இலங்கைக்கு புதிய ஆண்டில் வெற்றியா? தடுமாற்றமா? | தினகரன் வாரமஞ்சரி

இலங்கைக்கு புதிய ஆண்டில் வெற்றியா? தடுமாற்றமா?

கடந்த வருடங்களைப் போன்று இலங்கை அணியின் தடுமாற்றம் இவ்வருடமும் தொடர்கின்றது. புதிய ஆண்டின் ஆரம்பத்திலும் இலங்கை அணியை ஒரு நிலைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அணித் தலைவர் முதல் அடிமட்ட வீரர்கள் வரை தமது திறமையில் நம்பிக்கையிழந்துள்ளதால் இலங்கை அணியை வெற்றியின்பால் கொண்டு செல்வதில் சிக்கல்களைக் கண்டுவருகிறது.  

மலிங்கவினால் அணியை ஒற்றுமையாக ஒருங்கிணைத்து சிறப்பாக வழி நடத்த முடியவில்லை என்ற பாரிய குற்றச்சாட்டு தொடர்ந்தும் முன்வைக்கப்படுகிறது.  

மலிங்க சிரேஷ்ட வீரர்களுடனான கடும் முறுகல் நிலையில் இருப்பதால் அணிக்குள் மோதல் போக்கு அதிகரித்து வருவதுடன், அணியை சரியான திசைக்குக் கொண்டு செல்ல முடியாமலுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

இந்தியாவில் முடிவுற்ற தொடரில் இந்நிலைமை தெளிவாகத் தெரிந்தது. மலிங்கவால் தலைமைப்பதவியைச் சரியாக செய்ய முடியாத நிலை ஏற்பட்டதுடன் இரு போட்டிகளிலும் அவரால் சிறப்பாகப் பந்து வீசவும் முடியவில்லை. இரு போட்களிலும் 81ஓட்டங்களை கொடுத்திருந்த அவரால் ஒரு விக்கெட்டைக் கூட கைப்பற்ற முடியவில்லை. 

இந்த நிலையில் மலிங்க உடனடியாக தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார் என செய்திகள் வெளிவந்த நிலையில், கிரிக்கெட் சபை எடுக்கும் எந்த முடிவையும் தான் ஏற்றுக்கொள்வதாகவும் மலிங்க தெரிவித்துள்ளார். இவருக்குப் பதிலாக தலைவர் பதவிக்கு கடந்த காலங்களில் இளம் வீரர் தசுன் சானகவின் பெயர் முன்மொழியப்பட்டாலும் பாகிஸ்தான் தொடருக்குப் பின் அவரது திறமையும் குறிப்பிடத்தக்களவுக்கு இல்லை. எனவே இது குறித்துத் தேர்வுக் குழுவும் தீவிரமாக ஆலோசித்து வருகின்றது. இலங்கை அணி தற்போது சிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருவதால் இத்தொடர் முடிவிலேயே ரி/20தலைவராக லசித் மலிங்கவையே தொடர்ந்தும் வைத்திருப்பதா அல்லது புதிய தலைவரை நியமிப்பதாக என முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குழுவிளையாட்டுகளில் வெற்றி பெறுவதற்கு அணி என்ற வகையில் திறமை, ஒற்றுமை ஆகிய இரண்டும் முக்கியமானது என வரலாற்று வெற்றிகள் சான்று பகிர்கின்றது. ஆனால் இலங்கை ரி/20அணியின் தலைவர் லசித் மலிங்க அணியின் ஒற்றுமை, உற்சாகப்படுத்தலால் வெற்றி பெற முடியாது திறமையே வெற்றிக்கு முக்கிய காரணமாகும் என பல ஊடகச் செய்திகளில் கூறியுள்ளார்.  

 1996ஆம் ஆண்டு இலங்கை கிரக்கெட் அணி உலகக் கிண்ணத்தை வென்றது புரிந்துணர்வுடனும் ஒற்றுமையுடனும் விளையாடியமையினாலாகும். அச்சமயம் எமது அணி மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. வீரர்களுக்கடையிலான புரிந்துணர்வினாலும், ஒற்றுமையின் காரணமாகவே எமக்கு இலகுவாக கிண்ணம் வெல்ல முடிந்தது என்று ஒரு முறை அர்ஜுண ரணதுங்க கூறியிருந்தார்.

ஆனால் இவ்வருடம் ரி/20உலகக் கிண்ணத் தொடருக்கு தயாராகும் இலங்கை அணியில் சிறந்த வீரர்கள் இருந்தாலும் புரிந்துணர்வையும் ஒற்றுமையையும் காண முடியவில்லை. லசித் மலிங்கவும் தலைவர் என்ற வகையில் அணியின் ஒற்றுமையைக் கட்டியெழுப்ப எந்தவித நடவடிக்கைகளையும் எடுப்பதாகத் தெரியவில்லை. அதனால்தான் இலங்கை அணி ரி/20போட்டிகளில் தொடர்ந்து தோல்விகளையே கண்டு வருகின்றது. 2019ம் ஆண்டு மலிங்கவின் தலைமையில் நடைபெற்ற போட்டிகளில் 90வீதமானவை தோல்விடைந்துள்ளன.

