60 வருடகால விளையாட்டுத் துறை அமைச்சு; சுகததாச முதல் டலஸ் வரை | தினகரன் வாரமஞ்சரி

60 வருடகால விளையாட்டுத் துறை அமைச்சு; சுகததாச முதல் டலஸ் வரை

கடந்த 60வருடகால வரலாற்றில் எமது நாட்டில் விளையாட்டுத்துறை அமைச்சை வீ. ஏ. சுகததாச, கே. பி. ரத்நாயக்க, வின்சன்ட் பெரேரா, நந்தா மெத்திவ், எஸ். பி. திசாநாயக்க, மங்கள சமரவீர, லக்ஷ்மன் கிரியெல்ல, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ஜீவன் குமாரதுங்க, காமினி லொக்குகே, சீ. பி. ரத்நாயக்க, மஹிந்தானந்த அளுத்கமகே, நவீன் திநாநாயக்க, தயாசிறி ஜயசேகர, பைசர் முஸ்தபா, ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் பொறுப்பேற்றிருந்தனர். 

கடந்த ஐந்து தசாப்தங்களாக அமைச்சர்களின் பெயர்கள் மாறினாலும் அமைச்சுப் பொறுப்புகளளின் சேவைகள் ஒரே மாதிரியாகவே அமைந்திருந்தது. இன்று அப்பெயர் மாறி டலஸ் அழகப்பெரும, கல்வி, இளைஞர் விவகார அமைச்சுடன் விளையாட்டுத்துறையும் இணைந்து சக்திமிக்க அமைச்சராக கடமையைப் பொறுப்பேற்றுள்ளார். 

இவர் கடந்த வாரம் இலங்கை அபிவிருத்தி நிறுவக கேட்போர் கூடத்தில் பத்திரிகையாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.  

பதினைந்தாவது பாராளுமன்றத்தில் இறுதிக்காலகட்டத்தில் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் விளையாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டவரே டலஸ் அழப்பெரும, இவர் ஆரம்பத்தில் ஒரு பத்திரிகையாளராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் தற்போது அரசியல்வாதியானாலும் அவர் ஆரம்பத்தில் செய்து வந்த பத்திரிகைத் தொழிலை இன்னும் நேசிப்பதாகக் கூறியுள்ளார். 

நேர்மையான அரசியல்வதி எனப்பெயர் எடுத்த அழகப்பெரும தான் எடுத்த பொறுப்பை சரியாகச் செய்யக்கூடியவர். பத்திரிகையாளர்களுக்கு இவருடன் சுமுகமான முறையில் தமது கடமைகளைச் செய்யக்கூடியதாக இருக்கும். புதிய அமைச்சரிடம் நேரம் தவறாமையையும் நாம் கண்ட ஒரு சிறந்த பண்பாகும். கடந்தவாரம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது சரியாக 7மணிக்கே ஆரம்பமாகவிருந்தது. அமைச்சர் சரியாக 7மணிக்கு வந்திருந்தார். ஆனால் அக்கூட்டத்துக்கு பத்திரிகையாளர்கள், அதிகாரிகள் தாமதமானதால் சற்று தாமதித்தே கூட்டம் ஆரம்பித்தது. அமைச்சருக்கு விளையாட்டைப் பற்றிய அதிகமான தெளிவு இல்லாவிட்டாலும், அவை பற்றிய பிரச்சினைகளைத் தெளிவாகத் தெரிந்து வைத்துள்ளார். மேலும் அவரைச் சந்தித்த ஊடகவியலாளர்களின் தொழில் ரீதியிலான சிக்கல்கலுள்ளதை உணர்ந்து கொண்டார். விளையாட்டை முன்னேற்றப்பதையில் இட்டுச் செல்லும் போது விளையாட்டின் குணாம்சங்களும் முன்னேற்றமடைய வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்படத்தக்கது. தேசிய ஒலிம்பிக் குழு, பல்கலைக்கழக பீடம் போன்ற நிறுவனங்களை பயன்படுத்தி விளையாட்டுடன் தொடர்புடைய ஊடகவியலாளர்களின் தொழில் வளர்ச்சிக்கு விளையாட்டு அமைச்சரால் உதவ முடியும். ஊடகவியலாளர்களுக்கு தேசிய, சர்வதேச ரீதியில் மேலதிக கல்வி கற்கவும், பயிற்சி பெறுவதற்கான சந்தர்ப்பம் வழங்கவும் அமைச்சர் முன்வரவேண்டும். அப்போதுதான் திறமையான விளையாட்டு விமர்சகர்களை உருவாக்க முடியும். விளையாட்டு தொடர்பான காத்திரமான விமர்சனங்கள் விளையாட்டின் வளர்ச்சிக்கு உதவும். தற்போதைய விமர்சகர்கள் போட்டி ஆரம்பமாகும் போது ஒரு விமர்சனம், தொடர் முடிவடைந்ததும் ஒரு விமர்சனம், மற்றும் இடையிடையே விளையாட்டு தொடர்பிலான அதிகாரத்தில் இருக்கும், அதிகாரம் இழந்த, அதிகாரத்துக்கு வர முனைபவர்களது செய்திகளை மட்டுமே வெளியிடுவதனாலும், விளையாட்டு தொடர்பான ஆழமான சிந்தனை, தர்க்க ரீதியான காரணங்களை முன்வைக்கும் சந்தர்ப்பங்கள் அநேக விளையாட்டு நிருபர்களுக்கு இல்லாமல் போகின்றன. இவைகளை மாற்றியமைப்பதற்கான திட்டங்களை செயற்படுத்துவதற்கு புதிய விளையாட்டு அமைச்சருக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் விளையாட்டின் முன்னேற்றத்துக்கு ஆசீர்வாதமாக அமையும். 

