பி. லங்கேஷின் சிறுகதைகள் | தினகரன் வாரமஞ்சரி

பி. லங்கேஷின் சிறுகதைகள்

தென்னிந்திய திராவிட மொழிக்  குடும்பத்தில் கன்னட மொழியும் ஒன்றாகும். கன்னட மொழியில் சிறுகதையின் செவ்விய இலக்கணம் பொருந்து படி சிறுகதைகளை எழுதியவர், கன்னடச் சிறுகதையின் தந்தை என்று அழைக்கப்படும் ‘மாஸ்தியே’ ஆவார். இவர் தென்னிந்தியாவின் சமூக வாழ்வின் குற்றங்களையும், துன்பம் மற்றும் தொல்லைகளையும் தனது சிறுகதைகளில் வெளிப்படுத்தியுள்ளார்.  

இவருடைய சிறுகதைகள்  1998இல் ‘ஒரு கல்கரையும் நேரம்’ என்னும் சிறுகதைத் தொகுப்பாக வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இத் தொகுப்பில் பி. லங்கேஷின் ‘தாகம்’,‘நன்றி’,‘ ஒருகதவு’, ‘காணாமல் போதல்’, ‘தீண்டப்படாதவன்’, ‘கூடப்படித்தவன்’, ‘எரிந்த ஊர்க்காரர்கள்’,‘ மரத்தின் தொழில்’,‘ தோட்டக்காரன்’, ‘கல்கரையும் நேரம்’, ‘ஸ்டெல்லா என்கின்ற பெண்’,‘ தேவி’, ‘சுபத்திரா’ என்னும் பதின்மூன்று சிறுகதைகள் அடங்கியுள்ளன.  

இச்சிறுகதைகள் சமூகச் சார்பானதாக அமைந்துள்ளன. அந்தவகையில் குடும்ப உறவு சார்பானதாகவும், பெண்களின் பிரச்சினைகள், சாதி ஏற்றத்தாழ்வு, பொருளாதாரப் பிரச்சினைகள் என்பவற்றை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளன. குடும்பத்தில் கணவன், மனைவி ஆகிய இருவரும் பரஸ்பர ஒற்றுமையுடன் வாழும்போது இடைநடுவில் ஏற்படும் திடீர் விபத்துக்கள் காரணமாக கணவன் மனைவியையோ, மனைவி கணவனையோ இழக்க நேரிடும்போது அவர்கள் வேறொருவரைத் திருமணம் செய்துகொள்வது இயல்பானது, அதனிலும் மனைவியை இழந்த ஆண்கள் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்வதென்பது சமூகத்தில் அதிகமாக இடம்பெறுகின்றது. ஆனால் பி. லங்கேஷ் ‘தாகம்’ என்னும் சிறுகதையில் இளமைப் பருவத்திலே தனது மனைவியை இழந்த கணவன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்யாமல் தனிமையில் வாழ முற்படுவதையும், தனக்கு மரணமே நிலையானது என்ற உணர்வுடன் வாழ முற்படுவதையும் வெளிப்படுத்தியுள்ளார். 

பெண்களின் பிரச்சினைகளைப்பற்றி நோக்கும்போது, பாலியல் ரீதியான பிரச்சினைகள், சீதனப் பிரச்சினைகள், புலம்பெயர்ந்து வாழும் பெண்கள் அனுபவிக்கும் பிரச்சினைகள் ஆதரவற்ற பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்பன வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

பெண்கள் திருமணத்திற்கு முன்பும், பின்பும் ஆண்களால் பாலியல் ரீதியான பிரச்சினைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இதனால் பெண் இதிலிருந்து விடுபட்டு தனக்கான ஒரு அடையாளத்தையும், நிரந்தரமான தொழிலையும் பெற்றுக்கொள்ள முயலும் முற்போக்கான சிந்தனையை ‘எரிந்த ஊர்க்காரர்கள்’, ‘ஸ்டெல்லா என்கின்ற பெண்’ என்ற சிறுகதைகள் வெளிப்படுத்தியுள்ளன. சான்றாக ‘ஸ்டெல்லா என்கின்ற பெண்’ என்ற சிறுகதையில் வரும் ஸ்டெல்லா தனது கணவனின் பாலியல் வன்முறையிலிருந்து விடுபட்டு வைத்தியசாலையில் தாதியாக பணிபுரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

பெண்கள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்ய முடியாமல் தனியாக வாழ்ந்து விடுவார்கள். இதனால் குறித்த குடும்பமும் குறிப்பாக பெற்றோரும்  வேதனையுடன் வாழ்கின்றனர். இவ்வாறான சூழ்நிலையில் வாழும் ஒரு பெண் தனது பெற்றோருக்கு தன்னால் துன்பம் ஏற்படுவதாகக்கருதி தனது வீட்டிலுள்ள தென்னை மரத்தை தனது கணவனாகப் பாவனை செய்து கொண்டு அதனருகே தனது வாழ்வைக் கழித்து பின்னர் அதனருகே இறந்தும் விடுகின்றதொரு நிலையை ‘மரத்தின் தொழில்’ என்னும் சிறுகதை வெளிப்படுத்தியுள்ளது. இதனூடாக சீதனப் பிரச்சினையால் பெண்கள் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டதொரு நிலையில் வாழ்ந்துள்ளதை  பி. லங்கேஷ் வெளிப்படுத்தியுள்ளார்.  

