விளையாட்டு வீரர்கள் விளையாட்டுத் துறையை நேசிக்க வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

விளையாட்டு வீரர்கள் விளையாட்டுத் துறையை நேசிக்க வேண்டும்

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவர் எம்.ஐ. அப்துல் மனாப்

உங்களை பற்றிய கூறுங்களேன்:-

கல்முனைப் பிரதேசத்தின் பிரபல சமூக சேவையாளர் உதுமாலெப்பை முஹம்மது இஸ்மாயிலுக்கும் அலியார் மூத்த பிள்ளை ஆகியோருக்கும் 1964.04.08ஆம் திகதி 11வது பிள்ளையாக நான் பிறந்தேன். ஆரம்பக்கல்வியை கல்முனை மிஸ்பா மகாவித்தியாலயத்தில்  1971 ஆம் ஆண்டு ஆரம்பித்தேன். பின்னர் 1972 ஆம் ஆண்டு கல்முனை சாஹிரா கல்லூரியில் இணைந்துகொண்டு உயர்தரம் வரைக்கும் அங்கேயே கல்வி கற்றேன். உயர்தரத்தில் கணித பிரிவில் கல்வி கற்ற போதிலும் விளையாட்டு துறையில் அதிக ஆர்வத்தோடு செயற்பட்டேன்.

விளையாட்டு துறையில் உங்களுக்கு ஆர்வம் எப்படி வந்தது?

விளையாட்டுத்துறையில் என்னுடைய ஆர்வம் சிறுவயதில் இருந்து வந்த ஒன்று. பாடசாலைக் காலங்களில் நான் பாடசாலைக்குச் செல்லும் முன்னர்  விளையாட்டு மைதானத்துக்கு சென்று  விளையாடுவது வழக்கமாக இருந்தது. பாடசாலை விட்டதும் விளையாடிவிட்டுத்தான் வீட்டுக்கு வருவேன். பெரியவர்கள் விளையாடுகின்ற இடங்களுக்குப் போய் அவர்களுக்கு பந்தை புறக்கிக் கொடுப்பேன். அப்போது  சில நேரங்களில் பெரியவர்கள் விளையாடுவதற்கு ஆட்கள் தேவைப்படுகின்ற போது அல்லது சிலர் விளையாடி முடித்துவிட்டு போகின்ற போது அந்த இடத்திற்கு என்னை போட்டு விளையாடுவார்கள்.

1978இல் "11 தங்கப் பறவைகள்" என்ற ஒரு கழகத்தை ஆரம்பித்து நானும் எனது நண்பர்களும் விளையாட ஆரம்பித்த பொழுது 1979ம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி கல்முனை சனிமவுண்ட் விளையாட்டுக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது  அந்த கழகத்தில் இணைந்து விளையாட ஆரம்பித்தேன். அதன் பின்னர் அந்த கழகத்தில் 10 வருடங்களாக அணித்தலைவராகவும் பின்னர்  செயலாளராகவும் இருந்து வழிநடத்திக் கொண்டு வருகின்றேன்.

அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் செயலாளராகவும்  கடமையாற்றுகின்றீர்களே இது பற்றி கூறுங்கள்?

அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தில் நான் செயலாளராக வந்தது ஒரு தற்செயலான சம்பவமாகும். அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கம் ஆரம்பிக்கப்பட்டது முதல் எமது சனிமவுண்ட் விளையாட்டு கழகத்தின் பிரதிநிதி என்ற வகையில் அங்கத்தவராகதான் இருந்து வந்தேன். 2011ஆம் ஆண்டு நிர்வாகத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழல் காரணமாக நான் செயலாளர் பதவியை ஏற்றுக் கொண்டேன்.  2012 ஆம் ஆண்டு ஒரு நிர்ப்பந்தத்தின் அடிப்படையில்  நான் செயலாளராக தெரிவு செய்யப்பட்டேன். அன்று முதல் இன்று வரை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்திற்கு செயலாளராக இருந்து என்னால் முடியுமான பங்களிப்புக்களை செய்து வருகின்றேன்.

அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட துறையின் போக்கு இப்போது எப்படி இருக்கிறது?

மாவட்டத்தைப் பொறுத்தளவில் 32 உதைபந்தாட்ட கழகங்கள் உள்ளன. "ஏ" டிவிசன் விளையாடுகின்ற 10 கழகங்களும் "பி" டிவிசன் விளையாடுகின்ற 22 கழகங்களும் விளையாடி வருகின்றன.  இவை தவிர நான்கு கழகங்கள் புதிதாக விண்ணப்பித்துள்ளன. நடுவர் சங்கம்  ஒன்றும் செயல்பட்டு வருகின்றது.

அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தளவில் விளையாட்டு மைதானங்கள், விளையாட்டு வீரர்களுக்கு உரிய தொழில் வாய்ப்பு போன்ற மிக முக்கியமான பிரச்சினைகள் காணப்படுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தளவில் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக விளையாட்டு வீரர்களுக்கு தொழில் வாய்ப்புகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தளவில்  விளையாட்டு துறைக்கு பங்காற்றி வருகின்ற வீரர்களுக்கு உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக  தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அதேபோன்று விளையாட்டு மைதானங்கள் மிகமோசமாக காணப்படுகின்றன. மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு தடவை புதிய காலணிகள் தேவைப்படுகின்றன. ஒரு காலணி வாங்க  3000/- தொடக்கம் 4000/-  வரை தேவைப்படுகிறது.

எனவே இங்குள்ள மைதானங்களை செப்பனிட்டு உதைபந்து விளையாடுவதற்கு பொருத்தமான மைதானமாக அபிவிருத்தி செய்ய வேண்டும். இந்த விடயம் சம்பந்தமாக இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவருடைய கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறேன்.
எதிர்காலத்தில் அதற்கான நடைமுறைகளை சாத்திய படுவதற்கான சூழல் காணப்படுகின்றது. விளையாட்டு வீரர்களுக்கு தேவையான காலணிகள் விளையாட்டுத்துறை அமைச்சு ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தின் உப தலைவராக நீங்கள் தெரிவு செய்யப்பட்டு இருக்கிறீர்கள். இந்த பதவி ஊடாக எதனை சாதிக்கலாம் என்று நினைக்கின்றீர்கள்?

இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தின்  உப தலைவர்களில் ஒருவராக நான் தெரிவு செய்யப்படுவன் என்று எனக்குத் தெரியாது. நான் அப்படி எண்ணியிருக்கவில்லை. இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவர் அனுர டி சில்வா எனக்கு தொலைபேசி ஊடாக தொடர்பு ஏற்படுத்தி நீங்கள் 'Council Meeting' வர வேண்டும் உங்களை உப தலைவராக தெரிவு செய்து இருக்கிறோம் என்ற தகவலை எனக்கு வழங்கினார். செயலாளர் அவர்களும் எனக்கு தெரியப்படுத்தினார். இந்தப் பதவிக்கு நான் ஒரு தகுதியற்றவன் என்று நினைக்கவில்லை. உதைபந்தாட்ட துறையில் சுமார் 40 வருட அனுபவம் எனக்கு இருக்கிறது. இந்த அனுபவத்தின் ஊடாக எனக்கு கிடைத்திருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி அம்பாறை மாவட்டம் மாத்திரமல்ல பிராந்தியத்தினுடைய உதைபந்தாட்ட துறையை வளர்ச்சியடையச் செய்வதும் எனது நோக்கம் ஆகும்.

