காவலர்கள் | தினகரன் வாரமஞ்சரி

காவலர்கள்

“இந்த ஊரிலுள்ள சில மனிதர்களைப் போலத்தான் இங்கேயுள்ள நாய்களுக்கும் பெரிதாக வாய்கள் இருக்கிறது. கட்டுப்பாடில்லாமல் எல்லா வீட்டிலும் போய் போய்த் தின்றுவிட்டு வீதிகளில் நின்றபடி கண்களை மூடிக்கொண்டு குரைக்கிதுகள் இந்தச் சனியன்கள்” 

அந்த வீதி கடக்குமட்டும் இதே பேச்சை திரும்பத் திரும்ப நினைவில் எடுத்துப் பேசிக்கொண்டே அவருக்குப் போக வேண்டிய நிலைமை இருந்தது. தொண்டனைக் குழியால் இருந்து கிழிபடுகிறதாய் வெளியேறும் அந்தக் குரைப்புச் சத்தங்கள் தணியமட்டும் முளைத்திருக்கும் பயத்திலிருந்து விடுபடுவது அவருக்கு இலகுவானதாக இருக்கவில்லை. 

காலை நேரத்திலேயே இப்படி தொந்தரவு என்றால் செய்யும் வேலையின் கடமை நேரம் முடிந்து இரவின் மங்கலான மின் வெளிச்சத்தில் அந்த வீதியாலே நடந்து வீடு போய்ச் சேருமட்டும் அவருக்கு எப்படியாக இருக்கும்? 

“நீ எங்கு செல்கிறாயோ அந்த இடம் மட்டும் உன் பின்னாலே நாங்களும் தொடர்ந்து வருவோம்” என்கிறதான கண்காணிப்போடு அவரைப் பின் தொடர்ந்தவாறு குரைப்புச் சத்தத்துடன் வந்து, அவர் தன் வீட்டுப் படியேறு மட்டுமாய் கஷ்டம் கொடுத்துவிட்டுத்தான் பிறகு அந்த நாய்கள் திரும்பிப் போகின்றன. 

அந்த வீதி வழியாக கோட்டும் சூட்டுமாக சப்பாத்துக் கால்களின் பயப் பதட்டமில்லாத நடையுடன் அந்த நாய்களுக்குப் பக்கத்தாலே எத்தனையோ பேர் தினமும் போய் வருகிறார்கள். ஆனாலும் அந்த நாய்கள் அவர்களையெல்லாம் கண்டுவிட்டு எப்போதுமே எந்த வேளையிலும் குரைப்பதேயில்லை. 

அந்த வீதியிலே ஒரு ஒதுக்குபுறமான இடமொன்று உண்டு. அந்த இடத்தைச் சுற்றி பற்றைச் செடிகள் அடைத்தது போல் ஒளிவான இடமாக மறைப்பும் கூட இருந்தது.

இந்த இடத்துக்குப் பக்கத்திலே அந்த நாய்களின் கூட்டமானது அனேகமாக எந்நேரமும் நிற்கும். ஆனாலும் இந்த இடத்திலே வந்து பதுங்குவது போல அங்குமிங்கும் பார்த்துவிட்டு அதற்கு உள்ளே போய் நிற்கும். ஆண்கள் எவரையும் பார்த்து அந்த நாய்கள் குரைப்பதேயில்லை. அந்த நாய்களுக்கு ஏன் அவர் மேலே இப்படியானதொரு தணியாத கோபம்? ஏன் அவை அவரைக் கண்டமாத்திரத்தில் அச்சம் கொண்டு குழம்புகின்றன. 

கருணை கலந்த பார்வை கொண்ட முகமல்லவா அவருக்கு. அமைதி உறைந்து விளங்கும் கோலமான இந்த மனிதர் மேலே அவைகளுக்கு ஏன் இந்த வெறுப்பு? அதற்கும் காரணம் தான் என்ன? 