திருமணம் என்ற பெயரில் பெற்றோர் பெண்களின் கல்வியை இடைநிறுத்தி விட்டு புலம்பெயர் நாட்டில் வாழும் வயோதிபருக்கோ அல்லது நோய்வாய்ப்பட்டவருக்கோ குறித்த பெண்ணை திருமணம் செய்து விடுகின்றார்கள்.

இதனால் திருமணம் செய்யப்பட்ட பெண்கள் அந்த ஆண்களுக்கு அடிமையாகவோ அல்லது வேலைக்காரியாகவோ வாழவேண்டிய நிலை ஏற்படுகிறது. நோயாளியான கணவன் இறந்தால் விதவையாக வாழவேண்டிய நிலையும் ஏற்படுகின்றது. இவ்வாறானதொரு நிலையை ‘சுபத்திரா’ என்னும் சிறுகதை வெளிப்படுத்தியிருப்பதைக் காணலாம். சுபத்திரா கல்லூரியை இடைநிறுத்தி விட்டு அமெரிக்காவில் வாழும் நோயாளியை திருமணம் செய்கிறாள். சிறிது காலத்தின்பின் கணவன் இறந்ததும் தனது குழந்தைகளுடன் விதவையாக வாழுகின்றாள்.  

சிறுவர்கள், முதியவர்கள் பாதுகாக்கப்படவேண்டியவர்கள். ஆனால் ஆதரவற்ற வயோதிபப் பெண் ஒருவர் தனது வயது முதிர்ந்த காலத்தில் இளஞரைப்போல் உடலை வருத்தி வேலைசெய்து வாழ்வது அவலமான நிலையாகும். இவ்வாறானதொரு நிலையை பி.லங்கேஷ் ‘ஒருகதவு’ என்னும் சிறுகதையில் இடம்பெறும் ‘சென்னம்மா’என்னும் பாத்திரத்தினூடாக வெளிப்படுத்தியுள்ளார். தனது வீட்டிற்கு கதவு ஒன்றை பொருத்துவதற்கு பிறரிடம் கையேந்தாமல் வெயிலிலும் கொத்தனுக்கு கல் சுமந்து கொண்டுசென்று அதிலிருந்து கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஒரு கதவை  தாயாரிக்க முயல்கின்றார். இவ்வாறு பல வகைகளிலும் பெண்கள் துன்பங்களை அனுபவித்துள்ளதை பி.லங்கேஷ் தனது சிறுகதைகளில் வெளிப்படுத்தியுள்ளார்.  

சாதிப்பிரச்சினை பற்றி நோக்கும்போது உயர்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், முதலாளி, தொழிலாளி என்னும் வர்க்கம் கட்டமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். சமூகத்தில் உயர்த்தவர்கள் எனச்சொல்லப்படுவோர் தாழ்த்தப்பட்ட சாதியில் இருந்து உதவிகளைப் பெறுவதையோ, திருமணம் செய்வதையோ விரும்பாத நிலையே காணப்பட்டுள்ளது. இந்நிலையை மாற்றி பி. லங்கேஷ் சாதிக்கட்டமைப்பை இல்லாதொழிக்க முயல்வதைக் காணலாம்.  

அந்தவகையில் ‘தீண்டப்படாதவன்’ என்னும் சிறுகதையில் பஸஸிங்கன் கண்நோயால் துன்பப்படும்போது தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த கண்வைத்தியரிடம் சென்றால் அந்நோய் குணமாக்கப்படும் என்பதை அறிந்தும் அவரிடம் செல்ல மறுக்கின்றான். எனினும் இறுதியில் அவரிடம் சென்றால்தான் அந்நோயை குணப்படுத்த முடியும் என்பதை உணர்ந்து அவரிடமே சென்று வைத்தியம் செய்து தனது நோயை குணமாக்குகின்றான். சாதி ஏற்றத்தாழ்வை இல்லாததொழிப்பதை இச்சிறுகதை வெளிப்படுத்தியுள்ளது.  

அதேபோன்று ‘கல்கரையும் நேரம்’ என்னும் சிறுகதையில் சாதிவெறி பிடித்த தனது தந்தையையும் மீறி தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த திப்பண்ணனை சியாமளா திருமணம் செய்கிறாள். இறுதியில் அவளது தந்தையும் அதை ஏற்றுக்கொள்கிறார். இவ்வாறு சாதி ஏற்றத்தாழ்வை இல்லாதொழிப்பதை இவரது சிறுகதைகளில் காணலாம்.  

அதிகளவான சொத்துக்களைச் சேர்த்து மனநிம்மதி இழந்தும், பிறர்மீது பொறாமை கொள்ளவதையும் தவிர்த்து அளவோடு சொத்துக்களைச்சேர்த்து பிறருக்கும் கொடுத்து மனநிம்மதியோடு வாழ வேண்டும் என்ற சிந்தனையை ‘தோட்டக்காரன்’ என்னும் சிறுகதையில் வெளிப்படுத்தியுள்ளார்.  பி.லங்கேஷ் தனது சிறுகதைகளில் சமூகம் சார்பான விடயங்களையும் அத்தோடு சாதி மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நீக்க வேண்டும் என்ற சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் தனது சிறுகதைகள் வெளிப்படுத்தியிருப்பதைக் காணலாம்.  

சிவராசா ஓசாநிதி, 
தற்காலிக உதவி விரிவுரையாளர், 
மொழித்துறை கிழக்குப் பல்கலைக்கழகம்

Comments