என்ற மனோ நிலையில் இருந்தார். 

“சுற்றி வளைச்சுப் பேசாம நல்ல நேரத்தில் கேட்கிறான் ஹாஜி, உங்க மகளை என்னுடைய மகனுக்குத் திருமணம் செய்துவைக்க விரும்புகிறான் உங்களுடைய நிலை என்ன?” 

‘நல்ல முடிவைச் சொல்ல கொஞ்ச அவகாசம் வேணும் அதைக் கூடிய விரைவில் சொல்வதாகத் தெரிவித்து விட்டு விடை பெற்றுச் சென்றார் ஹாஜி. 

நசீர் சொன்ன விடயத்தை மகளிடம் எடுத்துச் சொன்னபோது, அவள் கண்  கலங்கினாள். பெற்​ேறாருக்குத் தெரியாமல் உள்ளத்தை யாரிடத்திலோ பறிகொடுத்து விட்டு, தவிக்கின்ற பிள்ளைகளை என்ன செய்யலாம் என்று மனைவியோடு கலந்துரையாடினார். 

‘மகள் உன்னுடைய எதிர்காலம் நல்லா இருக்க வேணும் கொஞ்சம் யோசித்து சொல்லு. நசீர் படித்தவன். பட்டம் பெற்றவன், ஒழுக்கமானவன், உழைக்கக் கூடியவன் இவற்றையெல்லாம் இழக்க விரும்புகிறாயா” வினயமாகக் கேட்டார். 

‘வாப்பா நான் விரும்பியவர் வெளிநாட்டுக்குப் போய் விட்டாராம். எப்ப வருவார் என்று தெரியாதாம். பலமுறை அவரோடு பேச முற்பட்டும் முடியவில்லையே. 

இதற்கிடையில் நசீரின் மகன் வாப்பாவோடு மனம் விட்டுப் பேசி, “இப்படிப்பட்ட பெண்ணை நான் திருமணம் செய்தால் நாளைக்கு ஊரார் என்ன சொல்லுவாங்க.” 

அவனுடைய பேச்சில நியாயம் இருந்ததை வாப்பா ஒப்புக் கொண்டார். பெற்ற கடனுக்காக விட்டுக் கொடுக்க வேண்டி நின்றார். மகனும் எல்லாவற்றையும் இழந்து மௌனமானாள். 

மகளைத் திருப்திப்படுத்த பல முயற்சிகளில் ஈடுபட்டாலும் மசூர் ஹாஜியாரால் முடியாமல் போனது துக்கத்தோடு எல்லாம் நல்லவையாக நடக்க இறைவனிடம் பிரார்த்தித்தார். அப்போது வெளிநாட்டில் இருக்கின்ற மகளின் காதலன் வேறுஒரு பெண்ணத் திருமணம் செய்துவிட்டுப் போய் இருக்கிறான் என்ற செய்தி கிடைத்ததும், இப்போதாவது மகளின் மனம் மாறுமா/ என மனசுக்குள் கேட்டுக் கொண்டார். 

நசீரின் மகன் நல்ல வாட்டசாட்டமானவன் அழகானவன் என்பதையெல்லாம் நேரிலே கண்டாள். அவளும் நோக்கினாள். இடையிலே எல்லாவற்றையும் மறந்து இருவரும் புன்னகைத்துக் கொண்டார்கள்.” இப்படிப்பட்ட ஒருவரை வைத்து விட்டு வேறு ஒருவரை விரும்பியது எனது முட்டாள் தனம்தான்” என்று தகப்பனிடம் சொன்னாள். 

எல்லாம் சரியாகவே நடக்கும் என்ற நிலையில் இருவருடைய திருமண ஏற்பாடு நடைபெற்றது. பெற்றோர்களின் பெரும் கவலை நீங்கியது.

மசூர் ஹாஜியாரின் எளிய திருமணத்தில் மிகவும் சந்தோசமாக எல்லாரும் கலந்து சிறப்பித்தார்கள். நன்றிகள் எப்போதும் சாவதில்லை என்பதை நிரூபித்த நிலையில் மணமக்களை வாழ்த்திச் சென்றார்கள்.

கலாபூஷணம்
ஏ. எம். எம். பாறூக்
மருதமுனை

Comments