அவர்  காக்கி நிறத்திலே ஒரு யூனிபோம் போட்டிருக்கிறார் என்பது தான் அவற்றின்  வெறுப்புக்கு  முதற் காரணம். அவர் போட்டிருக்கும் யூனிபோமில் என்னென்ன டிசைன்கள் உள்ளன என்று பார்த்தார், அவரின் தோளின் மேலே கருடச் சிறகு போன்று இருபக்கங்களிலும் நிறப் பட்டிகள் இருக்கின்றதானது ஆணவமாய் அவைகளின் கண்களுக்குத் தெரிகின்றன. அவரின் இடுப்புப் பட்டியிலே முன்னால் உள்ள அகல தகரத்திலே குஞ்சுத் தவளை மாதிரி ஒரு உருவ அமைப்பு உட்கார்ந்து இருப்பதாகவும் அவற்றுக்குத் தெரிகின்றன. காலில் அவர் போட்டிருக்கும் சப்பாத்தும் அவற்றுக்கு திகைப்பைக் கொடுக்கின்றன. இவர் ஒரு நிறுவனத்திலேதான் வேலை செய்கிறார். அங்கே இவர் காக்கி உடை அணிந்த காவலாளி. “காக்கி நிற துயிலே கீறிய பச்சைக் கோடுகள் போன்று வடிவமைக்கப்பட்ட இந்த உடுப்புத்தான் எமது நிறுவன அலுவலக காவலாளிக்கு எடுப்பாகவும் இருக்கும் “என்று இந்த நிறுவனத்தினர் தைக்கப்பட்ட அந்த யூனிபோமை அவருக்கு அணிந்துகொள்ள கொடுத்திருக்கிறார்கள். அவருக்குரிய வேலை என்னவென்றால், அந்த நிறுவனத்துக்கு வருகிறவர்களுக்கு அந்தக் கண்ணாடிக் கதவை தன் கைகளால் திறந்து விட்டு கொண்டே இருப்பது. அதனால் அந்த பிடி கம்பியில் அவரது விரல்களின் ரேகையும் தொடர்ந்து மாறி மாறிப் பதிந்து கொண்டே இருக்கும்.  “முன்  எப்போதோ கடந்து போய்விட்ட என் மூதாதையரின் பழி பாவத்தை நான் இப்போது சுமப்பதால்தானா இந்த வேலை எனக்குக் கிடைத்திருக்கிறது” என்றும் அவர் சில பொழுது நினைத்து இதனால் மனமும் வருந்துவார். அவர் திறந்து விடும் அந்த கதவு விரிவு வழியாக வேகமாக உள்ளே எத்தனையோ விதம் விதமான மனிதர்கள் போகிறார்கள். ஆனாலும் அங்கு சந்திக்கும் மனிதருடன் அவருக்கு ஒரு கதை கூட பேசவே முடியவில்லை. எல்லா பாஷைகள் பேசும் மனிதர்களும் அந்த ஒரே கதவுக்குள்ளாலேயே கூட்டமாகவும் நுழைந்து பின்பு படிகள் வழியாக அங்கே ஏறிப் போகின்றனர். இதையெல்லாம் தன் விழிப்பந்தில் ஏந்தியதாய் நின்ற நிலையிலேயே அன்றைய நாளைக் கழித்துச் சலித்துப் போனவர் வேலை முடிந்து வீட்டுக்கும் போகும் போது கூட நடந்து கொண்டு சுதந்திர சுகத்தை அனுபவிக்க முடியாமல் இந்த நாய்களாலே மிக கஷ்டத்தைதான் அனுபவிக்கிறார். ஒரு நாய் குரைத்துக் கொண்டு அருகில் வரும்போது அதைப்பார்த்துக் காறித்துப்பினால் பின்பு அது குரைக்காதாம்! கடிக்க நெருங்காதாம்! என்று நிலைத்திருக்கும் அறிவுரையானது இவருக்கும் கூடத்தெரியும். ஆனாலும் அப்படி தனித்த நாய் ஒன்றுக்குத்தானே அவர் இந்தத் தடுப்பை வைத்து அதன் சேட்டையை நிறுத்தலாம். அப்படி இல்லாமல் இங்கே கும்பலாக வந்ததல்லவா அவரைச் சூழ வந்து நின்று நாய்கள் குரைக்கின்றன. இந்தக் கூட்டுக் குடும்ப குரைப்புகளிலே எந்தெந்த நாயைப் பார்த்து அவருக்கு தன்னைக் காப்பாற்றிக்கொள்ள எச்சில் “தூத்து” என்று துப்பமுடியும். இந்த சைக்கோ சிகிச்சை ஒரு நாய்க்கு அல்லது இரண்டு நாய்க்கு அடங்குகிற சிகிச்சையாக சிலவேளை பயன்படலாம். ஆனால் கும்பல் நாய்க்கு எச்சில் துப்பப்போய் அது வயிற்று வலியைத்தான் பரீட்சார்த்தத்தில் அவருக்கு முன்னம் ஒரு நாள் கொண்டு வந்ததாயும் இருந்தது. ஓரிரண்டு நாய்க்குத் தான் இந்தவிதமான செயலான மனோ சக்தியினதும் கண்ணிலிருந்து வெளிப்படும் காந்த சக்தியினதும் செயல்பாடு சேர்ந்து தாக்கி உடன் கட்டுப்படுத்தலை சித்திக்கப் பண்ணும். எனவே இந்த முறையான செயல்பாடும் அவருக்குப் பலனளிக்காததினால், வீடு மூச்சோடு பயத்தில் வேர்த்துச் செல்லும் நாட்களாகவே கழித்து கொண்டிருக்கும் காலமெல்லாம் இனிதே அவருக்கு போய்க் கொண்டிருக்கிறது. 