சில வேளைகளில் அணியை விட தன்னை முன்னிலைப்படுத்த எத்தனிப்பதனால்தான் அணியில் ஒற்றுமை சீர்குலைகின்றது என சில வீரர்கள் நேரடியாகவே குற்றம்சாட்டிய சந்தர்ப்பங்களும் உண்டு. ஆப்கானிஸ்தான் போன்ற அணிகள் எம்மைவிட முன்னோக்கிச் செல்வதற்கு அணி வீரர்களிடையே உள்ள ஒற்றுமையே காரணமாகும். 

ரி/20போட்டிகளில் கடந்த பத்து வருடங்களில் இலங்கை பின்னடைவைச் சந்தித்தது 2015க்கு பின்னர்தான். 2010ம் ஆண்டு விளையாடிய 9போட்டிகளில் 5வெற்றிகளையும், 2011ம் ஆண்டு இலங்கை அணி பங்குகொண்ட 4போட்டிகளில் மூன்று வெற்றிகளையும் பெற்றன. 2012இல் 11போட்டிகளில் 5வெற்றிகளையும், 2013இல் 13போட்டிகளில் 6வெற்றிகளையும், 2014ம் ஆண்டு இலங்கை அணி ரி/20உலகக் கிண்ணத்தை வென்றதுடன் அவ்வருடத்தில் 9போட்டிகளில் விளையாடிய இலங்கை அணி ஒரு போட்டியில் மாத்திரமே தோல்வியுற்றது. அச்சமயம் இலங்கை அணி சர்வதேச தர வரிசையிலும் முன்னிலைபெற்றிருந்தது. 2015ம் ஆண்டிலிருந்துதான் இலங்கை அணி இவ்வகைப் போட்டிகளில் பின்னடைவைச் சந்திக்க ஆரம்பித்தது. அவ்வாண்டு நடைபெற்ற 4போட்டிகளில் ஒரு போட்டியில் மாத்திரமே இலங்கை அணி வெற்றிபெற்றது. 

2016ம் ஆண்டாகும் போது இலங்கை ரி/20போட்டிகளில் கடுமையான பின்னடைவைச் சந்தித்தது. அவ்வாண்டு நடைபெற்ற 16போட்டிகளில் 13இல் தோல்விகைளைச் சந்தித்தது இலங்கை அணி. அதே போல் 2017இல் 15போட்டிகளில் 10தோல்விகளையும், 2018ம் ஆண்டு 50வீத வெற்றிகளைப் பெற்று சாதாரண வளர்ச்சியை இலங்கை அணி கண்டிருந்தாலும் சர்வதேச ரி/20தரவரிசையில் 9இடத்துக்குப் பின்தள்ளப்பட்டதோடு இவ்வருடம் நடைபெறவிருக்கும் உலகக் கிண்ணத் தொடரில் தெரிவுப் போட்டிகளில் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

கடந்த வருடம் கூட இலங்கை அணி இவ்வகைப் போட்டிகளில் 13போட்டிபளில் 8இல் தோல்வியுற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கை அணி 5வருடங்களுக்கு முன் தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றிந்தாலும் அதன்பின் தொடர்ந்து தோல்வகளைச் சந்தித்ததால் இவ்வாண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கிண்ணத் தொடரில் தெரிவுப் போட்டியில் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை இலங்கை அணி மொத்தம் 123ரி/20போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 59தோல்விகளைச் சந்தித்துள்ளது. வெற்றி சராசரி 49வீதமாகும்.  

50ரி/20போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ள அணிகளில் கூடிய சராசரியைப் பெற்றுள்ள நாடு ஆப்கானிஸ்தானாகும். கிரிக்கெட் உலகின் கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தான் அணி ரி/20போட்டிகளில் சிறந்த அணியாக விளங்குவதற்குக் காரணம் அவ்வணியின் திட்டமிடலும், ஓர் அணியாக இருந்து விளையாடுவதுமாகும். அவ்வணி அதுவரை 78போட்டிகளில் விளையாடி 53வெற்றிகளைப் பெற்றுள்ளது. அதன் சராசரி வெற்றி வீதம் 68ஆகும். இரண்டாவது இடத்தில் 64சராசரியைப் பெற்று இந்திய அணியும், பாகிஸ்தான் 62, அவுஸ்திரேலிய 55, நியூசிலாந்து 52வெற்றி சராசரியைப் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 

ரி/20உலகக் கிண்ணத் தொடர் நெருங்கிவரும் இவ்வேளையில் சக வீரர்களுடன் புரிந்துணர்வுடன், அணியின் ஒற்றுமையை வளர்த்தெடுக்கக்கூடிய நேர்த்தியான ஒரு தலைவரை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் உள்ளது. 

இவ்வருடமும் இலங்கை அணி தோல்வியுடனேயே கிரிக்கெட் போட்டிகளை ஆரம்பித்துள்ளது. அண்மையில் இந்திய மண்ணில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ரி/20போட்டித் தொடரில் முதல் போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டது. அடுத்து இரு போட்டிகளிலும் போராடாமலேயே இலங்கை அணி தோல்வியைச் சந்தித்தது. பந்து வீச்சிலும் துடுப்பாட்டத்திலும், ஒரு வீரர் கூட பொறுப்புடன் ஆடவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

எம்.ஐ.எம். சுஹைல்

Comments