கிரேக் செப்பலை முந்தினார் ஆஸியின் ஸ்டீவ் ஸ்மித் | தினகரன் வாரமஞ்சரி

கிரேக் செப்பலை முந்தினார் ஆஸியின் ஸ்டீவ் ஸ்மித்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் அவ்வணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர்கள் வரிசையில் 35ஆண்டுகளின் பின்னர் சாதனை படைத்துள்ளார்.  

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி அங்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 3போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 296ஓட்டங்களினால் வெற்றி பெற்றிருந்த நிலையில் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி (26) மெல்பேர்னில் ‘பொக்சிங் டே’ (Boxing day) டெஸ்ட் போட்டியாக ஆரம்பமாகியது.  இப்போட்டியில் ஆட்டழிக்காது துடுப்பெடுத்தாடிய ஸ்டீவ் ஸ்மித் முதல் நாளில் 39ஓட்டங்களை கடந்த போது டெஸ்ட் அரங்கில் 7,111ஓட்டங்களை பூர்த்தி செய்தார். இதன் மூலம் அவுஸ்திரேலிய அணி சார்பாக டெஸ்ட் அரங்கில் அதிக ஓட்டங்கள் பெற்றவர்கள் வரிசையில் 35ஆண்டுகளின் பின்னர் கிரேக் செப்பலை முந்தியுள்ளார்.  

1970ஆம் ஆண்டு டெஸ்ட் அறிமுகம் பெற்ற கிரேக் செப்பல் 1984ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதில் 87டெஸ்ட் போட்டிகளில் 24சதங்கள், 31அரைச்சதங்களுடன் மொத்தமாக 7,110ஓட்டங்களை குவித்தார்.

தற்போது இதனை ஸ்டீவ் ஸ்மித் 35வருடங்களின் பின்னர் கடந்துள்ளார். மேலும் அவுஸ்திரேலிய அணி சார்பாக அதிக டெஸ்ட் ஓட்டங்கள் குவித்த வீரர்கள் வரிசையில் ஸ்டீவ் ஸ்மித் 10ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.   2010ஆம் ஆண்டு டெஸ்ட் அறிமுகம் பெற்றுக்கொண்ட ஸ்டீவ் ஸ்மித் இதுவரையில் 72டெஸ்ட் போட்டிகளில் 26சதங்கள், 28அரைச்சதங்களுடன் மொத்தமாக 7,149ஓட்டங்களை குவித்துள்ளார்.

சர்வதேச ரீதியில் அதிக டெஸ்ட் ஓட்டங்களை குவித்த வீரர்கள் வரிசையில் ஸ்மித் 48ஆவது இடத்தில் காணப்படுகின்றார்.  

நடைமுறையில் காணப்படுகின்ற டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் 911தரவரிசை புள்ளிகளுடன் ஸ்டீவ் ஸ்மித் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லிக்கு அடுத்தாக இரண்டாமிடத்தில் காணப்படுகின்றார். 

அவுஸ்திரேலிய - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் (26) ஆரம்பமான பொக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது ஒரு சாதனை மிக்க போட்டியாக நடைபெறுகின்றது. இதற்கு முன்னர் இறுதியாக 1987ஆம் ஆண்டு இரு அணிகளுக்கு இடையிலும் பொக்சிங் டே டெஸ்ட் போட்டி நடைபெற்றது.   

இதன் பின்னர் தற்போது 32 ஆண்டுகளுக்கு பின்னர் இரு அணிகளுக்கும் இடையில் பொக்சிங் டே டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. 32 ஆண்டுகளின் பின்னர் என்பதன் காரணமாக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் குறித்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் மைதானத்திலும் பெருமளவிலான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.   

Comments