மேலும் இங்கு விளையாட்டு என்றால் கிரிக்கெட் மட்டுமல்ல. மற்றைய விளையாட்டுகளையும் முன்னேற்ற கரிசனையுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிரிக்கெட்டை போன்றே மற்றைய விளையாட்டுகளுக்கும் நிதி ஒதுக்கும் போதும், அடிப்படை வசதிகளை திட்டமிடும் போதும் தற்போது உள்ள நடைமுறையினைத் தவிர்த்து ஏனைய விளையாட்டுக்களுக்கும் தோள்கொடுக்க புதிய அமைச்சரால் முடியும் என நாம் விசுவாசிக்கிறோம். 

கடந்த காலங்களில் இலங்கைக்கு ஒலிம்பிக் பதக்கமொன்றை வென்றெடுப்பதற்கான அடித்தளத்தை இட்டவர்களின் முன்னாள் அமைச்சர் எஸ். பி. திசாநாயக்கவின் வகிபாகம் முக்கியமானது. அவரின் அமைச்சு காலத்தில் ஹேமசிறி பெர்னாண்டோ, சுனில் குணவர்தன, மணிலால் பெர்னாண்டோ, சுனில் ஜயந்த, நவரத்ன, யோகானந்த விஜேசூரிய போன்ற சிறந்த விளையாட்டு அதிகாரிகளை உருவாக்கி ஒவ்வொரு விளையாட்டின் முன்னேற்றத்துக்காகவும் பல திட்டங்களை முன்னெடுத்தவர். எல்லா விளையாட்டுக் கழகங்களுக்கும் அனுசரணையாளர்களைப் பெற்றுக் கொடுத்ததோடு, விளையாட்டின் முன்னேற்றம் கருதி போட்டிகளை ஒளிபரப்புவதற்காக ஊடகவியலாளர்களுக்கு போக்குவரத்து வசதி உட்பட பல வசதிகளையும் செய்துகொடுத்தார். விளையாட்டு வீரர்களுக்கு வீடு, வாகனம், மாதாந்த வேதனம் பெற்றுக்கொடுத்து வீரர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவினார். வீரர்களுக்கு வெளிநாட்டு பயிற்சியாளரின் உதவி தேவைப்பட்டால் அவ்வசதியையும் செய்துகொடுத்தார். மேலும் பெரும் ஊதியத்துடன் கூடிய ஒலிம்பிக் பயிற்சி கூடமொன்றை அமைத்து சிறந்த மெய்வல்லுநர் வீரர்கள் உருவாகியது எஸ். பி. திசாநாயக்கவின் அமைச்சுக் காலத்திலாகும். 

அதற்குப் பின் வந்த எல்லா விளையாட்டுத்துறை அமைச்சர்களும் எஸ். பி. திசாநாயக்கவை முன்மாதிரியாகக் கொண்டு சேவை செய்ய எத்தனித்தாலும் குறுகிய கால இடைவெளிக்குள் அமைச்சில் மாற்றம் ஏற்பட்டதால் தொடர்ந்து அப்பதவியில் நீடித்து சிறந்த சேவை செய்ய ஒருவராலும் முடியாமற் போனது. மஹிந்தானந்த அளுத்கமகே எஸ். பி.யின் யுகத்தை நினைவூட்டக் கூடிய வகையில் சில சேவைகளைச் செய்தாலும் சில அதிகாரிகளின் அரசியல் விளையாட்டு காரணமாக விமர்சனத்துக்குள்ளானார். 

அதன் பின் தயாசிறி ஜயசேகர, பைசர் முஸ்தபா, ஹரீன் பெர்னாண்டோ சில முன்னேற்றகரமான வேலைகளைச் செய்தாலும் பின்னாளில் விமர்சனங்களுக்குமுள்ளாகினர்.  

முன்பை விட உள்நாட்டு, வெளிநாட்டு பயிற்சியாளர்கள், மைதானங்கள் என அடிப்படை வதிகள் சற்று முன்னேற்றகரமாக உள்ளது. 

தற்போது பொறுப்பு புதிய அமைச்சர் டலஸ் அழகப்பெருவின் கைக்கு மாறியுள்ளது. அவரின் வேலை தற்போது சற்று இலகுவாகியுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள மைதானங்களில் சிந்தடிக் தடகள ஓடுபாதையை அமைக்க முடியாவிட்டாலும் குறைந்தளவு மாகாணத்துக்கு ஒன்று வீதம் 200 மீற்றர் தூர ஓடுபாதையை அமைப்பதற்கு முதலிடமளிக்க வேண்டும். அப்போதுதான் எதிர்வரும் வருடங்களில் சிறந்த வீரர்களை உருவாக்க முடியும். விளையாட்டு ஊடகவியலளர்கள் என்ற வகையில் நாம் 12 விளையாட்டு அமைச்சர்களின் செய்திகளைச் சேகரித்துள்ளோம். 13வது விளையாட்டு அமைச்சராக நீங்கள் செயற்படுத்தப் போகும் சிறந்த திட்டங்களை விமர்சிக்க நாங்கள் திறந்த மனதுடன் காத்திருக்கின்றோம்.

Comments