சுழன்று செல்லும் பூமியிலே வாழும் மனிதனின் செய்கைகள் தலைகீழாய்ப் போய் பெரும் மாற்றம் ஏற்பட்டு விட்டாலும் நாய்கள் தங்கள் பார்வையையும் தங்களுக்குண்டான கடமை உணர்வையும் இன்னும் மாற்றிக் கொள்ளாது நேர்மையை தங்களிடத்தில் காப்பாற்றிய வண்ணமே இருந்து கொண்டிருக்கின்றன. “உலகையே காக்கும் உண்மையான காவலாளிகள் நாங்கள்தான்!” என்று தங்கள் கடமையின் ஆணவக் குணத்தையும் அவை  காப்பாற்றியே வருகின்றன. தங்கள் காவல், கடமை தங்களுக்கென்றே உலகில் உரித்தானது என்று அவை உரிமையும் கொண்டாடுகின்றன. “மனிதன் மறைத்து ஒளித்துச் செய்யும் குற்றச் செயல்களையெல்லாம் கண்டு பிடிக்கும் திறமையும் அதற்கேற்ற தகுதியும் இந்த மனிதர்களை விட எங்கள் இனத்துக்கு மட்டுமே உண்டு” என்று அவை மார்தட்டிய நிலையிலும் இருக்கின்றன. ஆறறிவு படைத்த மனிதனும் இந்த விஷயத்திலே எங்கள் உதவியைத்தானே உடனே நாடுகிறான். ஆகவே எங்களுக்கு தனித்துள்ள திறமைச் சக்தி மனிதருக்குக் கூட இல்லை என்றும் சாம்பல் மேட்டில் படுத்தப்படி அவை சிந்திக்கதான் செய்கின்றன. தெரு நாய்கள் எல்லாவற்றிற்கும் இந்த ஊரையே நாங்கள் காவல் காக்கிறோம் என்ற கொழுப்பு உணர்வு இருக்கிறது. வீட்டு நாய்கள் தங்கள் மட்டுப்படுத்தப்பட்ட காவல் கடமையை செய்து கொண்டு மிகுதி காவல் கடமை அனைத்தையும் தெருநாய்களிடத்தே தான் “நீங்களே அவற்றை செய்யவேண்டியவர்கள்” என்பதாக கையளித்து விடுகின்றன. இந்த நிலைமையிலே “நாய்களை எதிர்த்து போராடுகின்ற நிலைமை இனிமேலும் எனக்கு வேண்டவே வேண்டாம்!” என்று இவருக்கும் நல்ல யோசனை மூளைக்குள் கதிர்வீசத்தொடங்கிவிட்டது. அந்த நாய்களின் ரகசிய எண்ணங்களையும் மற்றைய மனிதர்களில் அவற்றுக்கு  இருக்கும் கணிப்பையும் கண்டு கொண்டு அவர்,  இப்போதே சிந்திக்கத் தொடங்கி விட்டார். “நாய்களின் கண்களில் கொதிக்கின்ற வெறுப்புச் சூடு அணைய வேண்டுமென்றால் நான் என்ன செய்ய வேண்டும்? எப்படிதான் மாற வேண்டும்?” என்று இந்த விஷயத்தையும் நன்கு அவர் யோசித்தார். அப்படி யோசித்ததில் தீர்மானமாக இந்தவேலையில் இருந்து விலகி விட வேண்டுமென்பதான் அவர் இப்போது கடைசியாக எடுத்த முடிவு. 

இதற்காக அந்த நிறுவனத்திலுள்ள தன் தொழிலை விட்டு விலகி வேறு தொழிலொன்றை இப்போது அவர் செய்யத் தொடங்கிவிட்டார். அப்பாடா அவருக்கு இப்போது மேக மூட்டம் வந்து, அடித்துக் கொண்டிருந்த உறைப்பான வெயில் தணிந்தது போன்று மனசெங்கும் நல்லதொரு ஆறுதல். அந்த யூனிபோமை அந்த வேலையோடேயே தொலைத்ததாய் விட்டதில் அவருக்குள்ள சந்தோஷம் அளப்பரியதாக இருந்தது. இப்போது அவர் அணிகின்ற ஆடைகளிலே பழைய யூனிபோமின் எச்சங்கள் சிறிது கூட இல்லை. 

அவரை தம் எதிரியாக பார்த்த நாய்களும், இப்போது இது வரை தங்களிடமாக இருந்த செயல் முறையை மாற்றிக் கொண்டு நிசப்தமாகிவிட்டன. அவற்றின் கண்களின் கோபச் சூடு தணிந்து விட்டன. அவரைக் கண்டால் “ஒரு பிரச்சினையுமில்லை!” என்பது போல அவை இப்போது முகம் திருப்புகின்றன. அந்த நாய்களெல்லாம் இப்போது நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு வீணியை வழிய விட்டப்படி ஆறுதலாகவும் அமைதியுடனும் இருக்கின்றன.

நீ.பி.அருளானந்தம்...?

Comments