நான் விளையாட்டு துறையிலும் விளையாட்டு நிர்வாகத்துறையிலும் இந்த அளவு உயர்வதற்கு என்னுடைய இரண்டாவது சகோதரர் எம்.ஜ அப்துல் ரவூப் வழங்கிய ஒத்துழைப்பை நான் பெரிதும் மதிக்கிறேன். அதேபோன்று அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல உதைபந்தாட்ட கழகங்கள் மற்றும் அதன் நிர்வாகத்தினர்  அனைவருக்கும் நான் நன்றியை தெரிவிக்கின்றேன். தற்போது ஏற்பட்டு இருக்கின்ற கொரோனா தோற்று நோயின் தாக்கம் குறைவடைந்ததும் இலங்கை மற்றும் சர்வதேச உதைபந்தாட்ட சங்கங்களில் உதவிகளை பெற்று பிராந்தியத்தின் உதைபந்தாட்ட துறையை முன் கொண்டு செல்வதற்கு  திட்டமிட்டிருக்கிறேன்.

விளையாட்டு துறைக்கு அப்பால் உங்களது சொந்த வாழ்க்கை பற்றி கூறுங்கள்

எனது சொந்த வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாகவே செல்கின்றது. 1995ஆம் ஆண்டு அப்துல் ஹமீத் சித்தி ஜுனைதா என்பவரை கரம் பிடித்தேன்.

என்னுடைய வாழ்க்கையில் தடைகள் இல்லாமல் ஒரு சிறப்பான பயணத்தையே தொடர்ந்து கொண்டிருக்கின்றேன். எனக்கு குழந்தைகள் இல்லாத போதும் எனது சகோதரர்கள் உடைய குழந்தைகளை என்னுடைய குழந்தையாகக்கருதி சொந்த வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. உயர்தரத்தில் கணித பிரிவில் கல்விகற்ற நான் வியாபாரத் துறையில் எனது தொழில் முன்னெடுப்புக்களை முன்னெடுத்து வருகின்றேன்.

அடுத்தவருக்கு தீங்கு விளைவிக்காமல் சமூகத்திற்கும் மற்றவருக்கும் எதையாவது செய்ய வேண்டும் என்பதே எனது எண்ணமாகும். எனது உடன்பிறப்புக்கள் உட்பட சமூக ஆர்வலர்கள் என பலரும் எனக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவது மகிழ்ச்சியை தருகிறது.

கல்முனை மாநகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறீர்கள். உங்கள் அரசியல் பிரவேசம் பற்றி கூறுங்கள்?

அரசியல் என்பது கூட எனது வாழ்க்கையின் ஒரு எதிர்பாராத நிகழ்வு. குறிப்பாக கல்முனை பிரதேசத்தில் சமூகங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் வந்தபொழுது முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை நாங்கள் சந்தித்தோம். அப்போது கல்முனை  பிரதேசத்தை பிரித்தாள வேண்டாம் என்று அமைச்சர் தெரிவித்தார். இனவாதம் அற்ற அவரது கருத்து வரவேற்கத்தக்கது. இதற்கு நன்றி தெரிவிக்க கடமைப் பட்டிருக்கிறோம். நன்றி தெரிவிக்கும் முகமாகவே உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நான் களமிறக்கப்பட்டேன்.

அரசியல் ரீதியாக சமூகத்திற்கு முடிந்தளவு உதவிகளைச் செய்து வருகிறோம். எனக்காக இல்லாமல் சமூகத்திற்கும் பிரதேசத்திற்கும் மற்றும் விளையாட்டுத் துறைக்கும் உதவி செய்யலாம் என்று நினைக்கின்றேன். இந்த சூழலில் அரசியலில் சிலரது குறுகிய மனப்பான்மையை கண்டு மனம் வருந்துகின்றேன்.

என்னால் முடிந்த உதவிகளை பலருக்கு செய்து இருக்கின்றேன். விளையாட்டு துறையை நேசித்தவன். அதற்காக தன்னை அர்ப்பணித்தவன் என் என்பதால்  இந்த துறையில் நீடித்திருக்க முடிந்தது. விளையாட்டுத்துறையில் இன்னும் பல சேவைகளை செய்வதற்கு இறைவன் சக்தியை தர வேண்டும் என்று பிராத்திக்கின்றேன்.

நேர்காணல்:- ஏ.எல்.எம் ஷினாஸ்
(பெரியநீலாவணை விசேட நிருபர்)

Comments